’நில உச்ச வரம்புச் சட்டம் போல், பண உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வருவேன்’: திருநங்கை பாரதி கண்ணம்மா
மதுரை நாடாளுமன்ற தேர்தலில் திருநங்கையான பாரதி கண்ணம்மா சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்!
நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கு நிலையில் அனைத்து கட்சியினரும் மண்டையை பிளக்கும் வெயிலிலும் மும்முரமாய் செயல்பட்டு வருகின்றனர். வேட்புமனுத்தாக்கல் செய்தவற்கான இறுதிநாள் நிறைவடைந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற தேர்தலில் திருநங்கையான பாரதி கண்ணம்மா சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மீனாட்சி அம்மன் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த திருநங்கையான பாரதிகண்ணம்மா, பொருளாதாரத்தில் இளங்கலை முடித்து, சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இது தவிர கணினி அறிவியலில் டிப்ளமோவும் படித்து, ஹெச்டிஎஃப்சி வங்கியின் சேல்ஸ் மேனேஜராகவும் பணிப்புரிந்துள்ளார். 20 வருட சேல்ஸ் மேனேஜர் பணியில் கிடைத்த அனுபவம், நேரடியான மக்களை சந்தித்த கிடைத்த வாய்ப்பில் மக்களின் தேவைகளை அறிந்து கொண்ட அவர், அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் நீட்சியாய் 2013ம் ஆண்டு மதுரையில் மேயர் பதவிக்காக போட்டியிட மனுக்களை தாக்கல் செய்தபோது, திருநங்கை என்பதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவரடைய மனு நிராகரித்துவிட்டார்.
“கல்லூரியில் எக்னாமிக்ஸ் படித்த காலத்திலே அரசியல் குறித்து பாடத்தினை எடுத்து படித்தேன். அப்போதே, முழுவதுமாய் அரசியலில் என்னை ஈடுப்படுத்திக் கொண்டு, நிறைய படித்தேன். அப்போது, திருநங்கைகள் யாரும் அரசியலுக்குள் வரமுயலவில்லை. அதனால், எனக்குள்ளிருந்த ஆர்வத்தினால், 2013ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்தேன். ஆனால் என் மனு நிராகரிக்கப்பட்டது.
”நாங்க போடும் ஓட்டு வேண்டும், ஆனால் நாங்கள் வேட்பாளராகக் கூடாதா என்று நீதிமன்றத்தை அணுகி நிராகரிப்பு எதிராக வழக்கு தொடர்ந்தேன். அதற்கு சாதகமான தீர்ப்பும் கிடைத்தது. 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்தேன். போட்டியிட்ட 31 வேட்பாளர்களின் மக்கள் எனக்கு ஆதரவு அளித்ததில் 15வது இடத்தை பிடித்தேன்,” என்றார்.
‘அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் செல்வம்’ என்பதே அவருடைய கொள்கை எனும் பாரதி தொடர்ந்து பகிர்கையில், “நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவந்ததை போல, பண உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவருவேன். தேவைக்கு மீறி அதிகப்படியாகச் சேர்த்துவைத்திருக்கும் யாருடைய பணமும் அரசின் கஜானாவுக்குப் போய்விடும்.
இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களில் 30 கோடி மக்கள் தான் தேவைக்கு அதிகமான சொத்து சேர்க்கின்றனர். பாக்கியுள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தான். சோ, இந்த சட்டத்தை இயற்றும் போது பணக்காரர்களிடம் மட்டுமே தொடர்ந்து பணம் சேர்வது தடுக்கப்படும். ஊழல் முறையில் சொத்து சேர்ப்பவர்களின் பணங்களும் இறுதியில் அரசின் கஜானாவுக்கு தான் செல்லும் என்றால், கண்டிப்பாக அவர்களுக்கும் அந்த எண்ணம் வராது. ஊழல் தடுத்து நிறுத்தப்படும். பண உச்ச வரம்பின்மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு எல்லோருக்கும் கல்வியும் மருத்துவமும் நிச்சயம் சாத்தியமாகும்.” என்றார்.
2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீனாட்சி வேடமிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்தவர், இம்முறையும் மீனாட்சி வேடமிட்டதுடன் உடன் கிறிஸ்டியன், முஸ்லிம் என பிரதிபலிக்கும் இருவர்களுடன் சேர்ந்து வந்து மனுதாக்கல் செய்தார்.
“இந்தியாவை ஆட்டிப் படைத்து கொண்டிருப்பது மதம் தான். மதவேறுபாடு கலைந்தால் உலக நாடுகளின் மத்தியில் இந்தியா முன்னோக்கிச் செல்லும் என்பது என் கருத்து. அதற்காக தான் அப்படி வேடமிட்டு சென்றேன்.”
கடந்த 2004ம் ஆண்டு திருநங்கையாக மாறி, திருநங்கைகளுக்காவும், பொது மக்களுக்காகவும் பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி இதுவரை 396 பொதுநல வழக்குகள் தொடர்ந்து நியாயம் கோரியுள்ளார்.
“அம்மா இருக்கும் வரை நான் அவரது மகனாகவே வாழ்ந்தேன். அப்போதே என் பாலுணர்வை தெரிந்து கொண்டாலும் என் அம்மாவுக்காக மகனாகவே வாழ்ந்தேன். அவருடைய இறப்பிற்கு பிறகு திருநங்கைகளுடன் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டேன். பாரதி மீது கொண்ட தீராக் காதலாலும், அவர் காலத்தில் திருநங்கை இருந்திருந்தால் என்னைப்போன்று தான் இருந்திருப்பார் என்று எண்ணத்தில் பாரதி கண்ணம்மா என்று பெயரிட்டு கொண்டேன்,” என்றார்.
பட உதவி : பாரதி கண்ணம்மா ஃபேஸ்புக் பக்கம்