'என்னுடன் தமிழிலே பேசினார்; மறக்க முடியாத 16 நிமிட சந்திப்பு’ - சுந்தர் பிச்சை உடன் செல்வமுரளி உரையாடியது என்ன?

இன்று உலகமே இது இன்றி இயங்காது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ள மாபெரும் நிறுவனமான ‘கூகுள்’-இன் சிஇஓ ஆக இருக்கிறார் சுந்தர் பிச்சை. இத்தகைய ஆளுமையை சந்திக்க பலரும் காத்திருக்கையில், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏன்? எதற்கு, என்ன பேசினார்கள்?

'என்னுடன் தமிழிலே பேசினார்; மறக்க முடியாத 16 நிமிட சந்திப்பு’ - சுந்தர் பிச்சை உடன் செல்வமுரளி உரையாடியது என்ன?

Friday December 23, 2022,

4 min Read

பொதுவாக ஒருவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் எந்த பிரபலத்தை சந்திக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் தங்களுக்குப்பிடித்த சினிமா நடிகை, நடிகர்களை சொல்வதுண்டு. அதேபோல், தொழில்முனைவோர்களைக் கேட்டால், அவர்கள் உலகின் தலைசிறந்த ஆளுமைகளை சந்தித்து உரையாட விரும்புவார்கள். அப்படி பலர் சந்திக்க விரும்பும் நபராக, நம் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்திவரும் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.


பல இந்தியர்கள் வெளிநாடுகள் சென்று பெரிய தொழிலதிபர்களாக, மாபெரும் நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, இன்று உலகமே இது இன்றி இயங்காது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ள மாபெரும் நிறுவனமான ‘கூகுள்’-இன் சிஇஓ ஆக நம் அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார்.


அவரின் ஒவ்வொரு நகர்வுகளும், உலகமே உற்றுபார்க்கும் அளவிற்கு உள்ளது. இத்தகைய ஆளுமையை சந்திக்க பலரும் காத்திருக்கையில், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் அது சும்மாவா?


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வமுரளி என்ற தொழில்முனைவரை சுந்தர் பிச்சை இந்தியா வந்திருந்தபோது நேரில் சந்தித்துள்ளார் என்றால் அது நமக்கெல்லாம் எவ்வளவும் பெருமை?

Selva - Sundar Pichai meet

சுந்தர் பிச்சை உடன் செல்வமுரளி

செல்வமுரளியை ஒரு தொழில்முனைவோராக, மென்பொருள் உருவாக்குநராக, தமிழ்க் கணிமை வல்லுனராக சில ஆண்டுகளாக எனக்கு பழக்கம். விவசாயக் குடும்பத்தில் இருந்து வரும் செல்வமுரளி, கிருஷ்ணகிரி  போச்சம்பள்ளியில் ‘விசுவல்மீடியா டெக்னாலஜிஸ்’ என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ’அக்ரிசக்தி’ என்ற விவசாய வார இதழ், ஆன்லைன் தளம் மற்றும் ஆப் ஒன்றை உருவாக்கி, விவசாயிகள் நலனுக்காக நடத்திவருகிறார். 


சரி செல்வமுரளிக்கு சுந்தர் பிச்சையை சந்திக்கும் வாய்ப்பு எப்படி கிட்டியது? லட்சக்கணக்கான தொழில்முனைவோர்கள் இந்தியாவில் இருக்கையில் இவரை பிச்சை சந்தித்தது ஏன்? அவர்கள் என்ன உரையாடினார்கள்? என அனைத்து சுவாரசிய தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் செல்வா.

சுந்தர் பிச்சை உடன் 16 நிமிட உரையாடல்

உங்களுக்கு சுந்தர் பிச்சையை சந்திக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?


செல்வமுரளி: நான் விவசாயம் தொடர்பான ’அக்ரி சக்தி’ என்கிற ஆப் உருவாக்கியிருப்பதால், கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆப் டெவலப்பர்கள் 100 பேரை கூகுள் தேர்வு செய்து 6 மாத கால பயிற்சியளித்தது. இந்த 100 பேரில் நானும் ஒருவன்.


