‘அபி’ மீசை, குழந்தைகளுக்குப் பெயர், திரைப்படம், வெப் சீரீஸ்... டிரெண்டிங் ஆன ‘ரியல் ஹீரோ’ அபிநந்தன்!
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் அபிநந்தன். இந்திய விமானப்படை விமானியான அவர் பாகிஸ்தானில் இருந்து வெற்றிகரமாக இந்தியா திரும்பிவிட்ட போதும், அவரது பெயர் இன்னமும் பல விதங்களில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய தாக்குதலில் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியவர் தான் இந்திய விமானப்படை விமானியான இந்த அபிநந்தன். தமிழரான அபிநந்தனின் அப்பா மற்றும் தாத்தாவும் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் தான். அதனால் தானோ என்னவோ எதிரி நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட போதும், முகத்தில் துளியும் பயமின்றி, வீரத்திற்கு முன்னுதாரணமாக நின்றுள்ளார்.
இந்திய விமானியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ஒரு ராணுவ வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக உணர்த்தினார் அபிநந்தன்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்கள் எத்தனையோ பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அத்தகைய சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவ வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் அபிநந்தன் என்றால் மிகையாகாது.
பாப்புலரான அபி மீசை:
ஒரே நாளில் அவர் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ஆகியுள்ளார். தமிழர்கள் தங்களது வீரத்தை வெளிக்காட்டும் ஒன்றாக மீசையைக் கருதுகின்றனர். அந்தவகையில் அபிநந்தனைப் போலவே அவரது மீசையும் பிரபலமாகியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அபிநந்தனைப் போல், பலரும் தங்களது மீசை அமைப்பை மாற்றியுள்ளனர்.
அபிநந்தன் லுக் என அவரது மீசையை குறிப்பிட்டு இளைஞர்கள் பலர் தங்களது மீசை புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் அவர்கள், ‘அபிநந்தனைப் போல் மீசை வைத்துக் கொள்வதால், அவரைப் போலவே வீரமாக, கம்பீரமாக உணர்வதாக’ தெரிவித்துள்ளனர்.
தங்களது சலூனிற்கும் அபிநந்தனைப் போல் மீசையை அமைத்துத் தரும்படி கடந்த இரண்டு நாட்களாக வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவதாக நேச்சுரல்ஸ் இணை இயக்குநர் சி.கே.குமாரவேல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள், சினிமாப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் அபிநந்தன் போன்று மீசை வைக்க விரும்புவதாகவும், அவர் அப்பதிவில் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு ‘அபிநந்தன்’ பெயர்:
இது ஒருபுறம் இருக்க, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அபிநந்தன் பெயரை வைக்கவும் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னையில் நடந்த ரஜினி நடித்த பேட்ட படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, ரஜினியின் மனைவி லதா மூன்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். அப்போது புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் விமானி அபிநந்தன் ஆகியோர் பெயர்கள் அந்த மூன்று குழந்தைகளுக்கும் சூட்டப்பட்டது.
இதே போல் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கும், ராஜஸ்தானில் ஒரு குழந்தைக்கும் அபிநந்தனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘அபிநந்தன் எப்படி நாட்டிற்கு பெருமை தேடித் தந்தாரோ, அதேபோல் தங்களது மகனும் நடந்து கொள்ள வேண்டும். எனவே தான் அவர்களுக்கு ‘அபிநந்தன்’ என்று பெயர் சூட்டியுள்ளோம். பின்னாளில் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு, ‘அபிநந்தனின்’ வீர வரலாற்றைக் கூறி அவனை மிகுந்த ஊக்கப்படுத்துவோம்’ என ஒருமித்த கருத்தோடு பேசுகின்றனர் அப்பெற்றோர்.
கர்நாடகாவைச் சேர்ந்த முனிசிபல் ஆணையர் அரவிந்தா மற்றும் அவரது மனைவி பூர்னிமா, தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு, அபிநந்தனா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். தங்கள் மகளுக்கு இப்பெயரை வைத்துள்ளது பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தலைப்புக்கு போட்டாபோட்டி:
நாட்டில் எந்த ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றாலும் அதனை உடனே காசாக்க வேண்டும், தங்களது படத்துக்கு இலவச விளம்பரமாக்கிக் கொள்ள வேண்டும் என திரைத்துறையினர் நினைப்பது வாடிக்கை தான். அந்தவகையில் புல்வாமா தாக்குதல், சர்ஜிகல் ஸ்டிரைக், பாலகோட் மற்றும் அபிநந்தன் போன்ற வார்த்தைகளை தங்களது படத்துக்கு தலைப்பாக பலர் முன்பதிவு செய்துள்ளனர்.
நாட்டையே சில நாட்கள் உணர்ச்சிப்பூர்வமாக வைத்திருந்த புல்வாமா சம்பவம் மற்றும் அபிநந்தன் பற்றிய சம்பவங்களைப் படமாக எடுத்தால் நன்றாக ஓடும் என பல தயாரிப்பாளர்கள் அதற்காக வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்க கில்டிலும் அபிநந்தன் பெயரில் பட டைட்டில்கள் பதிவு செய்ய பலரும் முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
அபிநந்தனின் கதையை திரைப்படமாக மட்டுமின்றி, வெப்சீரியலாக உருவாக்கவும் ஏராளமான கோலிவுட், பாலிவுட் டைரக்டர்கள் முயன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை அந்தேரியிலுள்ள இந்திய மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் குறைந்தது ஐந்து தயாரிப்பு நிறுவனங்களாவது புதிய பெயர்களை பதிவு செய்துள்ளன.
’புல்வாமா’, ’அபிநந்தன்’ என படங்களுக்காக பல்வேறு தலைப்புகளைத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில், ’புல்வாமா: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’, ’வார் ரூம்’, ’ஹிந்துஸ்தான் ஹமாரா ஹை’, ’புல்வாமா டெரர் அட்டாக்’, தி அட்டாக்ஸ் ஆஃப் புல்வாமா’, ’வித் லவ் ஃப்ரம் இந்தியா’, ’ஏடிஎஸ்-தி ஒன் மேன் ஷோ’, ’புல்வாமா த டெட்லி அட்டாக் ஆகிய தலைப்புகளைத் தயாரிப்பாளர்கள் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தேசப் பக்தியை இப்படி காசாக்க முயலுவதா என இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஒருபக்கம் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.