தமிழக பட்ஜெட் 2022: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடி நிதி ஒதுக்கீடு!
2022-23ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று காலை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் சட்டசபையில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, ஆகஸ்ட் 13-ம் தேதி திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்பிறகு, இந்த அரசு தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இது.
இந்த ஆண்டும் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உலக முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய மையமாக தமிழகம் இருப்பதால், உலக முதலீட்டாளர்களின் வசதிக்காக இந்த பட்ஜெட்டை அவர் ஆங்கிலத்தில் வாசித்தார்.
சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல், வேலை வாய்ப்பு அதிகரித்தல், கல்வி மட்டும் வாழ்வாதார மேம்பாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல், சமத்துவத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை அதிகரித்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதால், தொழில் சார்ந்த திட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தன.
தொழில்துறையில் பட்ஜெட் ஒதுக்கீடு விபரம் இதோ:
- சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி.
- புதிய காலணி மற்றும் தோல் தொழில் கொள்கை உருவாக்கப்படும்.
- தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும்.
- தமிழ்நாடு கயிறு தொழில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
- உள்நாட்டு , வெளிநாட்டு ஏற்றுமதியில் மதிப்பீட்டு பொருட்களை பிரபலப்படுத்த கோவையில் கைத்தொழில் மேம்பாட்டு குழுமம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம் அமைக்கப்படும்.
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களைக் கொண்டுசேர்க்கவும் அவர்களுக்கான சட்ட உரிமைகளைத் தெரிந்துகொள்ளவும், நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- போக்குவரத்துக்கு துறைக்கு ரூ.5375.51 கோடி ஒதுக்கீடு.
- எரிசக்தி துறைக்கு 19,297.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் சிறப்பு அறிவிப்புகள்:
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஸ்டார்ட் அப் (புத்தாக்க) நிறுவனங்களுக்கு என சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தழைத்தோங்க விரிவான திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
- தமிழ்நாட்டைச் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்வதற்கு ரூ.50 கோடியை வளர்ந்து வரும் தொழில்களுக்கான தொடக்க நிதிக்கு (seed funding) அரசு வழங்கும்.
- தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) டான்சிம் -இன் கிளை மையங்கள் ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் மண்டல அளவில் ஏற்படுத்தப்படும்.
- சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன்கூடிய மாநில புத்தொழில் நிறுவன மையம் ஒன்று அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் புதுமையான பொருட்களை ரூ.50 லட்சம் வரை அரசுத் துறைகளும், நிறுவனங்களும் நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) ரூ.30 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
- அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் பகுக்கக்கூடிய கொள்முதல்களில், ஐந்து சதவீதம் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த பட்ஜெட்டில்,
“சரக்கு மற்றும் சேவை வரி (GST) இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை விரைவில் முடிவடையவுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் இன்னமும் மாநிலங்களின் வருவாய் இயல்பு நிலைக்கு திரும்பாததால், அந்த இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்," என அமைச்சர் பி.டி.ஆர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு, ‘நாட்டின் வளர்ச்சியில் 10% பங்கை தமிழகம் அளிக்கிறது. ஆனால், அதற்கான நிதி கிடைப்பதில்லை. வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்பட வாய்ப்புள்ளதாக’ கூறிய அவர், ‘வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8%-லிருந்து 3.8% ஆக குறையும்,’ என்றார்.
‘ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 15வது குழுவின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்’ என தனது பட்ஜெட் உரையில் அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.