இந்தியாவுக்கு முதல் தங்கம்; துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லேகாரா பாராலிம்பிக்கில் வரலாறு!

ஒரே போட்டியில் தங்கம் மற்றும் உலக சாதனையும் சமன் செய்தார்!
1 CLAP
0

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவின் தங்க கனவை நனவாக்கி இருக்கிறார் துப்பாக்கிசூடுதல் வீராங்கனை அவனி லேகாரா. இன்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார்.

19 வயதே ஆகும் அவனி லேகாரா இதன்மூலம் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இன்று நடந்த இறுதிச்சுற்றில் சீனாவின் கியூப்பிங் ஜாங் 248.9 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் இரினா ஷ்செட்னிக் வெண்கலத்தையும் வெல்ல அவனி லேகாரா, 249.6 புள்ளிகள் பெற்றார். இந்த 249.6 புள்ளிகளுடன் உலக சாதனையையும் அவனி சமன் செய்தார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நல்ல புள்ளிகளைப் பெற இந்த சாதனையை செய்ய முடிந்தது.

இந்த சாதனை மூலம் 2018ல் அமைக்கப்பட்ட இர்னா ஷ்செட்னிக் உலக சாதனையை சமன் செய்தார். துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் முதல் பாரா தங்கப் பதக்கமாக அவனி லேகாரா தங்கம் வென்றது அமைந்துள்ளது. மேலும், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற நான்காவது நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

முன்னதாக, 1972ல் நீச்சல் வீரர் முரளிகாந்த் பெட்கர், 2004 மற்றும் 2006 ல் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா மற்றும் 2016ல் உயரம் தாண்டுதல் வீரர் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் இந்தியாவுக்காக தங்க பதக்கத்தை கைப்பற்றியிருந்தனர்.

தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து, அவனிக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

“அற்புதமான பெர்பாமென்ஸ் அவனி லேகாரா! கடின உழைப்பு உடன் தங்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் சுறுசுறுப்பான தன்மை மற்றும் துப்பாக்கிச் சுடுதல் மீதான ஆர்வம் காரணமாக இது சாத்தியமானது. இது உண்மையில் இந்திய விளையாட்டுக்கு ஒரு சிறப்பு தருணம். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்," என வாழ்த்தியிருக்கிறார்.

இதற்கிடையே, இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திரா 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும் சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தியிருக்கின்றனர். இதேபோல் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா 44.38 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

முன்னதாக, நேற்று, இந்தியாவின் பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கத்துடன், இந்தியாவுக்கு பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதே போல் வட்டு எறிதல் போட்டியில் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார் F52 பிரிவில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தார். மேலும், உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் தற்போது வரை இந்தியாவுக்கு 7 பதங்கங்கள் கிடைத்துள்ளது. இதில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் அடக்கம்.

Latest

Updates from around the world