31 ஸ்டார்ட்-அப்’களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி; 3 தொழில் மையங்கள் திறப்பு - TN Startup விழாவின் முக்கிய அம்சங்கள்!
31 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடை, மதுரை திருநெல்வேலி மற்றும் ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள்’ சந்திப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 2ம் தேதி நடைப்பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஒரு நாள் மாநாடு தொடங்கிவைக்கப்பட்டது.
விழாவில் பேசிய முதலமைச்சர், பல முக்கிய அறிவிப்புகளை செய்தார். தொடக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 5 லட்ச ரூபாய் நிதி, கம்யூனிட்டி, மதுரை திருநெல்வேலி மற்றும் ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் வட்டார ஸ்டார்ட் மையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அவருடன் தமிழக எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு புத்தொழில புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், சிவராஜா ராமநாதன், ISBA அமைப்பின் தலைவர் டாக்டர் கே.சுரேஷ் குமார், Startup India தலைவர் திருமதி அஸ்தா குரோவர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி
தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவன்ங்களுக்கும், அதன் நிறுவனர்களுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தகுதியான நிறுவனங்களுக்கு மானிய நிதியினை ‘தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி - TANSEED’ திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
டான்சீட்-இன் மூன்றாவது பதிபான TANSEED3.0- க்கு சுமார் 990க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில், 31 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதில் தேர்வு செய்யப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 31 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதல் கட்ட ஆதார நிதியாக தலா ரூ.5 லட்சம் வழங்கபட்டது. மொத்தம் ரூ.1.55 கோடி ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை முதலமைச்சர் நிறுவனர்களுக்கு வழங்கினார்.
இந்நிறுவனங்களில் சுமார் பாதிக்கும் (18) மேற்பட்ட நிறுவனங்கள் பெண்கள் நிறுவனர்களாக நடத்தப்படுபவை என்பது கவனிக்கத்தக்கது.
வட்டார புத்தொழில் மையங்கள்
இதுதவிர, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, பெருநகரங்களில் மட்டுமல்லாமல், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோட்டில் ‘வட்டார புத்தொழில்’ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக திறந்து வைத்தார்.
தொழில் முடுக்ககம் (Accelerator)
பல்வேறு துறை சார்ந்து இயங்கும் 100 புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சியை விரைவாக்க பயிற்சிகளை வழங்கும் 5 தொழில் முடுக்ககங்களை (Accelerator) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, வேளாண் தொழிலநுட்பம் மறறும் காலநிலை மேலாண்மை, வணிகத் தொழில்நுட்பம் / செயலிகள், வாழ்வாதாரம், சமூக மாற்றம், ஆகிய பல்வேறு தலைப்புகளில், ஒவ்வொரு பிரிவின் கீழும் 20 தொழில் முனைவோர் கொண்ட குழுவினை உருவாக்கி, ஒவ்வொரு குழுவிற்கும் 3 மாதங்களில் இருந்து 18 மாதங்கள் வரையிலான தொழில் முடுக்க பயிற்சி பட்டறைகளை ஒருங்கிணைக்க உள்ளது.

புத்தொழில் சமூகக் குழுக்கள்
தமிழ்நாட்டில் புத்தாக்க மற்றும் புத்தொழில் முயற்சிகள் அனைத்து பகுதிகளிலும் பரவலாக்க, பல்வேறு பங்களிப்பாளர்களை (Stake-holders) ஒருங்கிணைக்கும் வகையில் புத்தொழில் சமூகக் குழுக்கள் (Startup TN Community Circles) தொடங்கப்பட்டன.
”முதல்கட்டமாக 8 புத்தொழில் சமூகக்குழுக்களின கிளைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஸ்டார்ட் அப் அமைப்பில் இருக்கும் அனைத்து பங்குதாரர்களையும் இணைக்கும் வகையில் இந்த குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டது.”
விழா மேடைக்கு வருவதற்கு முன், 'தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள்’ மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்டிருந்த ஸ்டார்ட்-அப் ஸ்டால்களுக்கு சென்றுவந்தார் மு.க.ஸ்டாலின். விழாவில் அறிவிப்புகளுக்குப் பிறகு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“இந்த நிகழ்ச்சியில் பல நிறுவனங்களின் ஸ்டால்களை பார்த்தேன் பிரமிப்பாக இருக்கிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பதும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. தமிழகம் அனைத்து பிரிவுகளிலும் முன்னேறிவருகிறது. தொழில்துறையிலும் முன்னேறி வருகிறது. தொழில்புரிவதற்கு ஏற்ற மாநிலங்களில் 14-ம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாம் இடத்துக்கு வந்திருக்கிறது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து உருவாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. தவிர இந்தியாவில் தமிழகத்தில் இருந்துதான் அதிகளவில் தொழில் ஆக்சிலரேட்டர்கள் உள்ளன,” என்றார்.
தற்போது நடப்பதே மிகப்பெரிய மாநாடுதான். ஆனால் இதனைவிட பெரிய இரு மாநாடுகள் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் நடக்க இருக்கின்றன. ஒன்று தொழில்நுட்பம் தொடர்பான மாநாடு. மற்றொன்று ஸ்டார்ட் அப் தொடர்பான மாநாடு. இரண்டும் பெரிய அளவில் நடக்க இருகின்றன, என்றும் தெரிவித்தார்.
