#100Unicorns | 'யுனிக்' கதை 11 - Snapdeal: 'நெருக்கடிகளை நொறுக்கி வெற்றிகளை வசப்படுத்திய இருவர்'
இந்தியாவின் 11வது யூனிகார்ன் ஆன 'Snapdeal’ நிறுவனர்கள் ரோகித் பன்சல் மற்றும் குணால் பால் விடாப்பிடி வித்தகர்களாக இருந்து பல சவால்களுக்கிடையில் தங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை நிலை நிறுத்தியது எப்படி?
#100Unicorns | 'யுனிக் கதை 11 |
ஹைஸ்கூலில் தொடங்கிய நட்பு, 20+ ஆண்டு காலமாக தொடர்ந்து ஒருவருக்கொருவர் நம்பமுடியாத அளவு கொண்டுள்ள நம்பிக்கையும் மரியாதையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயத்தை கொடுத்த ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியது என்றால் நம்புவதற்கு சற்று கடினமே.
எளிதாக இல்லையென்றாலும் அந்த வரலாற்றை நம்பியே ஆக வேண்டும். 75000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், 30 மில்லியனுக்கு மேற்பட்ட பொருட்கள் கொண்ட, நாட்டில் 6000 நகரங்களில் வீச்சை பெற்றிருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய இணைய சந்தையான 'ஸ்நாப்டீல்' நிறுவனர்கள் குணால் பால் மற்றும் ரோகித் பன்சல் தான் அந்த நண்பர்கள்.
Snapdeal உருவான கதை
10ம் வகுப்பு வரை இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியாது. ரோகித்தின் பூர்விகம் பஞ்சாப் என்றால், குணாலுக்கு டெல்லி பூர்விகம். படிப்பில் சுட்டியான ரோகித் 10-ம் வகுப்பு படிக்கும்போது அரசின் டேலண்ட் தேர்வில் தேர்ச்சி பெற, டெல்லியின் புகழ்பெற்ற டெல்லி பப்ளிக் பள்ளியில் ஹைஸ்கூலிங் படிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆங்கிலத்தில் பலவீனமான ரோகித்துக்கு டெல்லியின் பள்ளி வாழ்க்கை போராட்டமாகவே தொடங்கியது. ஆனால், அனைத்து போராட்டங்களையும் ஓர் அர்த்தமுள்ள போராட்டமாக மாற்றியது அவருடன் பெஞ்சை பகிர்ந்துகொண்ட குணாலே.
ரோகித்தின் சிந்தனைக்கு நேர்மாறானவர் குணால். ஆனாலும் ரோகித்துக்கு டெல்லியை பழக்கப்படுத்தியதோடு, அந்த வயதிலேயே பிசினஸுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது குணால்தான். ஆம், பள்ளிப் படிப்பின்போதே இருவரும் பிசினஸ் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொண்டனர்.
தங்கள் இலக்கை அடையும் வழியாக கல்வியை தேர்ந்தெடுத்த இருவரும், ஐஐடியில் சேர முயற்சித்தனர். ரோகித்துக்கு முயற்சி கைகொடுத்தாலும், நுழைவுத் தேர்வில் தோல்வி கண்டதால் குணால் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார்.
பள்ளியில் இருந்ததைப் போலவே தங்கள் பட்டப்படிப்புக் காலத்திலும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர் அதே பிசினஸ் எண்ணத்துடன். கல்வி, வேலை என சில ஆண்டுகள் சிறிய இன்டெர்வெலுக்குப் பிறகு டெல்லியில் நடந்த குணாலின் சகோதரரின் திருமணத்தில் இருவரும் சந்தித்தனர். அன்றைய சந்திப்பே, ஸ்நாப்டீலுக்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.
முதல் முயற்சியும் தோல்வியும்:
இருவரும் வேலையை விட்டுவிட்டு தங்களின் சிறுவயது எண்ணப்படி, தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுக்க அந்தச் சந்திப்பில் முடிவெடுத்தனர். அவர்களின் முதல் நிறுவனமே ஸ்நாப்டீல் கிடையாது.
பிசினஸ் தொடங்குவது என முடிவெடுத்த இருவரின் முன்னால் பல யோசனைகள் வந்தன. சந்தைக்கு புதிதாக வரும் பொருள்களின் ரிவ்யூ இணையதளம் தொடங்கி இ-காமர்ஸ் தள மதிப்பாய்வு, ஆன்லைன் மூவி டிக்கெட் தளம் போன்ற மூன்று யோசனைகள் அதில் முக்கியமானவை. ஆனால், சில எச்சரிக்கை காரணமாக, அவர்கள் இந்த 3 யோசனைகளையும் கைவிடுகின்றனர்.
மாறாக, இறுதியில் தள்ளுபடி விலையில் பிராண்டுகளின் கூப்பன்களை கொடுக்கும் இணையதளம் தொடங்கினர். தள்ளுபடி விலையில் கூப்பன் என்ற புதுமையான ஐடியா என்றாலும், முன்னணி பிராண்டுகள் இவர்களின் முன்மொழிவுக்கு ஒப்புக்கொள்வது லேசான காரியமாக அமையவில்லை.
சுமார் 9 மாத கடின உழைப்பிற்குப் பிறகு, டொமினோஸ், ரீபோக், அடிடாஸ், லெவிஸ் போன்ற சில முன்னணி பிராண்டுகள் மற்றும் சில உள்ளூர் பிராண்டுகள் உதவியுடன் MoneySaver தளம் உதயமானது. எதிர்பார்த்த வெற்றியை MoneySaver கொடுக்கவில்லை. கையில் இருந்த நிதியும் காலியானது. ஆனால், அவர்கள் மனதில் இருந்த நம்பிக்கையின் அளவு துளியும் குறையவில்லை.
