'ஊதிய உயர்வு இல்லை; ஆனால் 30,000 ரூபாய் மதிப்பு டிஷர்ட்' - Unacademy நிறுவனருக்கு ஏற்பட்ட சர்ச்சை என்ன?
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வில்லை எனும் அறிவிப்பை வெளியிட்ட கூட்டத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த டி-ஷர்ட்டை அணிந்திருந்தால் இணையவாசிகளால் விமரிக்கப்பட்ட அன்அகாடமி நிறுவனர் கவுரவ் முன்ஜாலுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வில்லை எனும் அறிவிப்பை வெளியிட்ட கூட்டத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த டி-ஷர்ட்டை அணிந்திருந்தால் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்ட அன்அகாடமி நிறுவனர் கவுரவ் முன்ஜாலுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கல்வி ஸ்டார்ட் அப் 'UnAcademy' நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கவுரவ் முன்ஜால், அண்மையில் ஊழியர்கள் கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இணையம் வழி நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய முன்ஜால், நிறுவனம் இலக்குகளை அடையததால் இந்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை, என கூறியிருந்தார்.
"கடந்த ஆண்டு சாதாரண ஆண்டாக அமைந்தது, இந்த ஆண்டு சற்று மேம்பட்டிருந்தாலும் நாம் இலக்குகளை அடையவில்லை. இது கடினமானது. எனவே, இந்த ஆண்டு ஊதிய உயர்வு பரிசீலனை இல்லை எனும் கடினமான செய்தியை தெரிவிக்கிறேன்," என்று கூறினார்.
நிறுவன நிலை குறித்து விளக்கம் அளித்தவர், பணத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், நிறுவனம் தொடர்ந்து நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியிருந்தார்.
போட்டி நிறுவனங்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், நாம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம், என்றும் கூறினார்.
இந்த கூட்டம் தொடர்பாக வெளியான வீடியோவில் அவர் ரூ.30,000 வரை விலை உயர்ந்த டி-ஷர்ட் அணிந்திருப்பதை பார்த்த சிலர் சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.
"30,000 ரூபாய் மதிப்புள்ள பர்பரி பிராண்ட் டி-ஷர்ட் அணிய முடிகிறது, ஆனால், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க முடியவில்லையா என்பது போல பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்."
இதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பலர் முன்ஜாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் இது தொடர்பாக பரப்பரப்பாக செய்தி வெளியிடுவதையும் விமர்சித்துள்ளனர்.
ஜெட்டா சூட் நிறுவனர் பவின் துராக்கியா,
"400 டாலர் டிஷர்ட்டிற்கு பதிலாக 4 டாலர் டிஷர்ட் அணிந்திருந்தால் நிலைமை மாறியிருக்குமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு நிறுவனராக முன்ஜால் பொறுப்பேற்று பேசியது அவரது டி-ஷர்ட்டை விட முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
பிரசண்டேஷன்ஸ் ஏஐ நிறுவனர் சுமந்த் ராகவேந்திரா,
"என்னுடைய பர்பரி டிஷர்ட்களை எல்லாம் உடனடியாக மலிவு விலை டிஷர்ட்டாக மாற்ற வேண்டும் போலும்," என எக்ஸ் பதிவில் தெரிவித்தார். இந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுவிட்டது.
முன்ஜாலை விலை உயர்ந்த டிஷர்ட்டிற்காக விமர்சிப்பவர்கள் அவர் வளர்ந்து வந்த பயணத்தை அறியாதவர்கள் என அன்சுல் அகர்வால் கூறியுள்ளார். பாசிடிவைஸ் சாப்ட்வேர் சி.இ,ஓ. பரக் மேத்தா, வெற்றிகரமான மனிதர்கள் மீது பலருக்கும் பொறாமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் அன் அகடமி, சுமார் 250 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது என்பதும் கூடுதல் தகவல்.
Edited by Induja Raghunathan