தமிழக பாரம்பரியப் பொருள்கள் விற்பனையில் பட்டையைக் கிளப்பும் 'Native Things'
‘பத்தமடை பாய், சின்னாளப்பட்டி புடவை, தஞ்சை மரக்குதிரை...’ - நம் பாரம்பரியப் பொருள்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல சென்னை ஐடி பொறியாளர்கள் எடுத்த முயற்சியே இது.
இந்தியாவின் பெருமையே அதன் கலாச்சாரமும், பண்பாடும்தான். என்னதான் காலங்கள் மாறினாலும் நம் பாரம்பரியம் மாறுவதில்லை. இயந்திரமயமான நவீன வாழ்க்கைக்கு நாம் மாறினாலும், நமது பாரம்பரிய உடைகள், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய சடங்குகள் என எல்லோருமே வாழ்க்கையின் ஏதாவதொரு காலகட்டத்தில் நம் பாரம்பரியத்தோடு ஒன்ற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மூச்சு விடக்கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கும் இந்த போட்டி உலகில், நாம் நம் இழந்துவிட்ட பாரம்பரியத்தை எங்கே மீட்பது, எப்படி மீட்பது. நம் பாரம்பரிய பொருள்கள் எங்கே கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையாகத்தான் ‘நேட்டிவ் திங்ஸ்’ (NATIVE THINGS) அமைந்துள்ளது.
பூட்டுக்குத் திண்டுக்கல், அல்வாவுக்கு திருநெல்வேலி, பாய்க்கு பத்தமடை, நாய்க்கு ராஜபாளையம் என ஒவ்வொரு பொருளும், ஓர் இடத்தில் அதன் சிறப்பம்சத்தோடு காலகாலமாய் பாரம்பரியமாய் சிறப்புற்றுத் திகழ்கிறது.
இவ்வாறு தொன்றுதொட்டு, வாழையடி வாழையாக தொடர்ந்து வரும் இந்த பாரம்பரிய சங்கிலியைத் தொடர்ந்து நாம் நம் அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டு செல்வது அவசியமில்லையா? நம் பாரம்பரிய பொருள்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும், நமது பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற துடிப்புடன் சென்னையில் கணிப்பொறி பொறியாளர்களாக பணிபுரியும் 3 இளைஞர்கள் எடுத்த முயற்சியே ‘நேட்டிவ் திங்ஸ்’ (NATIVE THINGS) எனப்படும் பாரம்பரிய பொருள்களுக்கான விற்பனை தளம்.
நமது பாரம்பரியத்தையும், வரலாற்றையும், தொன்மை சிறப்புகளையும் காலகாலத்துக்கும் அழியாமல் கொண்டு செல்லவேண்டும் எனும் வேகத்துடன் செயல்படும் ராஜபாளையத்தைச் சேர்ந்த கதிரவன், சதீஷ், காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த சலாம் ஆகியோரை நாம் இதுதொடர்பாக சந்தித்து கேட்டபோது,
“நமது நாட்டின் பெருமைகள், சிறப்புகள், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு சரியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாகும். நமது மண்ணின் ஒவ்வொரு பகுதியும் ஓர் சிறப்பைக் கொண்டுள்ளது. அதற்கேற்றாற் போன்ற பொருள்கள் பன்னெடுங்காலமாக பரம்பரை பரம்பரையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்றைய தலைமுறைக்கு ஞாபகப்படுத்துவதும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்குமான திட்டமே எங்களின் ‘நேட்டிவ் திங்ஸ்’,” என்கின்றனர்.
இவர்களில் கதிரவனும், சலாமும் கல்லூரித் தோழர்கள், தற்போதும் ஓன்றாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுடன் பணிபுரியும் சதீஷும் இவர்களின் பாரம்பரியம் காக்கும் பணியில் இணைந்து விட, மூவரும் சேர்ந்து தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தொழில்கள் பாரம்பரியமாக செய்யப்படுகின்றன. அந்த பொருள்களை மீண்டும் எப்படி வெகுஜன புழக்கத்துக்குக் கொண்டு வருவதென திட்டமிட்டு, இதற்காக ஓர் முகநூல் பக்கத்தைத் தொடங்கி, தங்களைத் தொடர்பு கொள்பவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பாரம்பரியப் பொருளை வாங்கிக் கொடுக்கின்றனர்.
இதனை தொடங்கி முதல் ஆறு மாதங்களுக்கு சோதனை ஓட்டமாக தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே பாரம்பரியமிக்க பொருள்களை வாங்கிக் கொடுத்து வந்த இவர்கள், இத்திட்டத்தின் வெற்றியால், இதனை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் வணிக வகையிலான தளமாக மாற்றத் திட்டமிட்டு, கடந்த 6 மாதங்களாக செயல்படுத்தியும் வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் குறிப்பிட்ட பொருளுக்கு நல்ல மவுசு இருந்துள்ளது. அந்தந்த ஊர்களுக்கென்று பிரத்தியேக உற்பத்திப் பொருள்களையும் வணிக முறைகளையும் அந்தந்த பகுதி மக்கள் கையாண்டுள்ளனர். தொன்றுதொட்டு அதே தொழிலைச் செய்து வருவதால், அதையே அந்த ஊர்களின் பாரம்பரியத் தொழில் என்றும் ஆக்கிவிட்டனர். இப்படியாய் அந்தந்த ஊர்களுக்கென்று ஓர் பாரம்பரியத் தொழில் அமைந்து விட்டது.