திடீரென கடந்த வாரம் டெல்லிக்கு வந்து ஒரு முக்கிய நபரை சந்திக்க எனக்கு அழைப்பு வந்தது. சந்திக்கப்போகும் அந்த முக்கிய நபர் யார் என்பது தெரியாமலேயே டெல்லி சென்றேன். கூகுளின் இந்திய தலைமை ஒருவரை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில், பிரெசெண்டேஷன் தயார் செய்து எடுத்துக்கொண்டு சென்றேன்.

சந்திப்புக்குத் தயாராகி நான் சென்றபோது அங்குவந்தவர் வேறு யாருமில்லை, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை. அவர் தான் அங்கு வரப்போகிறார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. ரொம்ப கேஷுவலாக வந்து எனக்கு கைக்கொடுத்தார்.

இது கனவா, நினைவா என யோசிக்கும்முன், எனக்கு அவருடன் உரையாட 10 நிமிடங்கள் டைம் ஒதுக்கப்பட்டது. அதனால் உடனே என்னைப்பற்றியும், என் பணிகள் பற்றியும் சொல்லத் தொடங்கினேன்.

“இருவரும் தமிழர்கள், ஏன் நீங்கள் தமிழிலே உரையாடலாமே? என அங்கிருந்த மற்றொரு அதிகாரி கூற, பிச்சை அவர்களும் என்னுடன் சரளமாக தமிழிலே உரையாடத்தொடங்கினார். அந்த நொடிகளை மறக்கவே முடியாது...”

சுந்தர் பிச்சையை சந்தித்தபோது ஏற்பட்ட உங்கள் மகிழ்ச்சியை, படப்படப்பை எப்படி கையாண்டீர்கள்?


தொடக்கத்தில், நான் கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தேன். அதை கவனித்த, அவர் என்னை தட்டிக்கொடுத்து, நிலையை இயல்பாக்கினார். என்னை ரொம்ப கம்ஃபர்டபிளாக வைத்துக்கொண்டார்.

எங்களது 16 நிமிட உரையாடல் முழுவதும் தமிழிலேயே இருந்தது...

இத்தனை பெரிய ஆளுமை இப்படி கேஷுவலாக, பேசியது ஆச்சரியமாக இருந்தது, அவரைச் சுற்றி இருந்தவர்களும் எந்தவித சலசலப்பின்றி எங்களை தனியே பேச விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.


சுந்தர் பிச்சை உங்களிடம் என்ன உரையாடினார்?


கூகுள் ப்ளேஸ்டோர், இந்திய அரசாங்கம் இரண்டும் இணைந்து 'கூகுள் ப்ளே ஸ்கேல்' அகாடமி என்கிற கான்செப்டை உருவாக்கியது. இதில் கிராமப்புறங்களச் சேர்ந்த 100 ஆப்’கள் தேர்வு செய்யப்பட்டது. இவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற பயிற்சி அளித்தார்கள். ’அக்ரி சக்தி’ ஆப் இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 100 ஆப்’பில் ஒன்று.


இந்த ஆப் பற்றியும், அதன் மூலம் நான் செய்யும் செயல்பாடுகள் குறித்தும், ஆப் கான்செப்ட் உருவானது எப்படி என்று சுந்தர் பிச்சை என்னிடம் கேட்டுக்கொண்டார்.


தற்போது இந்தியாவில் தொழில்நுட்பத்தின் தேவை எங்கு உள்ளது என்று என்னிடம் கேட்டார். டேட்டாக்களை கிரியேட் செய்வதற்கு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது என்று சொன்னேன். அதேபோல், IoT, Ai போன்ற தொழில்நுட்பங்கள் விவசாயத்திற்கு எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதை என் அனுபவத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டேன்.


என் ஆப் பற்றிய டெமோவைக் கேட்டபோது, அதன் அம்சங்களை விரிவாக அவருக்கு ப்ரெசண்ட் செய்து காட்டினேன். ஆப் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்தன எனவும் கேட்டறிந்தார்.


நீங்கள் உருவாக்கிய ஆப் பற்றி கூறுங்கள்?


