Twitter vs Threads: டிவிட்டர் பயனர்களை தன் பக்கம் ஈர்க்குமா புதிய மெட்டா ‘த்ரெட்ஸ்’ ?
டிவிட்டர் சேவை அதன் கட்டுப்பாடுகளுக்காக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கு போட்டியாக அறிமுகம் ஆகியுள்ள மெட்டாவின் புதிய திரெட்ஸ் செயலியின் அம்சங்கள் பற்றி ஒரு பார்வை.
ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, டிவிட்டருக்கு போட்டியான ’த்ரெட்ஸ்’ சேவையை மொபைல் செயலி வடிவில் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமின் எழுத்து வடிவ சேவை என வர்ணிக்கப்படும் த்ரெட்ஸில், 500 எழுத்துகளில் பதிவுகளை வெளியிடலாம் மற்றும் ஐந்து நிமிடம் வரை வீடியோக்களை பகிரலாம்.
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் சார்பில், குறும்பதிவு சேவைக்குப் போட்டியாக புதிய சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மை காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், த்ரெட்ஸ் (Threads) எனும் பெயரில் இந்த சேவையை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
டிவிட்டருக்கு சவால்
டிவிட்டருக்கு போட்டி எனக் கூறப்படும் த்ரெட்ஸ் சேவை, டிவிட்டர் போலவே பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் சில முக்கிய வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.
மெட்டாவின் புகழ்பெற்ற புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமின் வரி வடிவம் போல இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் பயனர் பெயர் மூலமே இந்த சேவையை அணுகலாம்.
இந்த சேவையில் டிவிட்டர் போல குறும்பதிவுகளை வெளியிடலாம். டிவிட்டரில் 280 எழுத்துகள் என்றால், த்ரெட்ஸில் 500 எழுத்துகள் வரை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். மேலும், புகைப்படம் மற்றும் ஐந்து நிமிடம் வரை வீடியோக்களையும் பகிரலாம்.
செயலி வடிவம்
த்ரெட்ஸ் டைம்லைனில் பின் தொடர்பாளர்களின் பதிவுகள் மற்றும் அல்கோரிதம் மூலம் பரிந்துரைக்கப்படும் பதிவுகளை பார்க்கலாம். இன்ஸ்டாகிராமில் உள்ள பின் தொடர்பாளர்களை இதிலும் பின் தொடரலாம். இதில் பகிரும் பதிவுகளை இன்ஸ்டாவிலும் ஸ்டோரியாக எளிதாகப் பகிரலாம்.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கான் செயலி வடிவில் இந்த சேவையை அணுகலாம். த்ரெட்ஸ் இணையதளம் வாயிலாக செயலியை அணுகலாம் என்றாலும், டெஸ்க்டாப்பில் இந்த சேவையை அணுக முடியாது.
ஹாஷ்டேக் இல்லை
எலான் மஸ்க் கையகப்படுத்திய பிறகு மேற்கொண்டு வரும் கட்டுப்பாடுகளால் டிவிட்டர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அண்மையில் டிவிட்டரில் ஒருவர் பார்க்கக் கூடிய குறும்பதிவுகளுக்கான எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், டிவிட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் சேவை அறிமுகம் ஆகியுள்ளது. டிவிட்டரின் முக்கிய அம்சங்கள் இருந்தாலும், அதன் அடையாளங்களில் ஒன்றான ஹாஷ்டேக் வசதி த்ரெட்ஸில் இல்லை. அதே போல, நேரடி செய்தி (DM) அனுப்பும் வசதியும் இல்லை.
எனினும், த்ரெட்ஸ் பதிவுகளை யார் பார்க்கலாம் என்பதை கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு எப்படி?
அமெரிக்கா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் அறிமுகம் ஆகியுள்ளது. ஆரம்பித்த வேகத்தில் பத்து மில்லியன் பயனாளிகளுக்கு மேல் சேர்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
த்ரெட்ஸ் சேவை பயனர்கள் கருத்துகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் வாய்ப்பிருப்பதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், பிரபல யூடியூபர் மார்கஸ் பிரவுன்லிக்கான பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
த்ரெட்ஸ் சேவை இன்ஸ்டா செல்வாக்காளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிவிட்டர் அதிருப்தியாளர்களும் இந்த பக்கம் சாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரைவசி சர்ச்சை
எனினும், த்ரெட்ஸ் சேவையில் பயனாளிகளின் தனியுரிமை தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. த்ரெட்ஸ் சேவையில் பயனாளிகளிடம் இருந்து திரட்டப்படும் தரவுகளுக்கான நோக்கம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே, தனியுரிமை கொள்கைக் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் த்ரெட்ஸ் இன்னமும் அறிமுகம் ஆகவில்லை. இது தொடர்பாக மெட்டா முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
த்ரெட்ஸ் அறிமுக நிலையில் கவனத்தை ஈர்த்தாலும், டிவிட்டருக்கு போட்டியாக இதன் செயல்பாடுகளை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
Edited by Induja Raghunathan