இதுதவிர, அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. 25,000 சதுர அடியில் இது அமைய இருக்கிறது. ஐஐடி ரிசர்ச் பார்க் போல பெரிய அளவில் இந்த மையம் செயல்படத் தொடங்கும். அதேபோல், நந்தனத்தில் டான்சிம் அலுவலகம் விரைவில் செயல்படத் தொடங்கும்.
”நாம் 2030-ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். அந்த இலக்கினை நாம் அடைவதற்கு ஸ்டார்ட் அப் துறையில் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என முதல்வர் பேசினார்.
தொழில் காப்பகங்கள் தரவரிசை வழிமுறை வரைவு வெளியீடு
தொழில் காப்பகங்களின் திறன் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மாநிலத்தில் இயங்கும் Incubator நிறுவனங்களுக்கான தரவரிசை வழிமுறை திட்ட வரைவை முதலமைச்சர் வெளியிட்டார். இது உலகத்தர நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் Maturity Model முறையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் நிகழ்வுகள்
இதனைத் தொடர்ந்து ஸ்டார்ட் அப் தொடர்பான பல கருத்தரங்குகள் நடைபெற்றன. இதில் முதலீட்டாளர் நாகராஜ பிரகாசம் தலைமையில் கலந்துரையாடல் பேனல் ஒன்று நடைப்பெற்றது.
”பலரும் ஸ்டார்ட் அப் என்று யோசித்தால் தோல்வி அடைந்துவிடுவோம் என்னும் பயம் இருக்கிறது. நம்மூரில் தோல்வி அடைந்துவிட்டால் அவ்வளவுதான். ஆனால், தற்போது நிலைமை மாறிவருகிறது. தோல்வி அடைந்தவர்களும் கருத்தரங்குக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்களின் கருத்தை மற்றவர்கள் கேட்கின்றனர். தோல்விக்குப் பிறகு வெற்றி அடையும்போது அந்த வெற்றி பெரியதாக இருக்கிறது. தோல்வி என்பது பெரிய விஷயமே இல்லை என்னும் நிலை உருவாகிறது,” என்றார்.
அதனைவிட பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் சுமார் 30 வயதில்தான் தொடங்குகின்றர். படித்து, வேலைக்கு சென்று சம்பாதித்த பிறகுதான் நடக்கிறது.
ஆனால், தற்போது இங்கும் சூழல் மாறிவருகிறது. படிக்கும்போதே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. படித்து முடிக்கும்போதே தொழில் நிலைமை என்ன என்பது தெரிந்துகொள்ள முடியும். தொழிலில் வாய்ப்பு இருந்தால் தொழிலில் இறங்கலாம். தோல்வி அடைந்தால் அடுத்தகட்டம் குறித்து யோசிக்கலாம். பல கல்வி நிறுவனங்கள் தொழில் மையங்களை உருவாக்கி வருகின்றன. மாணவர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனப் பேசினார்.
ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பில் இருந்து என்னென்ன உதவிகளை பெற முடியும் என்பது குறித்தும் அந்த அமைப்பின் உயரதிகாரி பேசினார்.
ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பு மூலமும் கிராண்ட் பெற முடியும். 3,500 ஸ்டார்ட அப் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கிராண்ட் கிடைக்கும். ஆனால் நேரடியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது. எதேனும் ஒரு இன்குபேட்டர் அமைப்பில் பதிவு செய்து அதன் மூலமே இந்த நிதி உதவியை பெறவேண்டும், என்றார்.
எங்களிடம் விண்ணப்பிப்பதற்கு Proof of concept, புரோட்டோடைப் என எதுவும் தேவையில்லை. ஒரு ஐடியா, அந்த ஐடியா எப்படி வெற்றிபெறும் என்பது மட்டுமே போதுமானதாகும். ஆனால் நிறுவனம் தொடங்கி இரு ஆண்டுகளுக்குள் மட்டுமே இந்த கிராண்ட் வழங்கப்படும், அதில் இந்தியர்களின் பங்கு 51 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மதியத்துக்கு மேல் முதலீட்டாளர்கள் பலரும் உரையாடினார்கள். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு குறைந்துவிட்டது என பலர் தெரிவித்தனர். ஆனால்,
“பல தரமான நிறுவனங்கள் தற்போது நிதி திரட்டிவருகின்றன என வென்ச்சர் இண்டெலிஜன்ஸ் அருண் நடராஜன் தெரிவித்தார். அனிகட் கேபிடல் ஐஏஎஸ் பாலமுருகன் பேசும்போது கடந்த 18 மாதங்களாக நடந்த முதலீடுகள்தான் இயல்புக்கு மாறானவை. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளது,” என பேசினார்.
தமிழகம் முழுவதும் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், இன்குபேட்டர் மையங்கள், தொழில்முனைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டனர்.
TANSEED3.0 31 நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி நிதி உதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடந்து டான்சீட் 4.0 அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. புதிய நிறுவனங்கள் விண்ணப்பித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கட்டுரை தொகுப்பு: இந்துஜா மற்றும் வாசு கார்த்தி