#100Unicorns | 'யுனிக்' கதை 14 - BillDesk: ‘நம்பகமே மூலதனம்’ - மும்மூர்த்திகள் ஜெயித்த கதை!
இந்தியாவின் மிகப் பழமையான பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் ஒன்று இந்த ‘பில்டெஸ்க்’. மட்டுமல்ல, இந்தியாவின் 60 சதவீத ஆன்லைன் பணம் செலுத்துதல் இந்நிறுவனம் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இதன் கதையை தெரிந்து கொள்வோம்!
#100Unicorns | 'யுனிக் கதை 14 |
இந்தியர்கள் இப்போது அதிகமாக ஆன்லைன் சந்தைகளில் பொருட்களை ஆர்டர் செய்வதால், இந்திய இணையவழி வர்த்தகம் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்து ஆக மாறியுள்ளது.
இப்படியான இ-காமர்ஸ், நிதிச் சேவைகள், சில்லறை வணிக நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஓர் இணைப்பு பாலமாக இருந்து யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ‘பில்டெஸ்க்’ (BillDesk) நிறுவனத்தின் கதையே இந்த யூனிகார்ன் பார்வை.
‘பில்டெஸ்க்’ என்பது ஆன்லைன் பேமென்ட் கேட்வே நிறுவனமாகும். எளிதாக சொல்வதென்றால், ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனம். நாம் பொருட்களை வாங்கும் தளங்களில் நாம் வைத்திருக்கும் வங்கியில் இருந்து சில சமயங்களில் நேரடியாக ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது. அப்படியான நேரத்தில் இதுபோன்ற ஆன்லைன் பேமென்ட் கேட்வே நிறுவனங்களே பணம் செலுத்த உதவுகின்றன.
இந்தியாவின் மிகப் பழமையான பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் ஒன்று இந்த ‘பில்டெஸ்க்’. மட்டுமல்ல, இந்தியாவின் 60 சதவீத ஆன்லைன் பணம் செலுத்துதல் இந்நிறுவனம் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
மும்மூர்த்திகளில் முக்கியமானவர்!
ஸ்ரீநிவாசு, அஜய் கௌஷல், கார்த்திக் கணபதி ஆகியோர்தான் பில்டெஸ்க்கின் மும்மூர்த்திகள். என்றாலும், இவர்களில் பில்டெஸ்க் உருவாகக் காரணமாக இருந்தவர் ஸ்ரீநிவாசு. இவர், ஐஐஎம் அகமதாபாத்தில் பிஜிடிஎம் படிப்பை முடித்தபின் ஐடிசி லிமிடெட்டின் அக்ரி பிசினஸ் குழுமத்தின் மேலாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஐடிசி குழுமத்தில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய மும்பையைத் தளமாக கொண்ட, ஆலோசனை நிறுவனமான ஆர்தர் ஆண்டர்சன் நிறுவனத்தில் சேர்ந்தார். அக்கவுண்டிங் நிறுவனமான ஆர்தரில் வணிகப் பிரிவில் வேலை பார்த்த அஜய் கௌஷல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்த கார்த்திக் கணபதியும் ஸ்ரீநிவாசுவின் நண்பர்கள் வட்டத்தில் சேர்கின்றனர்.
2000ன் தொடக்கம் அது. ஆன்லைனுக்கு மட்டுமல்ல, வங்கித்துறை ஒரு முன்னுதாரண மாற்றத்தின் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது என்பதால், முதலீட்டாளர்கள் பேங்கிங் தள முதலீடுகளையே அதிகம் விரும்பினர். ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் கடன் வழங்குதல் ஆகியவையே இதில் டாப் இடம் பிடித்தது என்றாலும், இவற்றில் இருந்த அதிகப்படியான போட்டி காரணமாக, மும்மூர்த்திகள் அந்தப் போட்டியில் இருந்து சற்று விலகி பேங்கிங் தளத்தின் மற்றொரு அம்சமாக இருந்த பணம் செலுத்துதலை தேர்ந்தெடுத்தனர்.
மாத்தியோசி...
தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் உட்பட அனைத்து கட்டணத்தையும் செலுத்த மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. இந்த வரிசை முறையை ஒழிக்க நினைத்த வங்கித்துறையில் இருந்த இந்த மூவரும், மாற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.
தங்களின் அடித்தளமான வங்கித் துறையை மையப்படுத்தி மக்களுக்கு எளிதான வசதியை கொடுக்க நினைத்தவர்களுக்கு கட்டண தளம் ஒன்றை தொடங்கும் ஐடியா உதயமானது. ஆன்லைன் உதவியுடன் இந்த செயல்முறையை எளிமையாகவும் வசதியாகவும் செய்ய நினைத்ததன் விளைவு 2000-ம் ஆண்டில் ‘பில்டெஸ்க்’ (BillDesk) தோன்றியது.
"நாங்கள் மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் போல் அல்ல. ஜனவரி 1, 2000 அன்று நாங்கள் தொடங்கும்போது, எங்களிடம் ஸ்டார்ட்அப் ஐடியா இல்லை. தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவைகளை கொண்டு ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தைரியம் மட்டுமே இருந்தது. அந்த தைரியமே பில்டெஸ்க்" - ஸ்ரீநிவாசு
முதலில் அனைத்து வங்கிகள் மற்றும் வணிகர்களை ஒன்றாக இணைத்தனர். இவர்களுக்கும் இவர்களுக்கு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் பணம் செலுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பாலமாக ‘பில்டெஸ்க்’ செயல்படத் தொடங்கியது.
