இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி முதல் சிறுவன் லோகித் வரை: வீரதீர செயலுக்கான ‘அண்ணா பதக்கம்’ வென்ற ஸ்டார்கள்!
2022ம் ஆண்டுக்கான வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் 8 பேருக்கு வழங்கி கெளரவித்தார்.
2022ம் ஆண்டுக்கான வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் 8 பேருக்கு வழங்கி கெளரவித்தார்.
இயற்கை பேரழிவுகள், விபத்து, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுதல், தீ விபத்துக்கள், தீவிரவாத தாக்குதல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுத்தல் போன்ற வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களை கெளரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் 'அண்ணா பதக்கம்' வழங்கி கெளரவித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது முதலமைச்சர் கையால் ஒரு பதக்கம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியன வழங்கபட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பதக்கத்தை பெற விண்ணப்பிக்க முடியும். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் நிச்சயம் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.
8 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்:
இந்த ஆண்டு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் அரசு ஊழியர் பிரிவில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, தீயணைப்பு படை வீரர் ராஜீவ் காந்தி, வனக் கால்நடை மருத்துவர் அசோகன் ஆகியோருக்கும், பொதுமக்கள் பிரிவில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தனியரசு, சிவகங்கையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், திருச்சியைச் சேர்ந்த சிறுவன் லோகித், திருப்பூரைச் சேர்ந்த சொக்க நாதன் மற்றும் சுதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இளைஞரை தோளில் சுமந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி:
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது பெண் காவலர் ஒருவர் உடல் நலம் குன்றி மயங்கி கிடந்த இளைஞர் ஒருவரை தோளில் சுமந்து கொண்டு மழை வெள்ளத்தில் நடந்து சென்ற காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்தபடி உடல் நலம் குன்றிய உதயா என்ற இளைஞர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சற்றும் யோசிக்காமல் அவரை தோள் மீது தூக்கிய ராஜேஸ்வரி, தேங்கி இருந்த மழை வெள்ளத்தைக் கடந்து நடக்க ஆரம்பித்தார். உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இளைஞரின் உயிரைக் காப்பாறினார்.
அன்றைய தினம் முழுவதுமே சோசியல் மீடியாவில் ராஜேஸ்வரியை பாராட்டதவர்களே கிடையாது எனலாம். அப்படி மக்கள் மனதில் மறக்க முடியாத அளவிற்கு துரிதமாக செயல்பட்டு இளைஞரின் உயிர் காத்த ராஜேஸ்வரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பதக்கம் வழங்கி கெளரவித்தார்.
திருவொற்றியூர் தனியரசு டூ சிறுவன் லோகித் வரை:
திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் பழைய குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக அங்கிருந்தவர்களை எச்சரித்து, பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைத்த தனியரசு, திருவெண்ணெய் நல்லூரில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்புப்படை வீரர் ராஜீவ்காந்தி, கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன், திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியைக் காப்பாற்றிய சிறுவன் லோகித் திருப்பூரில் நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன், சுதா ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
கோவையில் மத நல்லிணத்திற்காக பாடுபடும் முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு திருப்பூர் தெற்கு நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்திற்கும், மூன்றாம் பரிசு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கும் வழங்கப்பட்டது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.