உதாரணத்துக்கு நமது பாரம்பரிய பொருள்கள் அல்லது தொழில்களான பவானி ஜமக்காளம் (தரை விரிப்பு), பத்தமடை பாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, புத்தாநத்தம் சுடிதார், பழவேற்காடு பனையோலை, நத்தம் சர்ட்ஸ், குறிஞ்சிப்பாடி லுங்கி, வாலாஜாப்பேட்டை மூங்கில் பொருட்கள் என இந்த லிஸ்ட் நீள்கிறது. இந்த தொழில்கள் எல்லாம் அந்தந்த ஊரிகளில் எங்கோ ஓர் மூலையில் உயிர்ப்புடன், ஆனால் அழிவின் விளிம்பில் உள்ளது என்பதே குறிப்பிடத்தக்கது.
உலகமே அறிந்த இந்த பாரம்பரிய பொருள்கள், உள்ளூர் மக்களால் பாரா முகமாய் புறக்கணிக்கப்படுவது வேதனையானது. இந்த பாரம்பரியத் தொழில்கள் மற்றும் உற்பத்தி பொருள்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது தேசத்தின் இதயத்தை நசுக்குவதற்குச் சமமானதாகும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
“நமது பாரம்பரியம் மிக்க பொருள்களை நமது மக்கள் விரும்பி வாங்கவேண்டும். அப்போதுதான் அந்த தொழில்கள், பாரம்பரியம் மிக்க அப்பொருள்கள், அத்தொழிலை செய்து வரும் தொழிலாளர்கள் என அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் என்கின்றனர்.”
இன்றைய காலகட்டத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த பாரம்பரியத் தொழில்கள் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பாரம்பரிய தொழில்களை மேற்கொள்பவர்கள், இதனை கைவிட்டுவிட்டு, வேறு வேலை தேடிச் செல்லும் அவல நிலை அதிகரித்து வருகிறது எனக்கூறும் இவர்கள் அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகின்றனர்.
முதலாவதாக உலகமயமாக்கல் மற்றும் அதற்கேற்ற பாரம்பரியத் தொழில் உற்பத்தியாளர்கள் இல்லை என்பதும், பாரம்பரிய பொருள்களுக்கு மாற்றாக விலை குறைவான, தரமற்ற பல பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன என்பதும், உரிய தொழில்நுட்பம் கிடைக்காமை மற்றும் தொழில்நுட்பம் குறித்த சரியான புரிதல் இல்லாமை, காலத்திற்கேற்றாற்போல் பாரம்பரிய தொழிலில் புதுமைகளை புகுத்தாதது, சந்தை எங்கு இருக்கிறது என்கிற தெளிவின்மை போன்றவற்றைக் கூறலாம்.
நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும், தேவைகளுக்கும் எப்படி மாறுபட்ட புதுமையான தீர்வுகளைத் தருகிறோம் என்பதைப் பொறுத்தே தொழில் முனைவு வெற்றி பெறுகிறது. இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. நமது பாரம்பரியமான தொழில்களை அதன் சிறப்புக் குறையாமல் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல, தொழில்நுட்பத்தின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது என்கின்றனர்.
"நம் ஊரின் தனிச்சிறப்பு வாய்ந்த பொருள்களை ஓர் இ-காமர்ஸ் தளத்தின் மூலம் அறிமுகம் செய்து, அதை நம் மக்களிடம் கொண்டு செல்வது மூலம் நம் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்தித் தருவதன் மூலமும் நம் பாரம்பரிய பொருள்களின் வாழ்வாதாரத்தை மீட்டு, அவர்களுக்கு புதியதொரு தொழில் முனைவை ஏற்படுத்தலாம் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தளம் தான் Native Things."
இன்று மக்கள் பிளாஸ்டிக், ரசாயனங்கள் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பொருள்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் வாங்குவதைப் புறக்கணித்து, இயற்கையான முறையில் உற்பத்தியில் செய்யப்படும் நமது பாரம்பரிய பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர்.
நாங்கள் இந்த தளத்தை தொடங்கிய 6 மாதத்திலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்தன. நாங்கள் தற்போது சுமார் 15க்கும் மேற்பட்ட பாரம்பரிய பொருள்களை, அப்பொருள்கள் சிறப்பாகத் தயாரிக்கப்படும் பகுதியிலே இருந்தே வாங்கி, நுகர்வோருக்கு வழங்கி வருகிறோம். விரைவில் கேஷ் ஆன் டெலிவரி (Cash On delivery) முறையில் பொருள்களை நாங்கள் வழங்கும்போது, மக்களின் ஆதரவும் எங்களுக்கு அமோகமாக இருக்கும் என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார் கதிரவன்.
நம் இந்திய நாட்டின் பாரம்பரிய பொருள்கள் மற்றும் ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு வாய்ந்த பொருள்களை ஒரே இடத்தில் குவித்து மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்களின் முழக்கமே ‘பழையன புகுதல்’ ‘நல்லதை விற்பனை செய்’ என்பதாகும்.
இன்று மட்டுமல்ல, என்றுமே பாரம்பரிய வாழ்க்கைப் பயன்பாட்டு பொருள்களே நம் ஆரோக்கியமான, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை விரைவில் மக்கள் உணர்ந்து இன்றைய செயற்கை ரசாயன உலகில் இருந்து மீண்டு வருவார்கள் என நம்பிக்கையோடு பேசுகின்றனர் இந்த இளம் தொழில்முனைவோர்கள்.
வலைதள முகவரி: Native Things