#100Unicorns - 'யுனிக்' கதைகள் | சிறப்புத் தொடர் ஆரம்பம்: இவர்களின் வெற்றிப் பாதையை நாம் ஏன் நோக்க வேண்டும்?
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் உச்ச வெற்றியாக கருதப்படுவது ‘யூனிகார்ன்’ அந்தஸ்தை தான். 2011ல் தொடங்கிய யூனிகார்ன் பயணம் 2022ல் இந்தியாவின் 100வது யூனிகார்னை பெற்றது ஸ்டார்ட்-அப் உலகின் மைல்கல்லாகும். இந்த வெற்றியை கொண்டாட 100 யூனிகார்ன்களின் கதைகளை புதிய தொடராக தொகுத்து வழங்குகிறது யுவர்ஸ்டோரி தமிழ்.
யூனிகார்ன்...
பிசினஸ் மொழியிலேயே வசீகரமான சொல். சில ஆண்டுகளாக நாம் அடிக்கடி கேட்கும், செயலில் சீறிப் பாயும் உத்வேகத்தைக் குறிக்கும் பதம் இது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது சந்தை மதிப்பை 100 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடிக்கு நிகர்) அல்லது அதற்கும் மேலே உயர்த்தி கம்பீர நிலையை எட்டினால், அந்நிறுவனமே 'Unicorn’ என்று அழைக்கப்படுகிறது.
2022ம் ஆண்டில் யூனிகார்ன் என்ற இந்த மகத்தான அந்தஸ்தை எட்டிய 100 யூனிகார்ன் நிறுவனங்களை தன்னகத்தே கொண்டு வெற்றிநடை போடுகிறது இந்தியா. இந்தியாவில் யூனிகார்ன் நிலையை எட்டிய 100-வது நிறுவனம் என்ற பெருமையை வசப்படுத்தியிருக்கிறது ’ஓபன்’ (Open) நிறுவனம்.
தற்போதைய நிலையில், உலக அளவில் 10 யூனிகார்ன் நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், அதில் ஒன்று இந்திய நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல.
"புதிய இந்தியாவின் முதுகெலும்பாகவே ஸ்டார்ட் அப்கள் திகழும். இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்போது, நாட்டின் வளர்ச்சியில் ஸ்டார்ட் அப்களே முக்கியப் பங்கு வகித்திருக்கும்," என்று தேசிய ஸ்டார்ட் அப் தினமான ஜனவரி 16-ல் பிரதமர் நரேந்திர மோடி உதிர்த்த வார்த்தைகள் மிக முக்கியமானவை.
நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் துணைபுரியும் புத்தாக்க நிறுவனங்கள் முழுமுதற் இலக்காகத் திகழும் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்தியாவில் 100 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவெடுத்ததுதான் இங்கே உலகத்தை மலைக்கவைத்துள்ள விஷயம்.
2016ல்தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கைத்தூக்கிவிடும் முன்னெடுப்புகளை அரசு தொடங்கியது. இதுவரை கிட்டத்தட்ட 7,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பச் சேவை, சுகாதாரம், வர்த்தகச் சேவை, வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கு வகிக்கின்றன. இவற்றில் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுள்ள 100 நிறுவனங்களும் கடந்து வந்த பாதை வியக்கத்தக்கது.
இந்தப் பாதையை நாம் ஏன் கவனிக்க வேண்டும்? - நம் அனைவருக்குமே இந்தக் கேள்வி எழலாம்.
யூனிகார்ன் நிறுவனங்கள் அனைத்துமே வெற்றிகளை ஈட்டி லாபத்தின் உச்சத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது. சில நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டி வரலாம்; சில நிறுவனங்கள் ஓரளவு லாபத்தை ஈட்டி வரலாம்; சில நிறுவனங்கள் ஓரளவு நஷ்டத்தை சந்தித்து வரலாம்; சில நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைக் கூட சந்தித்து வரலாம்.
ஆனால், இந்த ஒவ்வொரு நிறுவனத்துக்குப் பின்னாலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும், உள்வாங்கிக் கொள்ள வேண்டிய உத்வேகக் கதைகளும் புதைந்திருப்பதை மறுக்க முடியாது. அந்த உத்வேகக் கதைகளை உற்று நோக்கி, உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் இந்தத் தொடர்.
கொரோனா பேரலையால் உலகையே உலுக்கிய 2020ம் ஆண்டில் பல நிறுவனங்களும் கடினமான சூழலில் தத்தளிக்க, இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனமான ’இன்மொபி’ (
) இறங்கி அடித்து ஆடியது லாபத்தையும் அள்ளியது. இது எப்படி சாத்தியம்?தங்களது தொழில் முதலீட்டுக்கு கடன் பெறுவதன் நடைமுறைகளைக் கூட சரிவர அறியாத சிறு, குறு நிறுவனங்களுக்கு நியோ பேங்கிங் (Neo Banking) சேவைகளை வழங்கி இன்று லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்புரிவோருக்கு உறுதுணையாக இருந்து இந்தியாவின் 100வது யூனிகார்ன் ஆக திகழும் ஓபன் (Open) நிறுவனத்தின் ‘விஷன்’ வேற லெவல்.
இப்படித்தான் InMobi தொடங்கி Open வரை ஒவ்வொரு யூனிகார்ன் நிறுவனத்தின் தனித்துவத்துடன் கூடிய உத்வேக வெற்றிக் கதைகளையும் பார்க்கப் போகிறோம்.
#100Unicorns சிறப்பு தொடர் - முதல் யூனிகார்னில் தொடங்கி 100வது வரை வாரம் 3 யூனிகார்ன் கதைகளை வரிசையாக யுவர்ஸ்டோரி தமிழில் ஸ்பெஷல் சிரீசாக வெளியிட உள்ளோம். 100 இந்திய யூனிகார்ன் கதைகள், அவற்றை உருவாக்கிய நிறுவனர்களின் உழைப்பு, பயணம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் இந்தத் தொடரில் பிரதிபலிக்கும் விதமாக தொகுக்க உள்ளோம்.
ஒரு தொழில்முனைவோராக, ஸ்டார்ட்-அப் தொடங்க ஆவலாக இருக்கும் மாணவராக, பிசினஸ் உலகை உற்று கவனிக்கும் வாசகராக, வாழ்க்கையில் உத்வேகத்தைத் தேடி அடுத்தக்கட்டத்துக்கு நகர விரும்புவராக நீங்கள் இருந்தால், இந்த ‘யுனிக் கதைகள்’ தொடர் நிச்சயம் உங்களுக்காகத்தான்...
என்ன எல்லாரும் யூனிகார்ன் கதைகளை படிக்கத் தயாரா?
ஆரம்பிக்கலாங்களா...!