சைவ உணவுப் பிரியர்களே! இறைச்சிக்கு பதிலாக இந்த 5 மாற்று உணவுகளை ட்ரை பண்ணி பாருங்க...
நுகர்வோர் பலர் தங்கள் டயட்டில் இறைச்சிக்கு பதிலாக தாவரம் சார்ந்த மாற்று உணவு வகைகளை விரும்பும் நிலையில் அப்படிப்பட்ட 5 மாற்று உணவுகளை இங்கே பார்க்கலாம்.
'உணவே மருந்து’ என்றிருந்த காலம் மாறி ஒருகட்டத்தில் அவசர உலகிற்கு ஏற்ப ஃபாஸ்ட் ஃபுட் பக்கம் எல்லோர் கவனமும் திரும்பியது. ஆனால், இன்று மக்களிடையே உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.
மக்கள் உணவு விஷயத்தில் அதிக கவனமாக இருக்கின்றனர். உடல் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.
அதேபோல் விலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றம், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகரிப்பு, காடு அழிப்பு, நீர் பிரச்சனைகள், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகள் கார்பன் அடிச்சுவடு பற்றிய புரிதலையும் பலரிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாக நுகர்வோர் பலர் தங்கள் டயட்டில் இறைச்சிக்கு பதிலாக தாவரம் சார்ந்த மாற்று உணவு வகைகளை விரும்புகின்றனர்.
இந்த போக்கு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், தாவரம் சார்ந்த 5 மாற்று உணவுகளை இங்கே பார்க்கலாம்:
தாவரம் சார்ந்த 5 மாற்று உணவுகள்
பலா (Jackfruit)
பலா சற்று இனிப்பு சுவை கொண்டது. ஆனால், இவற்றை இனிப்பு அல்லாத உணவுடன் சேர்க்கும்போது அதன் சுவையைக் கண்டுபிடிப்பது சிரமம்.
நன்றாக பழுத்த பழமாக இல்லாமல் சற்றே காயாக இருக்கும்போது மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சியின் அமைப்பைப் போன்றே இருக்கும். இத்துடன் மற்றொரு பொருளை சேர்த்து சமைக்கும்போது, அந்தப் பொருளின் சுவையுடன் இது நன்றாக ஒன்று கலந்துவிடும்.
இருப்பினும் ஊட்டச்சத்தைப் பொருத்தவரை இதில் போதுமான புரோட்டீன் இல்லை. எனவே, இத்துடன் பீன்ஸ் போன்ற புரோட்டீன் நிறைந்த தாவர உணவையும் எடுத்துக்கொள்வது நல்லது.
டோஃபு (Tofu)
டோஃபு தயாரிக்க கண்டென்ஸ் செய்யப்பட்ட சோயா பால் பயன்படுத்தப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட் டோஃபுவில் முழுமையாகக் கிடைக்கின்றன. புரோட்டீன் சத்தும் அதிகம் கிடைக்கிறது.
இதுவும் மற்ற உணவு வகைகளின் சுவையுடன் எளிதாக ஒன்று கலந்துவிடும். சிலருக்கு சூடான சூப், ஸ்டிர்-ஃபிரை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடப் பிடிக்கும்.
செய்டன் (Seitan)
இது கோதுமை க்ளூட்டன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கோதுமையில் இருக்கும் மாவுச்சத்தை நீக்கிவிட்டு இது தயாரிக்கப்படுகிறது. இதன் அமைப்பு சிக்கன் போன்றே இருக்கும். இது புரோட்டீன் நிறைந்தது.
அதேசமயம் சிலருக்கு க்ளூட்டன் ஒவ்வாமை இருக்கும். இதுபோன்ற ஒவ்வாமை இருப்பவர்களும் செலியாக் நோய் பாதிப்பு இருப்பவர்களும் இதை உட்கொள்வதை தவிர்த்துவிடுவது நல்லது.
சோயா (Soy)
இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு சோயா மிகச்சிறந்த மாற்று உணவாகும். பிரெஷர் குக் செய்யப்பட்ட சோயாபீன்ஸ் அமைப்பு இறைச்சி போன்றே இருக்கும்.
உடலுக்குத் தேவையான முழுமையான புரோட்டீன் சத்து இதில் கிடைக்கிறது. அதேபோல், உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட்களை இது கொண்டுள்ளது.
கொண்டக்கடலை (Chickpeas)
இதை மென்று சாப்பிடும்போதும் சிக்கனை நினைவுபடுத்துவதாக பலர் உணர்கின்றனர். சற்று கொரகொரப்பாக மசித்துக்கொண்டால், இறைச்சிக்குப் பதிலாக உங்களுக்குப் பிடிச்ச சாண்ட்விச் சாலட்டில் கலந்து சாப்பிடலாம். அல்லது முழுதாகவே சூப் போன்ற உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.
தமிழில்: ஸ்ரீவித்யா
சைவ இறைச்சி தெரியுமா? தாவரத்தில் இருந்து ‘க்ரீன் மீட்’ தயாரிக்கும் கேரள ஸ்டார்ட்-அப்!