பில்டெஸ்க் போன்ற டிஜிட்டல் பேமென்ட் தள மாடல்களால் வங்கிகள் தங்கள் கிளைகளில் வாடிக்கையாளர்களின் நெரிசல்களைக் குறைத்தன. வாடிக்கையாளர்கள் வங்கியில் நேரத்தை விரயமாக்கும் சிக்கலில் இருந்து விடுபட்டனர். வணிகர்கள், தங்கள் வணிகத்தை எளிமையாக கையாண்டனர்.
பில்டெஸ்க் மூலமாக அனைத்து வகையான பணம் செலுத்துதல்களும் ஒரே இடத்தில் இருந்து மேற்கொள்ளும் நிலை உண்டானது. ஆரம்பத்தில் குறைந்த அளவு இருந்தபோதிலும், வாடிக்கையாளர் தக்கவைப்பு அதிகமாக இருப்பதை வங்கிகள் விரைவில் அறிந்து கொண்டன.
ஆன்லைன் பில் பேமென்ட்ஸ் ஆப்ஷனை ஒருமுறை பயன்படுத்திய எவரும் அதில் இருந்து அடுத்து பின்வாங்கவில்லை. இந்த ஆரம்ப வெற்றி, பில்டெஸ்க்கிற்கான ஒரு முக்கிய சந்தையை ஏற்படுத்தியது. விரைவாக, இந்த தளம் பல இந்திய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் பயன்படுத்தப்பட்டன. இதில் தொலைத்தொடர்பு, காப்பீடு, இ-காமர்ஸ், நிதிச் சேவைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல பொழுதுபோக்கு நிறுவனங்களும் அடக்கம்.
14-வது யூனிகார்ன் நிறுவனம்:
சந்தையில் முதலீட்டாளர்கள் முன்னால் வெற்றியை சமர்ப்பித்தால் முதலீடுகள் குவியும். அது இங்கும் நடந்தது. SIDBI வென்ச்சர் கேபிட்டல் வங்கியிடமிருந்து பில்டெஸ்க் தனது ஆரம்ப நிதியை திரட்டியது. கிட்டத்தட்ட 5,00,000 டாலர் முதலீடு.
2006-ல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் கிளியர்ஸ்டோன் வென்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தில் இருந்து 7.5 மில்லியன் டாலர் முதலீடும் கிடைத்தது. இப்படி 4 சுற்றுகளாக மொத்தமாக 241.4 மில்லியன் டாலர் நிதி திரட்டிய பில்டெஸ்க், நவம்பர் 16, 2018ல் ஐபிஓ வெளியிட்டதன் மூலம் இந்தியாவின் 14-வது யூனிகார்ன் நிறுவனம் என்ற அந்தஸ்த்தை பெற்றது.
கடினமான சூழ்நிலைகளை கடந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக லாபத்தை சந்தித்துவருகிறது பில்டெஸ்க். 2017-18-ல் லாபம் 149 கோடி ரூபாய். அமேசான் இந்தியா போன்ற முக்கியமான வாடிக்கையாளர்களால் இதே ஆண்டில் பில்டெஸ்க் ஈட்டிய வருவாய் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். இதுவே, 2020ம் நிதியாண்டில் ரூ.1,804.7 கோடி வருவாய் கிடைத்தது. பில்டெஸ்க் வருவாயின் பெரும்பகுதி (75%) அதன் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாகவே வருகிறது.
போட்டிகள் அதிகம்:
ஆன்லைன் பேமென்ட் கேட்வே தொழில் வேகமாக வளர்ந்து வரும் துறை என்பதால் விரைவாகவே பில்டெஸ்க்கிற்கு போட்டி நிறுவனங்களும் அதிகமாகின. BillJunction, PayU, CCAvenue, BillJunction மற்றும் Razorpay போன்ற புதிய ஸ்டார்ட்அப் பேமென்ட் நிறுவனங்கள் வரிசைக் கட்டின. இதனால் பேமென்ட் கேட்வே தொழிலில் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொள்ள தொடங்கியது பில்டெஸ்க்.
இதே தருணத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளின் கமிஷன் விகிதங்களை குறைக்க சற்று பின்னடைவை சந்தித்தது. எனினும், இந்த துறையில் தான் அனுபவசாலி என்பதை உரக்கச்சொல்லி போட்டியில் பலமாக இருந்து லாபத்தையும் விடாமல் பெற்றுவந்தது பில்டெஸ்க்.
ஆகஸ்ட் 31, 2021 அன்று தனது போட்டியாளர்களில் ஒருவரான PayU வசமானது பில்டெஸ்க். PayU நெதர்லாந்தை தளமாகக் கொண்ட Prosus நிறுவனத்திற்குச் சொந்தமானது. இது இந்தியாவின் Fintech தொழில்துறை அதுவரை பார்த்திராத ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பில்டெஸ்க்கை தன்வசப்படுத்தியது எனலாம். ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 4.7 பில்லியன் டாலர்.
பெரிதாக சர்ச்சைகள், புகார்கள் என எதுவும் இல்லாமல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் பேமென்ட் துறையில் ஒரு நம்பகமான தளமாக விளங்குகிறது பில்டெஸ்க். வளர்ந்து வரும் துறையான ஆன்லைன் பேமென்ட் கேட்வே தொழிலானது 2020-2026 இடையில் 9.18% வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியில் இந்தியர்களால் தோற்றுவிக்கப்பட்ட பில்டெஸ்க் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கட்டுரை உதவி: ஜெய்
யூனிகார்ன் தொடரும்...