1.5 வயதில் போலியோ தாக்கிய சிவகாசி குணவதி, இன்று குல்லிங் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார்!
2 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி, ஆண்டு வருமானம் 6 லட்சம் என்று ஹாபியையே தொழிலாக்கிக் கொண்டுள்ளார் குல்லிங் குணவதி.
குணவதி சந்திரசேகரனுக்கு 1.5 வயது இருக்கையில் போலியோ நோய் அவரை தாக்கியது. கால்கள் இரண்டும் செயலிழந்து, 20 அடிக்கு மேல் ஒருவரின் உதவியின்றி அவரால் நடக்க முடியாமல் போனது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சி உட்கார்ந்து விடவில்லை இந்த கலை அரசி.
சமீப காலங்களாக சோர்வுற்ற நிலையிலோ, துன்பக்கடலிலோ சுழலும் மனிதிகளின் மனங்களை கரைச் சேர்த்து, புத்துயிர் அளிக்கும் இரட்சகர்களாக விளங்குகின்றது ஆர்ட் அண்ட் கிராப்ட். ஆம், புகழ்பெற்ற கைவினைகள் சில ஆண்டுகளாய் மறுஅவதராம் எடுத்துவருகின்றன. அப்படி, தன் வாழ்க்கையின் பிரகாசமாய் குணவதி பார்த்தது பேப்பர் குல்லிங் கலையை.
பல நூற்றாண்டுகள் பழைமையானதாக விளங்கும் குல்லிங் கலையினை கலைஞர்கள் மீண்டும் கையில் எடுத்திருப்பது மனமகிழ்வை அளிக்கிறது. அப்படியான மகிழ்வினை அளிக்கிறார் கலர் கலர் வண்ணக்காதிகங்களை கைகள் எனும் மந்திரக்கோல்களால் நிமிட பொழுதில் ஆளை மயக்கும் கலைப்பொருளாக மாற்றிவிடும் குணவதி சந்திரசேகரன். மாநில அரசின் ‘சிறந்த கைவினை கலைஞர்’ விருதினை பெற்ற கலைஞி.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை குணவதிக்கு குல்லிங் கலை பரீட்சயமற்றதே. ஆனால், இன்று 2,000-க்கும் மேற்பட்ட குடும்பப் பெண்களுக்கு குல்லிங் பயிற்சியளித்து, அவர்களை சம்பாதிக்கவைப்பதுடன், ஆண்டுக்கு 6,00,000 ரூபாய் வருமானம் ஈட்டும் தொழில் முனைவரோகவும் மாறியுள்ளார் திண்டுக்கல் சின்னாளம்பட்டியை சேர்ந்த குணவதி.
இளம் வயதிலே போலியோ தாக்குதலுக்கு ஆளாகியதில், கால் எலும்பு பாதிப்பு உள்ளாகியது. அதன் காரணத்தினாலே பத்தாவது முடித்தவுடனே திருமணமாகியது. மருத்துவர்கள் சூழ் குடும்பத்தில் பிறந்து, வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட வீட்டுக்கு வாக்கப்பட்டு போகிய அவர், சம்பாதிக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்ததில்லை. ஆனாலும், அவருக்கு ஏற்பட்ட மனச்சோர்வினை போக்கும் நிவாரணிக்கான தேடுதலில் கிடைத்த குல்லிங் கலையினை இறுகப்பற்றிக் கொண்டு சிறகடிக்கத் தொடங்கியுள்ளார்.
“எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மகள்களை வளர்க்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிய பிறகு எனக்கென்று நிறைய நேரம் கிடைத்தது. எங்க பேமிலியில் இருக்கிற எல்லோருமே வெர்கிங் வுமன்ஸ். நம்ம மட்டும் வீட்டில் இருக்கோம். படிப்பும் ரொம்ப கம்மியா இருக்கு. வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம். நம்ம குழந்தைகளை நாம எப்படி இன்ஸ்பையர் பண்ண போகிறோம்னு ஏகப்பட்ட மனக்குழப்பங்கள். அந்த சமயத்தில் தான் குல்லிங் அறிமுகமாகியது. இன்னைக்கு, இந்த குல்லிங் ஒரு வருமானத்தை கொடுக்கின்றது, ஸ்ட்டேஸ் பஸ்டராக இருக்கின்றது என்பதையெல்லாம் தாண்டி நாலு பேருக்கு வேலை கொடுக்க முடிகின்றது என்ற மனநிறைவை தருகிறது,” என்கிறார் அவர்.
முதன் முதலில் ஜிமிக்கி ஒன்றையே செய்துள்ளார். அன்று மாலையே அவருடைய மகள் அதை அணிந்து வீட்டு விசேஷத்திற்குச் செல்ல, வந்திருந்த விருந்தினர்களில் கம்மலை கண்ட எவரும் குணவதியை பாராட்ட மறக்கவில்லை. சோர்ந்திருந்த அவருக்கு அப்போது கிடைத்த பாராட்டு பார்சலின் விளைவால், குல்லிங் பேப்பர் கொண்டு வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று மாத்தி யோசித்துள்ளார். சிந்தனையின் முடிவில் குணவதியும், அவருடைய மகளும் இணைந்து குல்லிங் பேப்பர்களை வெவ்வேறு வடிவங்களில் சுருட்டி பட்டாம்பூச்சி ஒன்றை உருவாக்கியுள்ளார். அது தான் ஆரம்பம். இன்று அப்பட்டாம்பூச்சி அவரை சந்தோஷ வானில் உயரப் பறக்க வைக்கிறது.
