'Hashtag Day' - நம்ம ‘வலிமை' தான் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் தெரியுமா?
ட்விட்டர் இந்தியா பட்டியல் வெளியீடு!
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தொடங்கப்பட்ட பிறகு, கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி ஹேஷ்டேக்குகள் (Hashtag) அறிமுகம் செய்யப்பட்டது. இன்றுடன் ஹேஷ்டேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு 14 ஆண்டுகாலம் ஆவதால் ட்விட்டர் நிறுவனம், இன்று 'Hashtag Day' கொண்டாடி வருகிறது.
ஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான நாட்களில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ஹேஷ்டேக் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தமிழ் திரைப்படங்களின் இடங்களில் பெயர்கள் இடம்பிடித்துள்ளது.
முதலிடத்தில் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகும் அடுத்தப்படம் வலிமை. #Valimai முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது. நடிகர் அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின் இயக்குநர் ஹெச்.வினோத் உடன் இணைந்திருக்கும் படம் தான் 'வலிமை'.
இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வுகள், சர்வதேச நிகழ்வுகள் என ஒரு இடம் விடாமல் ரசிகர்கள் ரகளை செய்தது நியாபகம் இருக்கலாம். அப்படி இருக்கையில் ட்விட்டரிலும் ‘வலிமை' ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு அப்டேட் கேட்டுவந்தனர்.
மேலும், சமீபத்தில் வலிமை படத்தின் ‘வேற மாதிரி' பாடல் ட்விட்டர் ட்ரென்டிங்கில் இடம்பிடித்தது. இதுபோன்ற காரணங்களால் வலிமை ஹேஷ்டேக் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதற்கடுத்து விஜய் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான ‘மாஸ்டர்' #master படம் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். ஆரம்பம் முதலே இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இருந்துவந்தது.
இதேபோல், மூன்றாம் இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் தயாராகி வரும் 'சர்க்காரு வரி பாட்டா' (#sarjaruvaaripaata) படமும், நான்காவது இடத்தில் நடிகர் அஜித்குமாரும், (#ajithkumar) ஐந்தாம் இடத்தில் 'தளபதி 65’ (#thalapathy65) ஹேஷ்டேகுகள் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 10 இடங்களில் ஆறு இடங்கள் திரைப்படங்களை அதுவும் தென்னிந்திய மொழத் திரைப்படங்கள் சம்பந்தப்பட்டவையே பிடித்துள்ளன. ஒன்பதாவது இடத்தில் மட்டும் #covid19 ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.
இதனிடையே, ஹேஷ்டேக் நாள் தொடர்பாக ட்விட்டர் இந்தியா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில்,
"#HashtagDay என்றால் என்ன? ஹேஷ்டேக் 2007-ல் ட்விட்டரில் பிறந்தது. இன்றுடன் ஹேஷ்டேக்கின் 14-வது ஆண்டு நிறைவு ஆகும். இயக்கங்கள், பேன்டம்ஸ் மற்றும் நிகழ்வுகளை ரியல்-டைமில் பிரதிநிதிதுவப்படுத்த ஹேஷ்டேக் கொண்டுவரப்பட்டது. இந்த ஆண்டு மேலே சொன்ன பட்டியலில் இடம் பெறாத உங்களுக்கு பிடித்த ஹேஷ்டேக் எது?" என்று கேட்டுள்ளது.