ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ : அதலாம் குறைக்க முடியாது’ - எலான் மஸ்க் கறார் பதில்!
ட்விட்டரை முன்னேற்றுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக எலான் மஸ்க், தான் உலகின் பெரும் பணக்காரர் என்பதை நிரூபிக்கும் விதமாக முதன் முதலில் ட்விட்டர் வருமானத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
ட்விட்டர் ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் 8 டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற எலான் மஸ்கின் அறிவிப்பு சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய பிரபல நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், பல சர்ச்சைகள், கருத்து மோதல்கள், வழக்கை கடந்து முன்னணி சோசியல் மீடியா தளமான ட்விட்டரை கையகப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய கையோடு அதன் உயர் அதிகாரிகள், தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் பணியை விட்டு நீக்கப்பட்டனர். ட்விட்டரில் பணியாற்றும் 7,500க்கும் அதிகமான ஊழியர்களும் எப்போது எலான் மஸ்க் வேலையை விட்டு நீக்குவார் என தெரியாமல் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். சிலரோ இனி ட்விட்டரின் எதிர்காலம் சரியாக இருக்காது எனக்கூறி தாங்களாகவே வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கினால் புதுப்புது அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும், கருத்து சுதத்திரம் பாதுகாக்கப்படும், போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவது தடுக்கப்படும் என காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரை முன்னேற்றுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக எலான் மஸ்க், தான் உலகின் பெரும் பணக்காரர் என்பதை நிரூபிக்கும் விதமாக முதன் முதலில் ட்விட்டர் வருமானத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
ப்ளூ டிக்கிற்கு மாதக்கட்டணம்:
ட்விட்டர் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, நம் நாட்டில் 24 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் உள்ளன. அதே நேரத்தில், அமெரிக்காவில் சுமார் 77 மில்லியன் ட்விட்டர் கணக்குகள் உள்ளன மற்றும் ஜப்பானில் 58 மில்லியன் செயலியில் உள்ள பயனர்கள் உள்ளனர். இந்தக் கணக்கீடுகளின் அடிப்படையில், வரும் நாட்களில் ட்விட்டர் எவ்வளவு சம்பாதிக்கும் என்பதை மதிப்பிட்டு பார்த்தே, மஸ்க் ட்விட்டரை $44 பில்லியன் கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
கமர்ஷியல் சிந்தனைகள் கொண்ட தொழிலபதிபரான எலான் மஸ்க், சோசியல் மீடியா தளமான ட்விட்டரை வணிக தளமாக மாற்ற முடிவு செய்துள்ளார். ட்விட்டரை வாங்க முன்மொழிந்த எலான் மஸ்க், மே 4 அன்று பதிவு செய்த ட்வீட்டில், ட்விட்டர் சாதாரண பயனர்களுக்கு இலவசம் ஆனால் அரசு மற்றும் வணிகப் பயனர்களிடமிருந்து சில தொகை வசூலிக்கப்படும், எனத் தெரிவித்தார்.
தற்போது 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் தங்களது அக்கவுண்ட்டை ப்ளூ டிக் உடன் வைத்துக்கொள்ள விரும்புவோர் மாதம் 8 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 661.73 செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
ட்விட்டருக்கு மாதச் சந்தா செலுத்தும் பயனர்கள் பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை, நீண்ட வீடியோ மற்றும் ஆடியோவை இடுகையிடும் திறன், குறைவான விளம்பரங்கள் ஆகியவற்றை பெற முடியும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு ட்விட்டர் பயனர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ட்விட்டருக்கு குவியும் எதிர்ப்பு:
ட்விட்டர் எடுத்த இந்த முடிவுக்கு பிரபல பாலிவுட் நடிகரும் விமர்சகருமான கமல் ரஷித் கான் தனது பாணியில் விமர்சித்துள்ளார். கேஆர்கே என்று அழைக்கப்படும் இவர், ட்விட்டரில் சுவாரஸ்யமான மற்றும் காரசாரமான விஷயங்களை பகிர்வதில் பிரபலமானவர் ஆவார்.
