ஸ்ட்ராபெரி பயிரிட்டு வாட்ஸ்அப், இஸ்டா மூலம் நல்ல லாபம் ஈட்டும் சகோதரன்-சகோதரி!
சண்டிகரைச் சேர்ந்த சகோதர-சகோதரி இருவரும் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்து வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் ஆர்டர் பெற்று வெற்றிகரமாக விற்பனை செய்து வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முதலில் இந்த அறிவிப்பு வெளியானதும் நாம் அனைவருமே செய்வதறியாது திகைத்துப் போனோம். திடீரென்று தடைபட்ட வாழ்க்கையின் ஓட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் நாம் அனைவரும் திணறிப்போனதென்னவோ உண்மைதான். ஆனாலும் யதார்த்த சூழலை உணர்ந்து வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக் கொண்டுள்ளோம்.
இருப்பினும், இன்றைய நெருக்கடியான சூழலிலும் பலர் புதிய வணிக முயற்சியைத் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். அப்படித்தான் சகோதர சகோதரிகளான விருட்டி, பார்த் நருலா இருவரும் வெற்றிகரமாக ஸ்ட்ராபெர்ரி வணிகத்தைத் தொடங்கி லாபம் ஈட்டி வருகிறார்கள்.
விருட்டி, பார்த் இருவரும் சண்டிகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சண்டிகரில் சொந்தமாக சில ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்ய விரும்பினார்கள்.
பார்த், விவசாயம் தொடர்பான நவீன தொழில்நுட்பம் குறித்து இணையத்தில் தகவல்கள் திரட்ட ஆரம்பித்தார். இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி இவர்கள் ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டார்கள். நல்ல பலன் கிடைத்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் விளைச்சலைப் பார்த்து இருவரும் மகிழ்ந்தார்கள்.
”முதலில் அரை ஏக்கர் நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்தோம். தற்போது 4 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறோம்,” என்கிறார் விருட்டி.
இவர்கள் பயிரிடும் ஸ்ட்ராபெர்ரி ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது.
விற்பனை
விருட்டி, பார்த் இருவரும் ஆரம்பத்தில் விளைச்சலை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் விற்பனை செய்தார்கள். விளைச்சல் அதிகரிக்கவே சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யத் தீர்மானித்தனர்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டது. இருவரும் உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விற்பனைக்குத் தேவையான அனுமதியைப் பெற்றனர். பின்னர் ஸ்ட்ராபெர்ரிகளை வீடு வீடாகக் கொண்டு சென்று விற்பனை செய்தனர்.
இந்த சகோதர சகோதரி சாகுபடி செய்யும் ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி Freshville என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வாட்ஸ் அப் மூலமாகவும் ஆர்டர்கள் எடுக்கிறார்கள்.
ஸ்ட்ராபெர்ரி பயிரிடுதல், சாகுபடி போன்றவற்றை பார்த் கவனித்துக்கொள்கிறார். சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர்களைக் கையாளுதல், வணிக செயல்பாடுகள் போன்றவற்றிற்கு விருட்டி பொறுப்பேற்றுள்ளார்.
11 ஊழியர்களை இவர்கள் பணியமர்த்தியுள்ளனர். இவர்கள் ஸ்ட்ராபெர்ரிக்களை பறிப்பது, பேக்கேஜிங், டெலிவரி போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தினமும் 80 டெலிவரி வரை செய்யப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள்.
மேலும், ஸ்ட்ராபெர்ரி கொண்டு ஜாம், ஸ்லஷ், சர்க்கரை இல்லாத ஜாம் போன்றவற்றைத் தயாரித்து ஆர்டர்கள் எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள். இருவரும் தங்கள் வருங்காலத் திட்டம் குறித்து பகிர்ந்துகொள்ளும்போது,
“நகரில் இருக்கும் பல்வேறு சூப்பர்மார்கெட்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். மற்ற நகரங்களில் விரிவடைய விரும்புகிறோம்,” என்று நம்பிக்கை மிளிர கூறுகின்றனர்.