கிராமத்தில் இருந்து உலகத் தர பிராண்டை உருவாக்க அனுதினம் உழைக்கும் திருப்பூர் தினேஷ்!

நாட்டுச் சர்க்கரை தொடங்கி வெல்லம், பனங்கருப்பட்டி, வெல்ல உருண்டை, இந்துப்பு, மரச்செக்கு எண்ணெய், நெய், சுக்கு காபி... என்று பல பொருட்களை இவரின் தளம் மூலம் விற்பனை செய்கிறார்.

14th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

திருப்பூர் அருகே குன்னத்தூர் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் ரகுபதி. இவர் கோயமுத்தூரில் எம்சிஏ படித்தார். சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்த பிறகு அமெரிக்கா சென்று டெல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ஏழாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். ஐம்பதிற்கும் அதிகமான காப்புரிமைகள் உருவாக்கி, சுமார் 2 லட்சம் மாதச் சம்பளம் பெற்று வந்தார்.


அமெரிக்காவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தபோதும் வாழ்வில் ஒரு வெறுமை இருப்பதாக உணர்ந்தார் தினேஷ். அந்த சமயத்தில் விடுமுறைக்கு இந்தியா திரும்பி சொந்த ஊர் சென்றிருந்தார். அங்குள்ளவர்கள் வேலை கிடைக்காமலும் சரியான வழிகாட்டல் இல்லாமலும் அவதிப்படுவதைக் கண்டு, தன்னால் இயன்ற வகையில் உதவவேண்டும் என்று தீர்மானித்தார்.

“நான் கிராமத்தில் வளர்ந்ததால் என்னுடைய சொந்த ஊரின் நலனில் பங்களிக்க விரும்பினேன். என்னுடைய பகுதியில் வசதிகள் குறைவாக இருப்பினும் நிறைந்த மனதுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். அதுமட்டுமின்றி 100 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய முன்னோர்கள் எங்கள் ஊரில் வசித்து வந்துள்ளனர். நான் சொந்த ஊருக்குத் திரும்ப அப்போது முடிவெடித்தேன்,” என்றார்.
தினேஷ்

தினேஷ் ரகுபதி - ‘7 dinam' நிறுவனர்

சர்வதேச அளவில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால் ஏற்றுமதி வணிகம் சார்ந்து செயல்படுவது குறித்து தினேஷ் சிந்தித்தார். ஆரம்பத்தில் சீனாவில் இருந்து சிறியளவில் இறக்குமதி செய்து தொழில் செய்தார். அந்த சமயத்தில் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைக் குறித்தும் டெல்லியில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் தெரிந்துகொண்டார்.

“நான் அவர்களுக்கு உதவ விரும்பினேன். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவுவதைக் காட்டிலும் நீண்ட கால அடிப்படையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் நிலையான ஆதரவு அமைப்பை உருவாக்க விரும்பினேன்,” என்றார்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தினேஷ் ஆய்வு செய்தார். விவசாயிகளின் பொருட்களுக்கு சரியான தேவை இருப்பதில்லை. அவர்களிடமிருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு சரியான நபர்கள் கிடைப்பதில்லை. இதுபோன்று பல்வேறு சிக்கல்கள் இருப்பதை கவனித்தார். எனவே விவசாயிகளை ஆதரிக்கவும் சந்தையில் தேவையை உருவாக்கவும் நல்ல விலையில் விற்பனை செய்யவும் உதவும் வகையில் ஒரு நிறுவனத்தை அமைக்கத் தீர்மானித்தார்.


அதேபோல் நுகர்வோர் தரப்பிலும் பிரச்சனைகள் காணப்பட்டது. நுகர்வோருக்கு சந்தையில் தரமான, கலப்படமில்லாத பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் வெளிநாட்டு பிராண்டுகள் அல்லது வெள்ளை சர்க்கரைக்கு மாறுகின்றனர். எனவே உயர் தரமான இந்திய பிராண்டை தினேஷ் உருவாக்க விரும்பினார்.

உதாரணத்திற்கு பனங்கருப்பட்டியின் நன்மைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே இதன் நன்மைகளை மக்களிடையே கொண்டு சேர்த்து அதேசமயம் ஏற்றுமதி தரத்திலான பொருட்களை நுகர்வோர்களுக்கு வழங்கவும் முடிவு செய்தார்.

நிறுவன பெயர் உருவானது எப்படி?

“நாங்கள் இயற்கையான உணவுப் பொருட்கள் சார்ந்து செயல்படத் தீர்மானித்தபோது நிறுவனத்திற்கான பெயர், லோகோ குறித்து கலந்துரையாடினோம். நண்பர் ஒருவர் ‘தினம்’ என்கிற வார்த்தையைப் பரிந்துரைத்தார். எங்களது தயாரிப்புகள் மூலம் தினமும் வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம் என்பதன் அடிப்படையில் அந்த வார்த்தையைத் தேர்வு செய்தோம்.

