கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் இரு பெங்களுரு கல்லூரி மாணவிகள்!
பெங்களூரு நெகிழ்ச்சி!
இந்த லாக்டவுனின் போது பெரும்பாலான இளைஞர்கள் வீட்டிலேயே இருக்கும்போது, ஆன்லைன் நிகழ்ச்சிகள் அல்லது கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள், அதிகரித்து வரும் கொரோனா இறப்புகளால் அதிர்ச்சியடைந்து ஒரு கல்லறையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிக்கோல் ஃபுர்டடோ மற்றும் அவரது உறவினர் டினா செரியன் ஆகியோர் தான் அந்த இரண்டு பெண்கள்.
ஹோசூர் சாலையில் உள்ள இந்திய கிறிஸ்தவக் கல்லறையின் கேட் எண் 4 இளம்பெண்கள் இருவரும் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் ஹியர் ஐம் ஸ்குவாட் என்று அழைக்கப்படும் தன்னார்வலர்களின் குழுவில் ஒரு பகுதியாக சமீபத்தில் இணைந்தனர்.
இந்த குழு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய உதவுகிறது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக, நிக்கோல் மற்றும் டினா இருவரும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைக் கொண்டு சென்று வருகின்றனர்.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் சமூகப் பணி இறுதி ஆண்டு இளநிலை மாணவரான நிக்கோல் மற்றும் மணிப்பாலின் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவி டினா இருவரும் தங்கள் கல்லூரி ஆண்டின் இறுதியில் உள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள இருவரும்,
“எங்கள் குடும்பங்களில் பலர் கொரோனா நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து நாங்கள் ஈர்க்கப்பட்டோம். உதவி செய்வது நல்லது. தற்போதையை சூழலில் ஆபத்து உள்ளது. இந்த நேரத்தில் சும்மா உட்கார்ந்திருப்பது இன்னும் மோசமானது," என்று 20 வயதாகும் நிக்கோல் கூறினார்.
நிக்கோல் மற்றும் டினா ஆகியோர் வீட்டில் இருப்பதற்குப் பதிலாக, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) அணிந்து கொண்டு நகரத்தில் உள்ள ஏழை மக்களுக்கு தன்னார்வத் தொண்டு செய்ய முடிவு செய்தனர்.
"நாங்கள் செய்திகளில் நிலைமையைக் காண்கிறோம், இறுதிச் சடங்குகளில் தன்னார்வத் தொண்டு செய்து வரும் எனது அப்பா, கள நிலைமை மிகவும் மோசமானது என்று எங்களிடம் கூறினார். நாங்கள் ஒருபோதும் இந்த வேலையைச் செய்ய அஞ்சவில்லை. பயப்பட இதில் ஒன்றுமில்லை. நாங்கள் எங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க முயற்சிக்கிறோம்.”
இதனால் நாங்கள் பாதிக்கப்படக்கூடாது, எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்படக் கூடாது என்று எச்சரியாகவும் இருக்கிறோம். தொண்டு செய்ய சென்ற முதல் நாளில் ஆம்புலன்ஸிலிருந்து சடலங்களை மயானத்திற்கு கொண்டு வரும் போது சற்று பயமாக இருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் எங்களுக்கு அந்த பயம் இல்லை, என்கிறார்கள் இருவரும்.
தகவல் உதவி: இந்தியா டுடே | தமிழில்: மலையரசு