எலான் மஸ்கிற்கு உதவும் சென்னை பொறியாளர் - யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டர் ஒப்பந்தத்தை முடித்து அதை தனது சொந்தமாக்கியுள்ளார். பல லட்சம் கோடி செலவு செய்து வாங்கிய நிறுவனத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இதன் பின்னணியில் இந்தியர் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.
பில்லியனர் எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டர் ஒப்பந்தத்தை முடித்து அதை தனது சொந்தமாக்கியுள்ளார். பல லட்சம் கோடி செலவு செய்து வாங்கிய நிறுவனத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இரவு பகல் பாராமல் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஆனால், தற்போது இதன் பின்னணியில் இந்தியர் ஒருவர் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அக்ரவால் நீக்கப்பட்டார். ஆனால் மீண்டும் இப்போது அந்த தளத்தை சிறப்பாக்க ஒரு இந்தியரை நாடியுள்ளனர். அவர் ஸ்ரீராம் கிருஷ்ணன். ஸ்ரீராம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர், இவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்...
யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி இருவரும் சென்னையில் பிறந்தவர்கள் ஆவர். தற்போது இந்த தம்பதி சான் பிரான்சிஸ்கோவின் நொயே பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர்.
2002ம் ஆண்டு யாஷூ சாட் ரூம் மூலமாக இருவருக்குள் மலர்ந்த நட்பு, நாளாடைவில் காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதான மகன் உள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணனின் தந்தை இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிகிறார், தாய் இல்லத்தரசி ஆவார்.
2001-05ல் அண்ணா பல்கலைக்கழகத்தின் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த ஸ்ரீராம், பின்னர் அமெரிக்கா சென்றார். 21 வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
அதன் பின்னர், யாஹூ, ஃபேஸ்புக், மற்றும் ஸ்னாப்-யில் பணியாற்றியுள்ளார். ஸ்ரீராம் முன்பு ட்விட்டர், மெட்டா, ஸ்னாப் ஆகியவற்றில் தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுக்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். ட்விட்டரில், அவர் 2017 முதல் 2019 வரை முக்கிய நுகர்வோர் தயாரிப்பு குழுவை வழிநடத்தியுள்ளார். 'புரோகிராமிங் விண்டோஸ் அஸூர்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
2020ம் ஆண்டு கிளப் ஹவுஸில் முக்கிய முதலீட்டாளராக இணைந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், 2021ம் ஆண்டு A16z என அழைக்கப்படும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹோரோவிட்ஸ்-ஸில் (Andreesen Horowitz) பங்குதாரராக இணைந்துள்ளார்.
இவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், ஃபேஸ்புக் ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார்.
ட்விட்டருக்கு உதவும் இந்தியர்:
எலான் மஸ்கிற்கு ஸ்ரீராம் கிருஷ்ணன் நெருங்கிய நண்பர் ஆவார். பிரபல ஆடியோ செயலியான கிளப்ஹவுஸில் கிருஷ்ணன் தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் இணைந்து 'தி குட் டைம் ஷோ' என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றனர். இதில் எலோன் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், ஸ்டீவ் பாமர் போன்ற பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ள நிலையில், அதனை எப்படி செய்வது மார்க்கெட்டில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்களில் ஸ்ரீராமின் ஆலோசனைகளை எலான் மஸ்க் பெறக்கூடும் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
"நான் ட்விட்டரில் எலான் மஸ்க்கிற்கு சில சிறந்த நபர்களுடன் இணைந்து தற்காலிகமாக உதவி செய்கிறேன். இது மிகவும் முக்கியமான நிறுவனம் என்று நான் நம்புகிறேன். ட்விட்டர் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்... எலான் மஸ்க் மட்டுமே அதைச் செய்ய முடியும்," என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் பணியாற்றி போது ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் முகப்பு காலவரிசை, இயங்குதள புதிய பயனர் இடைமுகம், தேடல், கண்டுபிடிப்பு, பார்வையாளர்களின் வளர்ச்சி போன்ற தயாரிப்புகள் தொடர்பான குழுக்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதால் அவரது திறமை மற்றும் அறிவை பயன்படுத்திக்கொள்ள எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
முடிந்தது டீல் - ஒரு வழியாக ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் முதலில் செய்தது என்ன?