“என் கணவர் எந்தவொரு சின்ன விஷயம் செய்தாலும், அளவுக்கும் அதிகமாகவே என்கிரேஜ் செய்பவர். பட்டாம்பூச்சி செய்த அன்றே அதற்கு பிரேம் செய்து கொண்டு வந்தார். பார்ப்பதற்கே ரொம்ப அழகா இருந்தது. என் ஹாபிக்காக மட்டுமே குல்லிங் செய்து வந்தேன்.”
ஒருமுறை மதுரையில் நடந்த பொருட்காட்சிக்கு சென்றிருந்தோம். அங்கு கடை வைத்திருந்த பெண் ஒருவர், நான் அணிந்திருந்த குல்லிங் ஜூவல்லரி பார்த்து எங்க வாங்குனீங்கனு கேட்டாங்க. இல்ல இது நானே கையால் செய்தது என்று கூறினேன். அவங்க டிசிஹெச் டிபார்ட்மென்ட்டை அணுகுனீங்க, அவங்க ஒரு சர்டிபிக்கெட் கொடுப்பாங்க. அத வச்சு இந்தியா முழுவதும் நடக்கும் பொருட்காட்சிகள் நடக்கும்போது இலவசமாக கடை தருவாங்க சொன்னாங்க.
அதன்படி, சர்டிபிக்கெட் வாங்கி பொருட்காட்சிகளில் இலவச கடை ஒதுக்கினார்கள். அங்கு போனபிறகு தான் குல்லிங் எவ்வளோ பெரிய மார்க்கெட் இருக்கு என்பதை தெரிந்து கொண்டேன். எவ்ளோ கடை போடுகிறோமோ அதை பொருத்து வருமானம் கிடைக்கும்.
”எனக்கு இப்போ ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம்ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது,” என்றார் அவர்.
அதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் செல்கையில் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் ஃபீட்பேக்குகளே அவரது வளர்ச்சிக்கு வித்திட்டது என்கிறார் குணவதி.
“ஒரு முறை ஸ்டாலில் கலந்துகொள்ள சென்ற போது ஒரு கஸ்டமர், அப்துல் கலாம் உருவத்தை குல்லிங் பேப்பர் மூலம் வடிவமைத்துத் தரச்சொன்னார். குல்லிங் கலையால் உருவாகிய பொருட்களுக்கு டிமாண்ட் அதிகம் இருப்பினும், விலையின் பொருட்டு மக்கள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை அதிகம் நாடி செல்கின்றனர்,” என்று வருந்துகிறார் அவர்.
ஹாபியிலிருந்து பேஷனாக மாறி பின் ஃப்ரொபஷனாக மாறிப் போன குல்லிங் கலையால் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்து வருகிறார் குணவதி. குணவதியின் கணவர் சிவகாசியில் பிரிண்டிங் பிசினஸ் செய்துவருகிறார். அவருடைய கம்பெனியிலிருந்து டன் கணக்கில் வெட்டப்பட்ட பேப்பர்கள் வீணாகுவதை கண்ட குணவதி, குல்லிங் பேப்பருக்கு மாற்றாய் இக்காகித துண்டுகளை பயன்படுத்தி ஹேண்ட்பேக்குகள், வாயில் திரைகளும் செய்து வருகிறார்.
“இந்த பேப்பர்கள் மறுசுழற்சி பண்ணவே முடியாதவை. ஒரு முறை ஆபிசில் அந்த வேஸ்ட் பேப்பர்களை பார்க்கும்போது, குல்லிங் பேப்பர் மாறியே இருந்தது. ரோல் பண்றதுக்கு கொஞ்சம் கடினமா இருந்தாலும், அழகான பாசி போன்று கிடைத்தது. அதை வைத்து ஒரு பேக் செய்தேன். சிவகாசியில ஒரு நாளுக்கு டன் கணக்கில் பேப்பர் வேஸ்ட் ஆகுவதுண்டு. சோ, இந்த பேப்பர்களை கொண்டு பெரிய பைவ் ஸ்டார்களின் ஹாலில் தொங்கவிடும் டூம் லைட்டுகளை செய்யலாம்னு யோசனையில் முயற்சித்து வருகிறோம்,” என்கிறார்.
குல்லிங் கலையில் சிறந்துவிளங்கும் குணவதிக்கு, தமிழக அரசின் ‘சிறந்த கைவினை கலைஞர்’ எனும் விருதும் வழங்கப் பட்டுள்ளது. ஆனால், அவர் விரும்புவது யாவும் திறமையிருந்தும் குடும்பச்சூழலில் முடங்கியிருக்கும் பெண்கள் வெளிவந்து இக்கலையினைக் கற்றுக்கொண்டு, மனஅழுத்தத்தும் நீங்கி நித்தமும் புத்துணர்ச்சியுடன் அவர்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே.
“குல்லிங் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். குழந்தைகள் வளர்ந்தபிறகு, ஹவுஸ் வைஃப் ஆக இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு மனச்சோர்வு உண்டாகும். அவங்களெல்லாம், குல்லிங்கை கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வருமானம் கிடைப்பதுடன், மனதுக்கும் ரிலாக்சாக இருக்கும்...”என்றார்.