‘ப்ளூ டிக்’ தொடர ரெடியா இருங்க - மூன்று கலர் டிக் அடுத்த வாரம் அறிமுகம்!
ட்விட்டர் ப்ளூ டிக் சேவையை மறுபடியும் வரும் 29ம் தேதி முதல் தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பிரபலமான ட்விட்டர் தளத்தை வாங்கியப் பிறகு, பல சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ட்விட்டர் நிர்வாகத்தில் இருந்த உயர் அதிகாரிகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பணியை விட்டு வெளியேறினர்.
இதுவரை செய்தது போதாது என்று எலான் மஸ்க், 'யார் வேண்டுமானாலும் ட்விட்டர் ப்ளூவை விலை கொடுத்து வாங்கலாம்' என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதற்கு உலகம் முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ட்விட்டர் கணக்குகளைச் சரியாகச் சரிபார்க்கத் தவறுவது, பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் என்பதால் மாதச் சந்தா முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தார்.
ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டரின் புளூ டிக் கணக்குச் சேவைகளுக்கு பயனர்கள் மாதத்திற்கு $8 செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, இந்தக் கொள்கையை மீண்டும் தொடங்கும் முடிவு ஒத்திவைக்கப்படுவதாக சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.
இதையடுத்து, ப்ளூ டிக் மாத சந்தா செலுத்தி ’ப்ளூ டிக்’ வாங்கிய நிறைய நபர்கள் பிரபல நிறுவனம் மற்றும் பிரபலங்களின் பெயரில் அக்கவுண்ட் பெயரை மாற்றி சர்ச்சைக்குறிய ட்வீட்களை பதிவிட்டனர். இது ட்விட்டருக்கு பெரும் பிரச்சனையைக் கொண்டு வந்தது. இதனால் பணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ டிக் பெறும் நடைமுறையை எலான் மஸ்க் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தவிட்டார்.
"ஆள்மாறாட்டம் செய்வதை நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக ஏற்படும் வரையில் ப்ளூ டிக் வெரிபிகேஷனை நிறுத்தி வைக்கிறோம். தனிநபர்களை விட நிறுவனங்களுக்கு வெவ்வேறு வண்ணச் சரிபார்ப்பைப் பயன்படுத்த இருக்கிறோம்" என நவம்பர் 22ம் தேதி எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.
அரசியல்வாதிகள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பொது நபர்களின் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடரும் என அறிவித்துள்ள எலான் மஸ்க், தற்போது நிறுவனங்களுக்கு கோல்ட் டிக் மார்க்கும், அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கிரே டிக் மார்க்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த சேவையை வரும் 29ம் தேதி முதல் மீண்டும் தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு, ஏற்கனவே ப்ளு டிக் வைத்திருப்பவர்கள் கணக்குகள் தனித்தனியாக உண்மையாவையா என வெரிபை செய்யப்பட்ட பின்னரே அதை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.
'இதை செய்யாவிட்டால் வெளியேறுங்கள்' - ட்விட்டர் ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!