ப்ளேஸ்டோரில் விவசாயம் தொடர்பாக அறிமுகமான முதல் ஆப் என்னுடையதுதான். கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய அம்சங்களை நான் தேவைக்கேற்ப பயன்பாட்டுக்கு தமிழ் மொழியில் கொண்டு வந்துவிடுவேன் என்று சுந்தர் பிச்சையிடம் சொன்னேன்.


உதாரணத்திற்கு 2016ம் ஆண்டு கூகுள் ’வாய்ஸ் டு டெக்ஸ்ட்’ (Voice to Text) அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

விவசாயிகளுக்காக இதை தமிழில் பயன்படுத்தியதைப் பற்றி அவருக்கு டெமோவாகக் காட்டினேன். அதைகண்டு அவர், ஒரு தளத்தை எப்படி மக்களுக்கு உதவும் வகையில் தேவைக்கேற்ப மாற்றியமைத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு என்னை பாராட்டினார்.

அக்ரி சக்தி விளம்பரம் மூலமாகவே வருவாய் ஈட்டுவதாக அவரிடம் சொன்னேன். இதைக் கொண்டு எப்படி சமாளிக்கமுடிகிறது என்று அவர் கேட்டபோது, என் சாஃப்வேர் நிறுவனத்தின் மூலமாகவே கிடைக்கும் நிதியைக் கொண்டே சமாளித்து சுயநிதியில் இயங்கி வருவதாகத் தெரிவித்தேன்.


நீங்கள் இந்தியா முழுவதும் செயல்படலாமே என்று சுந்தர் பிச்சைஎன்னிடம் கேட்டார், அதற்கு நான் மொழிபெயர்ப்பு, விரிவாக்கச் செலவுகள் போன்றவற்றிற்கு அதிக செலவாகும் என்பதால் இந்தியா முழுவதும் செயல்படுவது குறித்து யோசிக்கவில்லை எனச் சொன்னேன்.


விவசாயிகளுக்கான செயலி என்பதால் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும்போது அந்தந்த வட்டார மொழிகளில் கொடுப்பதே பலனளிக்கும். கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியைப் பயன்படுத்திக்கொண்டு செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாமே என சுந்தர்பிச்சை பரிந்துரை செய்தார்.


வேறு என்ன அவரிடம் பேசினீர்கள்?


தமிழ்நாட்டில் தன்னைப் போன்று செயல்படும் பிற ஸ்டார்ட் அப்’களுக்கும் பயிற்சி பெறும் வாய்ப்பும், சுந்தர் பிச்சையை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்குமா? என்று கேட்டேன்.


பயிற்சியை பொறுத்தவரை முதல் முறையாக இந்தியாவில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் 100 பேருடன் நிறுத்திக் கொண்டோம், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 1000 என்கிற அளவில் உயரும் என்றும் பிச்சை தெரிவித்தார்.


வெளிநாடுகளில் ஆன்லைன் மூலம் பயிற்சியளிக்கப்படும் முறை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவிலும் தொழில்நுட்பத்தின் மூலம் ஆன்லைனில் பயிற்சியளிக்கப்பட்டு இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.


தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு,

“மக்களின் ஆரோக்கியம் மேம்பட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பதிலளித்துள்ளார்.

அரிய வாய்ப்பாக அமைந்த இந்த சந்திப்பில் இருந்து நீங்கள் கற்றதென்ன?


பெரிய ஆரவாரம் ஏதுமின்றி சுந்தர் பிச்சை தனியாக அறைக்குள் நுழைந்தது, என்னைப் பார்த்து ‘ஹாய்’ என கேஷுவலாக பேசியது, அவரின் எளிமையான தோற்றம், என எல்லாமே அவரைப் பற்றி பல விஷயங்களை விளக்கியது.


மொத்ததில் அவர் என் பணியைப் பார்த்து ’இம்பிரசிவ்’, உங்களை சந்திச்சதுல சந்தோஷம், என்று கூறியதெல்லாம், வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும், எனத் தெரியவில்லை. இது கனவு போலவே இருக்கிறது, என்று உற்சாகமாக தன் 16 நிமிட சந்திப்பை விவரித்தார் செல்வமுரளி.

Daily Capsule
Crickpe’s cash rewards raise concerns
Read the full story