மனித நேயத்தால் கிடைத்த வீடு; சிறுவன் அப்துல் கலாமிற்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மதத்தை விட மனிதநேயத்தை உயர்வாக பேசியதால் வீட்டை காலி செய்ய வற்புறுத்தப்பட்ட சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கியுள்ளார்.
மதத்தை விட மனிதநேயத்தை உயர்வாகப் பேசியதால் வீட்டை காலி செய்ய வற்புறுத்தப்பட்ட சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கியுள்ளார்.
வைரல் சிறுவன் அப்துல் கலாம்:
கடந்த சில நாட்களாகவே சிறுவன் ஒருவர் “யாரையும் வெறுக்க கூடாது, ஏன் வெறுக்கனும்” என மனித நேயத்தின் மாண்பு குறித்து பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதோடு, பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. மனித நேயம் பற்றி சிறுவன் பேசுவதை கேட்டு பூரித்துப் போன இணையவாசிகள் அந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்தனர்.
பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பள்ளிச் சீருடையுடன் சிறுவன் ஒருவன் அளித்த பேட்டி, ஒட்டுமொத்த இணையத்தையும் மிரள வைத்தது. ‘ஒரு சின்ன பையன் மனித நேயம் பத்தி எப்படி பேசியிருக்கான்’ என வாழ்த்துக்கள் குவிந்தது.
இணையத்தில் வைரலான அந்த வீடியோவில்
“எல்லாரும் உலகத்துல சமம். நம்ப யாரையும் புடிக்காதுன்னு சொல்லக்கூடாது. இங்கு அனைவரும் நம்மை போன்றவர்கள் தான். சிலருக்கு இங்குக் கஷ்டம் இருக்கும். அவர்கள் கஷ்டத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே யாரிடமும் சொல்லாமல் கூட இருப்பார்கள். இங்கு யாரையும் பிடிக்காது என்று சொல்லக் கூடாது. இங்கு எல்லாரும் நம் நண்பர்கள் தான். என்னைக் கூட எல்லாரும் பல்லன் என்று கூறுவார்கள். இங்கு இருக்கும் எல்லாரும் நமக்கு நண்பர்கள் தான். நம் நாடு ஒற்றுமையான ஒரு நாடு! ஒற்றுமை இல்லாமல் நாம் இருக்கக் கூடாது. இங்கு மனித நேயம் பரவ வேண்டும். இல்லையென்றால், ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் போல நிறையப் பேர் தோன்றும் வாய்ப்பு உள்ளது. எனவே , அங்கு மனித நேயம் மிக முக்கியம்," என சிறுவன் பேசியிருந்தார்.
வைரல் வீடியோவில் தோன்றிய சிறுவனின் பெயர் அப்துல் கலாம். சென்னை கண்ணகி நகரில் தாய் திவ்யா என்கிற தில்ஷத் பேகம் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தில்ஷத் பேகம் கலப்பு திருமணம் செய்து கொண்டவர். மேலும் அப்துல் கலாமின் மாணவி என்பதால் தனது மகனுக்கும் அப்துல் கலாம் என பெயர் வைத்துள்ளார்.
வீட்டை காலி செய்ய வற்புறுத்தல்:
இணையத்தில் சிறுவன் அப்துல் கலாம் பேசிய வீடியோ வைரலான அதே சமயத்தில் அவனது வாழ்கையிலும் மதம் புகுந்து விளையாட ஆரம்பித்தது. மதத்தை விட மனித நேயம் பெரிது என சிறுவன் அப்துல் கலாம் பேசியதால், அவர்கள் வசித்து வந்த வீட்டைக் காலி செய்யச் சொல்லி உரிமையாளர் நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பல்வேறு கஷ்டங்களை சந்தித்த தில்ஷத் பேகம், வர்தா புயலின்போது வீட்டை பறிகொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இக்கட்டான சூழ்நிலையில் வசித்து வரும் தங்களை வீட்டு ஓனரும் காலி செய்ய சொல்லிவிட்டதால் எங்கே போவது என தெரியாமல் தவிப்பதாக கண்ணீர் விட்டு கதறினார்.
இதனிடையே, மனித நேயம் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாமை நேரில் சந்திக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்தது.
முதல்வருடன் வைரல் சிறுவன் அப்துல் கலாம் சந்திப்பு:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறுவன் அப்துல் கலாம் மற்றும் குடும்பத்தினர் சந்தித்தனர். சிறுவனை குடும்பத்துடன் நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது முதல்வரிடம் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என அப்துல் கலாமின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக சிறுவன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்துல் கலாமின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார்.
சிறுவன் அப்துல் கலாமிற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில்,
“மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டேன். நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும்,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மனிதநேயத்தால் கிடைத்த வீடு:
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் முடிவெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனுக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமிடம் இன்று வழங்கியுள்ளார்.
தலைமைச் செயலகத்திற்கு வெளியே பேட்டியளித்த அப்துல் கலாமின் தாயார்,
“மக்கள் கூட்டத்திற்கு இடையில் சிறிய கல் அளவிற்கு கூட இல்லாத எங்களை மகன் உலக அறியச் செய்திருக்கிறான். நாங்கள் அவனுக்கு எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. அவனது அனுபவத்தை வைத்தே பேசியிருக்கான். காதல் திருமணம் செய்த எங்களுடைய கஷ்டத்தை நேரில் பார்த்துள்ளான். அது அவன் மனதில் பதிந்துவிட்டது. ஜாதி, மதம் என்பது ஆண்டவனால் உருவாக்கப்படவில்லை. அனைவருமே ஒன்று என்பதை அவன் அனுபவத்தின் மூலம அறிந்து கொண்டுள்ளான்,” எனத் தெரிவித்துள்ளார்.