“வாரத்தின் ஏழு நாளும் என்பதை உணர்த்தும் வகையில் 7 என்கிற எண்ணை இணைத்துக்கொள்ளத் தீர்மானித்தேன். இப்படித்தான் ‘7தினம்’ என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி விவசாயிகள் மற்றவர்களுக்காக இரவு பகல் பாராமல் தொடர்ந்து உழைக்கின்றனர் என்பதால் அவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எங்கள் லோகோ வடிவமைக்கபட்டது,” என்றார் தினேஷ்.

லோகோ வடிவமைத்தபோது விவசாயியை அதில் இணைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். புதுமையான பிராண்ட் பெயரும் லோகோவும் மக்கள் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றுள்ளது.

dinam

'7dinam' லோகோ

நுகர்வோர்களுக்கு ஏற்றுமதி தரத்திலான சிறந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்காக 7DINAM நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. 7தினம் எக்ஸ்போர்ட்ஸ் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. www.7dinam.com என்கிற டொமெயின் பெயரில் பதிவு செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது. தொடக்கத்தில் தினேஷ் அமெரிக்காவில் இருந்தே சொந்த ஊரில் ஒரு சிறு அலுவலகத்தை அமைத்து, இந்திய செயல்பாடுகளை நிர்வகிக்க ஒரே ஒரு ஊழியரை பணியிலமர்த்தினார்.


உணவு வணிகத்தில் பரிச்சயமில்லாத காரணத்தால் தரம், உரிமம், விற்பனை, சந்தை, கணக்கியல் போன்ற பல்வேறு பகுதிகளைக் கையாள்வதில் சவால்களை சந்தித்துள்ளனர். இருப்பினும் சர்வதேச அளவில் செயல்பட்ட அனுபவம் இவற்றை எதிர்கொள்ள உதவியது.

பிராண்ட் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கவும் தனித்துவமாக செயல்படவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“நாட்டு சர்க்கரை தொடங்கி வெல்லம், பனங்கருப்பட்டி, மூலிகை கருப்பட்டி, வெல்ல உருண்டை, இந்துப்பு, மரச்செக்கு எண்ணெய், நெய், சுக்கு காபி, மூலிகை வெல்லப் பொடி என இருபது வெவ்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினோம்,” என்றார்.

கிராமப்புறப் பின்னணி இருப்பதால் பல தலைமுறைகளாக இத்தகைய பொருட்களை தயாரித்து வரும் விவசாயிகளுடன் இக்குழுவினருக்கு நேரடியாக தொடர்பு இருந்தது. இதனால் சிறந்த, தரமான பொருட்கள் இவர்களிடம் கிடைக்கிறது.


சுத்தமான, கலப்படமில்லாத தயாரிப்புகளை வழங்கவேண்டும் என்பதுடன் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் இந்நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது.


‘7 தினம்’ நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியதால் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துவிட முடிவெடுத்தார் தினேஷ். குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது ஆரம்பத்தில் பல்வேறு சவால்களை சந்தித்தார். குறிப்பாக அவரது குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்ததால் இந்தியச் சூழலை ஏற்றுக்கொள்வதில் சற்று சிரமப்பட்டுள்ளனர்.

7தினம் குழு

’7 dinam' குழுவினர்

தற்போது இந்நிறுவனத்தில் 10 ஊழியர்கள் பணியில் உள்ளனர். கோவை, திருப்பூர், சென்னை, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் செயல்படுகிறது. கோயமுத்தூர், பெங்களூரு, திருப்பதி ஆகிய பகுதிகளில் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“அதிக சம்பளத்துடன்கூடிய என் பணியை விட்டு விலகியே சமூக நலனில் பங்களிக்கும் முயற்சியை மேற்கொண்டேன். கிராமத்தில் இருந்து உலகத் தரம் வாயந்த ஒரு பிராண்டை உருவாக்கமுடியும் என்பதை நிரூபிப்பதே என்னுடைய நோக்கம். அடுத்த தலைமுறையினர் சொந்த ஊருக்கும் அங்குள்ள மக்களுக்கும் உதவுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்,” என்கிறார் தினேஷ்.

கடந்த இரண்டாண்டுகளில் உள்ளூர் சந்தையில் செயல்பட்டு வருகின்றனர். தற்போது மாதந்தோறும் 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக குறிப்பிடுகிறார். வருங்காலத்தில் உலகம் முழுவதும் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர். நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முதலீட்டை எதிர்நோக்கியுள்ளனர் தினேஷ்.


வலைதள முகவரி: https://7dinam.in/

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close