'மாதா மாதம் பணம் செலுத்த எனக்கு நேரமில்லை. அதனால் ஐந்தாண்டுகளுக்கு ஒரே தொகையாக செலுத்துகிறேன். இணைப்பை அனுப்புங்கள்' என ட்வீட் செய்துள்ளார்.
KRK இந்த ட்வீட்டை உண்மையாக பணம் செலுத்தும் எண்ணத்துடன் செய்தாரா? அல்லது எலான் மஸ்க்கை வம்பிற்கு இழுக்க செய்தாரா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், மற்றொரு பதிவில்
“அப்படியே லைஃப் டைம் பிரீமியம் இருந்தாலும் சொல்லுங்கள்... ஏனெனில் எங்களில் பெரும்பாலானோர் வாழ்நாள் முழுவதற்குமான கட்டணத்தை செலுத்தத் தயாராக உள்ளோம்,” என பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு பதிவில்,
“போகிற போக்கைப் பார்த்தால் கங்கனா ரணாவத் விரைவில் தனது ட்விட்டரை கணக்கை திரும்ப பெற வாய்ப்புள்ளது போல் தெரிகிறது...” குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவரத்திலோவா,
“நான் ஒன்றும் ட்விட்டர் ப்ளூ டிக்கிற்காக விண்ணப்பிக்கவில்லை. ஒருநாள் அதுவாகவே தான் எனது அக்கவுண்டில் தோன்றியது. அதனை திரும்ப எடுத்துக்கொள்வதாக இருந்தால் தாரளமாக செய்யலாம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
"நான் ட்விட்டரை பேச்சு சுதந்திரத்திற்காக வாங்குகிறேன், பணத்திற்காக அல்ல," என எலான் மஸ்க் பதிவிட்ட பழைய ட்வீட்களை பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், ப்ளூ டிக்கிற்காக உடனடியாக உங்களிடமிருந்து $8/மாதம் வசூலிக்கப்படும் ... என்ன ஒரு பரிதாபம்,” என பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் பதிலடி:
ட்விட்டர் ப்ளூ டிக் கட்டணம் மூலம் வசூலிக்கப்படும் தொகையில் இருந்து கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு பணம் தரப்படும் என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டரின் வருவாயை பெறுக்குவதற்காக எலான் மஸ்க் அறிவித்துள்ள இந்த புதிய அம்சத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
சோசியல் மீடியாவில் நேற்று முதலே விவதாப் பொருளான ப்ளூ டிக் விவகாரம் குறித்து எலான் மஸ் பதிலடி கொடுத்துள்ளார், புகார் செய்பவர்கள் அனைவருக்கும், புகார்களைத் தொடரவும், ஆனால் 8 டாலர்கள் என்பதில் மாற்றமில்லை,” என பதிவிட்டுள்ளார்.
ப்ளூ டிக் எதற்கு பயன்படுகிறது:
பிரபலங்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சிஇஓக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தங்களது கணக்கை நிரூபிக்கப்பட்ட உண்மையானது என்பதை காண்பிக்க ப்ளூ டிக்கை பயன்படுத்துகின்றனர்.
ட்விட்டர் 2021 இல் ப்ளூ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது பல பிரீமியம் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது, ட்வீட்களை எடிட் செய்தல், ட்வீட்களை அன்டூ செய்தல் போன்றவை ட்விட்டர் ப்ளூ டிக்குக்கு கூடுதலாக இருக்கும்.
ஏற்கனவே ப்ளூ டிக் இருப்பவர்கள் கூட மீண்டும் சரிபார்ப்பிற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இனி ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு மாதம் 4.99 டாலர்கள் வரை மாதச்சந்தா வசூலிக்கப்படும் (இந்திய மதிப்பில் ரூ.500) என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப இணைய தளமான The Verge குறிப்பிட்டிருந்தது. புதிய ப்ளூ டிக் பெற விரும்புவோருக்கு $19.99 கட்டணம் வசூலிக்கப்படு என்றும் கூறப்படுகிறது.
90 நாட்களுக்குள் சந்தா தொகையைச் செலுத்தாவிட்டால் ப்ளூ டிக் அம்சம் திரும்பப் பெறப்படும் என்றும், இதனை நவம்பர் 7ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கட்டளை பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.