‘லைப் சேஞ்சராக’ அமைந்த மாற்று விவசாயம்: இரு தெலங்கானா விவசாயிகளின் வெற்றி ரகசியம்!
தெலங்கானாவில் இரண்டு விவசாயிகள் ஒன்றாக இணைந்து விவசாயத்தில் புதுமைகளை புகுத்தி தங்களது விதியையே மாற்றி அமைக்கும் எஜமானர்களாக மாறியுள்ளனர்.
தெலங்கானாவில் இரண்டு விவசாயிகள் ஒன்றாக இணைந்து விவசாயத்தில் புதுமைகளை புகுத்தி தங்களது விதியையே மாற்றி அமைக்கும் எஜமானர்களாக மாறியுள்ளனர்.
மாற்றி யோசித்த இரு விவசாயிகள்:
உலகத்திற்கே உணவளித்தாலும் விளைச்சலுக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் திண்டாடுவதே எங்கும் விவசாயிகளின் நிலையாக உள்ளது. அதிலும் காலநிலை மாற்றம், கொரோனா ஊரடங்கு, மழை வெள்ளம் என ஒன்றிலிருந்து மீண்டால் மற்றொன்று என விவசாயிகளைப் படாய்படுத்தி எடுக்கும் பிரச்சனைகளும் ஏராளம். இதை எல்லாம் தாண்டி, எதையும் மாற்றி யோசிக்கும் விவசாயிகள் மட்டுமே சோதனைகளை கடந்த சாதனையாளர்களாக உயர்கிறார்கள்.
தெலுங்கானாவில் அப்படித்தான் இரண்டு விவசாயிகளின் மாற்றி யோசிக்கும் திறன் அவர்களுக்கு அபார வெற்றியைக் கொடுத்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்களது அன்றாட சம்பாதியத்திற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள தட்கல் கிளஸ்டர் பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் மட்டும் வழக்கத்திற்கு மாறான மாற்று பயிரை விளைவித்து லாபத்தை அள்ளியுள்ளனர்.
பாசுமதி மூலம் லாபம் ஈட்டிய மோச்சி பண்டாரி:
சப்தா (கே), சப்தா (பி), பாபுல்காம் மற்றும் தட்கல் ஆகிய 4 கிராமங்களை உள்ளடக்கியது தான் தட்கல் கிளஸ்டர் பகுதி. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காங்டி மண்டலத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஒவ்வொரு பருவத்திலும் நெல் பயிரிடும் போது, தட்கல் கிராமத்தைச் சேர்ந்த மோச்சி பண்டாரி மற்றும் சப்டா (பி) கிராமத்தைச் சேர்ந்த பி ஹவப்பா என இரு விவசாயிகள் மட்டும் நெல் பயிரால் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக நிலையான லாபத்தை உறுதிப்படுத்தும் மாற்று பயிர்களை பயிரிட வேண்டும் என முடிவெடுத்தனர்.
லாபம் ஈட்ட மாற்றுப் பயிரை விளைவிக்க வேண்டும் என முடிவெடுத்த விவசாயிகளுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. எனவே காங்கடி மண்டலத்தில் உள்ள தட்கல் கிளஸ்டரின் வேளாண் விரிவாக்க அலுவலர் சந்தோஷ் உதவியை நாடினர்.
சந்தோஷின் ஆலோசனையின் படி பண்டாரி, ஹவப்பா இருவரும் அதிக லாபம் கொடுக்கும் மாற்று பயிர்களை தேர்வு செய்தனர். பண்டாரி தனது நிலத்தில் அரை ஏக்கரில் பாசுமதி நெற்பயிரை விளைவித்தார். அந்த கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் பலரும், பாசுமதி ரகத்தை பயிரிட்டால் நல்ல விலை கிடைக்காது என்று நினைத்தாலும், அதற்கு நாடு முழுவதும் அதிக கிராக்கி இருப்பதை பண்டாரி அறிந்திருந்ததால் நம்பிக்கையுடன் புதிய முயற்சியில் இறங்கினார்.
தனக்கு கிடைத்த விளைச்சல் குறித்து பண்டாரி கூறுகையில்,
“அரை ஏக்கர் நிலத்தில் பாசுமதி நெற்பயிரை பயிரிட்டதன் மூலம் ஒரு பருவத்திற்கு 4 மூட்டை நெல்லை சாகுபடி செய்து வருகிறேன். இதுவரை 1.5 குவின்டால் பயிரை அறுவடை செய்துள்ளேன் , இது ஒரு ஏக்கருக்கு 6000 ரூபாய் கிடைத்துள்ளது, இதன் மூலமாக மூன்று ஏக்கருக்கு 18,000 வருவாய் ஈட்டியுள்ளேன்,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார்.
தனது மீதமுள்ள ஐந்து ஏக்கரில் வெள்ளை உளுந்து, பருத்தி, பயறு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு வரும் பண்டாரி, பாசுமதி வகை நெல் சாகுபடிக்கு விதைகளை வழங்குவதன் மூலம் மற்ற விவசாயிகளுக்கும் உதவி வருகிறார். இதன் மூலம் அவர்கள் நஷ்டமில்லாத சிறந்த விவசாய முறையை தேர்வு செய்ய உதவி வருகிறார் பண்டாரி.
எள்ளு வயலில் லாபத்தை அள்ளிய ஹவப்பா:
இதற்கிடையில், சப்தா (பி) கிராமத்தில் உள்ள ஹவப்பாவின் வயலில் எள் செடிகள் பசுமையாக வளர்ந்து நிற்கின்றன. உள்ளூர் சந்தைகளில் எள்ளுக்கு இருக்கும் அதிகத் தேவை மற்றும் மனித தலையீடு இல்லாமலேயே தானாகவே வளரும் எள் செடியின் திறன் காரணமாக ஹவப்பா அதனை தேர்ந்தெடுத்துள்ளார்.
“இரண்டு வருடங்களுக்கு முன் நான் எள் சாகுபடியைத் தொடங்கியபோது, கால் ஏக்கர் நிலத்தை மட்டுமே அதற்காக பயன்படுத்தினேன். அதனால் எனக்கு நல்ல லாபம் கிடைத்து. உரம் மற்றும் கூலி ஆகிய செலவினங்களும் குறைவாக இருந்ததால், மேலும் கால் ஏக்கருக்கு பயிர் செய்தேன். தற்போது மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டுகிறேன்,” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹவப்பா.
எள்ளைத் தவிர, இந்த விவசாயி தனது மீதமுள்ள ஐந்தரை ஏக்கரில் உளுந்து, பருத்தி, பருப்பு மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றை பயிரிடுகிறார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி