இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள்: தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
2021-22ல் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) எந்த மாநிலங்கள் முன்னிலை வகிக்கிறது முதல் 10 மாநிலங்கள் எவை? என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் மற்றும் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதேபோல், ஒவ்வொரு மாநிலமும் தொழில், விவசாயம் போன்றவற்றைப் பொறுத்து அதன் சொந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், 2021-22ல் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) எந்த மாநிலங்கள் முன்னிலை வகிக்கிறது முதல் 10 மாநிலங்கள் எவை? என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
1. மகாராஷ்டிரா:
மாநில உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மும்பையை தலைநகராகக் கொண்ட இந்த பணக்கார மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி $366.67 பில்லியன் ஆகும். இதன் இந்திய மதிப்பு 26.62 டிரில்லியன் ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் விவசாயம் 51%, சேவைத் துறை 40% மற்றும் தொழில்துறை 9% உடன் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு உற்பத்தித் துறை, சர்வதேச வர்த்தகம், வெகுஜன ஊடகம், விண்வெளி, தொழில்நுட்பம், பெட்ரோலியம், ஃபேஷன், ஆடைகள் மற்றும் சுற்றுலாத் துறைகள் அதன் அம்சங்களாகக் காணப்படுகின்றன.
2. தமிழ்நாடு:
இந்தியாவிலேயே பணக்கார மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் இந்திய மதிப்பு ரூ. 19.43 டிரில்லியன் ஆகும், அமெரிக்க டாலர்களில் இது $265.49 பில்லியன் ஆக கணக்கப்படுகிறது. இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு 50% க்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வசித்து வருகின்றனர்.
இங்கு ஆட்டோமொபைல்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து நிறுவனங்கள், ஆடைகள், ஜவுளிகள், தோல் மற்றும் ரசாயனங்கள் ஆகியவை தமிழகத்தில் வளர்ச்சிக்கான முக்கியமான காரணிகளாக உள்ளன.
விவசாயம் 13 சதவீதமும், தொழில்துறை 34 சதவீதமும் மற்றும் சேவைகள் 53 சதவீதமும் பங்காற்றுகின்றன
3. குஜராத்:
குஜராத்தின் ஜிஎஸ்டிபி (GSDP) மதிப்பு 259.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் 18 லட்சத்து 79 ஆயிரத்து 826 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு விவசாயம் 19 சதவீதமும், சேவைத் துறை 36 சதவீதமும் மற்றும் தொழில்துறை 45 சதவீதமும் பங்காற்றியுள்ளன. ஃபார்மா, கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், செராமிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ் ஆகியவை முக்கிய வலுவான துறைகளாகும்.
4. கர்நாடகா:
கர்நாடகாவின் ஜிஎஸ்டிபி மதிப்பு இந்திய ரூபாயில் 18.03 டிரில்லியன்கள் ஆகும். இதுவே அமெரிக்க டாலர்களின் படி 247.38 பில்லியன் ஆக கணிக்கப்பட்டுள்ளது. சேவைத்துறை 64 சதவீதமும், தொழில்துறை 26 சதவீதமும், விவசாயம் 10 சதவீதமும் கர்நாடகாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுள்ளன.
ஆட்டோமொபைல், அக்ரோ, ஏரோஸ்பேஸ், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கார்மென்ட், பயோடெக் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் மற்றும் இந்திய டெலிபோன் தொழில் போன்ற முக்கிய நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.
5. உத்தரப்பிரதேசம்:
உத்தரப் பிரதேசம் இந்தியாவின் 5வது பணக்கார மாநிலமாக உள்ளது. இதன் GSDP மதிப்பு $17.06 டிரில்லியன் ($234.96 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு சேவைத் துறை 50 சதவீதமும், தொழில்துறை 26 சதவீதமும், விவசாயம் 24 சதவீதமும் பங்காற்றியுள்ளன.
6. மேற்கு வங்காளம்:
இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் மேற்கு வங்கம் 6வது இடம் பிடித்துள்ளது. இரும்பு ஆலைகளை பிரதானமாகக் கொண்ட இந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.14.44 டிரில்லியன்கள் ஆகும். அதாவது, $206.64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு சேவைத் துறை 53 சதவீதமும், விவசாயத் துறை 21 சதவீதமும், தொழில்துறை 26 சதவீதமும் தங்களது பங்களிப்பை செலுத்தியுள்ளன.
7. ராஜஸ்தான்:
ராஜஸ்தானின் ஜிஎஸ்டிபி மதிப்பு ரூ.11.98 டிரில்லியன் ஆகும். இம்மாநிலத்தில் விவசாயம், சுரங்கம் மற்றும் சுற்றுலாத் துறைகள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு சேவைத் துறையின் பங்களிப்பு 47.5 சதவீதமும், விவசாயம் மற்றும் தொழில்துறை 44.4 சதவீதமும் ஆகும்.
8. தெலுங்கானா:
கிருஷ்ணா மற்றும் கோதாவரி என இரண்டு பெரிய ஆறுகள் ஓடும், தெலங்கானா மாநிலம் ஐடி துறை மற்றும் பயோடெக்னாலஜி துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஐ.டி. துறையில் அசுர வளர்ச்சி கண்ட மாநிலமாக இருந்தாலும், தெலங்கானா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு $157.35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆகும்.
9. ஆந்திரப் பிரதேசம்:
ஆந்திர மாநிலத்தின் ஜிஎஸ்டிபி மதிப்பு $138.19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த மாநிலத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாநிலத்தில் 62 சதவீத மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாநிலத்தின் வளர்ச்சியில் சேவைத் துறை 35 சதவீதமும், விவசாயத் துறை 55சதவீதமும் மற்றும் தொழில் துறை 10 சதவீதமும் பங்களிப்பை வழங்குகிறது.
10. மத்திய பிரதேசம்:
டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தின் GSDP விகிதம் $126.40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் சேவைத் துறை 35.6 சதவீதமும், தொழில்துறை 4.8 சதவீதமும் மற்றும் விவசாயம் 59.6 சதவீதமும் பங்களிப்பு செலுத்தியுள்ளது.
கேரளா:
கல்வியில் முதன்மையான மாநிலமாக விளங்கும் கேரளாவிற்கு சேவைத் துறை மட்டுமே முக்கியப் பங்களிப்பை வழங்கிறது. இதனால் இம்மாநிலம் டாப் 10 பட்டியலையும் கடந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் GSDP மதிப்பு $119.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
டெல்லி:
இந்தியாவின் தலைநகரான டெல்லி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் GSDP மதிப்பு வெறும் $108.33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆகும்.
டெல்லியின் வளர்ச்சிக்கு சேவைத் துறை 86 சதவீதமும், தொழில்துறையில் 12 சதவீதமும் மற்றும் விவசாயம் 2 சதவீதமும் பங்காற்றியுள்ளது.
வங்கி, நிதி, காப்பீடு, உணவு, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் துறைகள், சுற்றுலா மற்றும் தளவாடங்கள் ஆகிய துறைகளில் இம்மாநிலம் முதன்மையானதாக இருந்தாலும், இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தொகுப்பு - கனிமொழி