'ஆபீஸ் வர வேணாம்; அப்படியே வீட்டுக்கு திரும்புங்' - ட்விட்டர் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் எலான் மஸ்க்!
"நீங்கள் ஒரு அலுவலகத்தில் இருந்தால் அல்லது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இருந்தால், தயவுசெய்து வீட்டிற்குத் திரும்புங்கள்." என தனது ஊழியர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"நீங்கள் எங்கள் அலுவலகத்தில் இருந்தால் அல்லது ட்விட்டர் அலுவலகத்தை நோக்கி பணிக்கு வந்து கொண்டிருந்தால், தயவுசெய்து வீட்டிற்குத் திரும்புங்கள்," என தனது ஊழியர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து பிரபலமான சோசியல் மீடியா தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிவிட்டால் போலி செய்திகள் இருக்காது, வதந்திகள் பரவாது, தவறான கணக்குகள் டெலிட் செய்யப்படும், புதுப்புது அப்டேட்கள் அறிமுகமாகும் என பல கருத்துக்கள் பரவி வந்தன.
ஆனால், எலான் மஸ்க் வந்த முதல் நாளே ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த பராக் அக்ரவால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை பதவியை விட்டு தூக்கினார். அதனையடுத்து, நிறுவனத்தின் விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் மனித வளப் பிரிவுகளில் அமர்ந்திருப்பவர்கள் உட்பட மற்றவர்கள் கடந்த வாரம் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
அதற்கு அடுத்தபடியாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 75 சதவீத ஊழியர்களை பணியை விட்டு தூக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் விடுமுறை கட், 12 மணி நேர ஷிப்ட் என எலான் மஸ்க் விதித்த அனைத்து கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு ஊழியர்கள் கடுமையாக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இன்று முதல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வேலையில் ட்விட்டர் நிர்வாகம் இறங்கியுள்ளது.
அலுவலகத்திற்கு வர வேண்டாம்:
ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து நிலையற்ற தன்மை நீடித்து வந்த நிலையில், தற்போது ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று காலை 9 மணிக்கு ட்விட்டர் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில்,
"நீங்கள் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தால்... அல்லது அலுவலகத்தில் இருந்தால்... தயவுசெய்து வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்." எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து ட்விட்டர் அலுவலகங்களும் மூடப்படும் என்றும், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தடை விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு பணியாளரின் பாதுகாப்பையும், ட்விட்டர் அமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தரவையும் உறுதிப்படுத்த உதவும் வகையில், அனைத்து விதமான ஊழியர்களின் அணுகலும் தடை செய்யப்படுகிறது.”
பணிநீக்கம் செய்யப்படாத ஊழியர்களுக்கு அவர்களின் வேலை என்னென்ன என்பது குறித்து மின்னஞ்சள் மூலமாக தெரிவிக்கப்படும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ட்விட்டரை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில், வெள்ளிக்கிழமையன்று எங்களது உலகளாவிய பணியாளர்களைக் குறைப்பதற்கான கடினமான செயல்முறையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்," என குறிப்பிடப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரின் உட்கட்டமைப்புச் செலவினங்களை குறைப்பதன் மூலமாக 1 பில்லியன் டாலர்கள் வரை சேமிக்க திட்டமிட்டுள்ளதால் இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொகுப்பு: கனிமொழி
ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ : அதலாம் குறைக்க முடியாது’ - எலான் மஸ்க் கறார் பதில்!