'வஹீதா ரஹ்மான்' - தமிழகம் தந்த பாலிவுட் ராணிக்கு தாதா சாகேப் பால்கே விருது!
தமிழகத்தைச் சேர்ந்தவரான பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 2023ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரைத் துறையில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ பழம்பெரும் பாலிவுட்நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோரைக் கௌரவிக்கும் வகையில், இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் ’தாதாசாகெப் பால்கே’ அவர்களின் பெயரில், 1969ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய அரசால் தாதா சாகேப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன், வினோத் கன்னா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ரே, கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர். கொரோனா தாக்கத்தால் கடந்த 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு கடந்தாண்டு தான் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி என பல மொழித் திரைப்படங்களில் சுமார் 68 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். பாலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவராக வஹீதா ரஹ்மான் உள்ளார்.
இவரது கலையுலகச் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது இவருக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் நடிகை
வஹீதா ரஹ்மான் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1938ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று பிறந்தவர். அவரது தந்தை மாவட்ட நீதியாக இருந்தவர். பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தபோதும், நடனத்தின் மீது கொண்ட காதலால் பரதநாட்டியத்தை சிறுவயது முதலே கற்றுக் கொள்ளத் தொடங்கினார். நடனத்தின் மீது ஒருபுறம் ஆர்வம் இருந்தாலும், மருத்துவராக வேண்டும் என்பதுதான் இவரது சிறுவயது கனவாக இருந்துள்ளது.
ஆனால், அவரது தந்தையின் திடீர் மறைவு காரணமாக குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் வருமானத்திற்காக சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயம் வஹீதாவிற்கு ஏற்பட்டது. நன்றாக நடனம் ஆடுபவர் என்பதால், திரைத்துறை அவரை இருகரம் நீட்டி வரவேற்றது.
1955ம் ஆண்டு ’ரோஜுலு மராயி’ என்ற தெலுங்கு படத்தில் ’எருவக சாகலோய்’ என்ற பாடலில் தான் வஹீதா அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் காலம் மாறிப்போச்சு படத்தில் குரூப் டான்ஸராகவும் அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக, 1956ம் ஆண்டு வெளியான எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் அவரை நன்கு பிரபலமாக்கியது.
வில்லி கதாபாத்திரம்
பின் 1956ம் ஆண்டு ராஜ் கோஸ்லா இயக்கிய சிஐடி படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரீ கொடுத்தார். முதல் படத்திலேயே வில்லி கதாபாத்திரம். ஆனாலும், பாலிவுட் ரசிகர்களுக்கு வஹீதாவை மிகவும் பிடித்துப் போக, தொடர்ந்து ரஹ்மான் ககாஸ் கே பூல், சாஹிப் பிவி அவுர் குலாம், கைடு, காலா பஜார், ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ராம் அவுர் ஷியாம், ஆத்மி, தீஸ்ரீ கசம் மற்றும் காமோஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் திரை வரலாற்றில் தனக்கென நீங்கா இடத்தைப் பிடித்தார்.
இவரது படங்கள் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக அவர் நடித்த படங்களில் பியாசா, காகஸ் கி பூல், செளதாவி கா சந்த், பிவி அவுர் குலாம், கைடு, காமோஷி போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. ‘ரேஷ்மா அண்ட் ஷீரா’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
சத்யஜித் ரேயின் பெங்காலி திரைப்படமான அபிஜானில், வஹீதா ‘குலாபி’ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி எனப் பல மொழிகளில் நடித்த போதும், பாலிவுட்டிலேயே அவர் அதிக படங்களில் நடித்துள்ளார்.
காதல் திருமணம்
தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்ததால், பாலிவுட்டிலேயே செட்டிலான வஹீதா, ஷாகுன் (1964) திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கமல்ஜீத் என்பவரைக் காதலித்து, 1974ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஷோஹைல் மற்றும் கஷ்வி என இரண்டு குழந்தைகள். திருமணத்திற்குப் பிறகு பெங்களூருவில் குடியேறிய வஹீதா, சுமார் 12 ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வில் இருந்தார்.
பின்னர், மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பி அவர், வயதான தாயார் மற்றும் பாட்டி வேடங்களில் ஓம் ஜெய் ஜகதீஷ் (2002), வாட்டர் (2005), ரங் தே பசந்தி (2006) மற்றும் டெல்லி 6 (2009) போன்ற திரைப்படங்களில் நடித்தார். அவை அனைத்தும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின், கமலின் விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தார். இப்படத்தில் கமலின் தாயாக அவர் நடித்திருந்தார்.
தாதா சாகேப் பால்கே விருது
சுமார் 5 தசாப்தங்களாக நடித்து வரும் வஹீதா, தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருவதால் என்றென்றெக்கும் மக்கள் மனதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 85 வயதாகும் வஹீதாவின் திரையுலகப் பயணத்தைக் கௌரவிக்கும் வகையில், தற்போது மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க முடிவு செய்துள்ளது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர்,
“இந்திய சினிமாவுக்காக வஹீதா ரஹ்மான் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான மதிப்பு மிக்க பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்பதை தெரிவிப்பதில் மகிவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்."
பத்மஸ்ரீ, பத்ம பூஷண் வஹீதா ஜி தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பின் மூலம் தான் சார்ந்திருக்கும் தொழிலில் சிறந்த உயரத்தினை அடையலாம் என்று இந்திய பெண் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வேளையில், வஹீதா இந்த உயரிய விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இந்திய சினிமாவின் ஒரு முன்னணி பெண்மணி, சினிமாவுக்கு பிறகான தனது வாழ்வை பொதுத் தொண்டுக்கு அர்ப்பணித்த ஒருவருக்கு செய்யும் பொருத்தமான மரியாதையாக இருக்கும். நமது திரைப்பட வரலாற்றின் உள்ளார்ந்த செழுமையாக இருக்கும் அவரது பங்களிப்பினை வணங்கி, அவரை நான் வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு மைல்கல்
தனது சிறந்த நடிப்பிற்காக ஏற்கனவே பல விருதுகளைக் குவித்தவர் வஹீதா. 1972ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், 2006ம் ஆண்டு NTR நேஷனல் விருது மற்றும் பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவரது திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது.
மகிழ்ச்சி
தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது தொடர்பாக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள வஹீதா,
“நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அரசிடம் இருந்து பெரிய விருது கிடைத்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
விருது பெற்ற வஹீதாவுக்கு பிரதமர் மோடி உட்பட முக்கியத் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.