உதயமான தருணம்:
நண்பர்கள், தெரிந்தவர்களிடத்தில் கடனை உடனை வாங்கி டீல் போடத் தொடங்கினார்கள். இம்முறை, 'ஸ்நாப்டீல்' பெயரில் டீல் போட்டனர். உணவகங்கள், பயணம், ஷாப்பிங், உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கான டீல்கள் மற்றும் கூப்பன்களை மையமாகக் கொண்ட தினசரி டீல் இணையதளமாக 2010-ல் அவர்கள் ஸ்நாப்டீலை தொடங்கினர்.
முதலில் ரெஸ்டாரண்ட் பே மீல் கூப்பன் டீல் போட்டார்கள். அதில் ரூ.500 மதிப்புள்ள மீல் கூப்பன்களை ரூ.350 கொடுத்து வாங்கலாம். இதையடுத்து, பல வகைகளில் டீல் போட ஆரம்பித்தார்கள். மூன்றே மாதங்களில் 15000 கூப்பன்கள் விற்று வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நேரம் வந்துவிட்டது.
வாழ்வா, சாவா...
முதலீட்டாளர் வாணி கோலாவைச் சந்தித்தனர். ஆனால், முதல் சந்திப்பு சரியாக அமையவில்லை. மற்றொரு சுற்று விவாதத்திற்குப் பிறகு, வாணி கோலாவின் நிறுவனம் ஸ்நாப்டீலில் முதலீடு செய்ய முடிவுசெய்தது. ஸ்நாப்டீல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நேரம் இது.
ஆரம்பத்தில் ஆஃப்லைன் வணிகமாகத் தொடங்கப்பட்டது, 2011 செப்டம்பரில் ஆன்லைன் ஸ்டோராக மாறியது. அலிபாபா டாட் காமின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு அதே பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க விரும்பி ஸ்நாப்டீல் ஆன்லைன் ஸ்டோரை தொடங்கினர் ரோகித்தும் குணாலும். இது ஒரு வாழ்வா சாவா முடிவு என்றே சொல்லலாம்.
ஏனென்றால், அந்த நேரத்தில் டீல் வணிகத்தில் ஸ்நாப்டீல் மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தது. அதனை விடுத்து புதிதாக ஒன்றைத் தொடங்குவது மிகவும் ஆபத்தானது. அந்த ஆபத்தை தேர்ந்தெடுத்து முதலீட்டாளர்களையும் ஆச்சரியப்படுத்தினர் நண்பர்கள் இருவரும்.
அந்த ரிஸ்க், அவர்களுக்கு புதுவாழ்வை கொடுத்தது. சில ஆண்டுகளில், பில்லியன் டாலர் நிறுவனமாக மாறியது ஸ்நாப்டீல். ஒருகட்டத்தில் அதன் ஆண்டு வளர்ச்சி ஏறக்குறைய 600% சதவீதத்தை தொட்டது. எடுத்த எடுப்பில் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. ஸ்நாப்டீலின், ஒவ்வோர் நடவடிக்கையும் வெற்றியை நோக்கியே இருந்தது எனலாம்.
அமெரிக்க மாடல் வணிகம் இந்தியாவுக்கு பொருந்தாதது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர் குணாலும், ரோகித்தும். ஏனெனில் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களில் பெரும் பகுதியினர் எப்போதும் தங்கள் வருமானத்திற்கு ஏற்ற பொருட்கள் வாங்குவதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். அதன்படி, இந்தியர்களின் விருப்பத்திற்கேற்ப ஸ்நாப்டீல் பிராண்டுகளை வழங்கியது.
எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், கிச்சன் அப்ளையன்ஸ்கள், ஆடைகள் என பிராண்டுகளையும் பொருட்களையும் இறக்கி விரைவாகவே மக்களின் விருப்பமான இ-காமர்ஸ் நிறுவனமாக உருவெடுத்தது. அதோடு நிறுவனத்தை வளர்க்க, தங்கள் ஊழியர்களை சிறப்பாக ஊக்கப்படுத்தியது ஸ்நாப்டீல்.
"பணியாளர்கள் என்ற வார்த்தையை நான் வெறுக்கிறேன். ஏனென்றால், அவர்கள் எங்கள் குழு உறுப்பினர்கள்," என்பார் குணால்.
2010ல் 20 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்நாப்டீல் குழு, இன்று 1,200 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதேபோல், சிறப்பான சந்தைப்படுத்தல் உத்தியையும் குணாலும், ரோகித்தும் கையாண்டனர். இருவரும் சந்தையில் எப்படி நிலைத்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தனர். அதற்காக அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொண்டனர்.
குழுவாக இருந்து ஐடியாக்கள் யோசிக்கப்பட்டு, பின்னர் ஒரு தீவிரமான மின்னஞ்சல் மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை ஒவ்வொரு நாளும் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தனர். அமீர் கான், புல்கிட் சாம்ராட், அலோக் நாத் மற்றும் கிருஷ்ணா அபிஷேக் உட்பட பல பிரபல பாலிவுட் பிரபலங்களையும் பயன்படுத்தினர்.
எதிர்பார்த்தது போலவே, இ-காமர்ஸ் சந்தையில் ஸ்நாப்டீல் உச்சம்தொட, முதலீடுகளும் குவிந்தன. 7 சுற்று நிதி திரட்டல் மூலம் ஸ்நாப்டீல் பெற்ற முதலீடுகள் 1472 மில்லியன் டாலர். அலிபாபா தொடங்கி சாப்ட்பேங்க் மற்றும் ஃபாக்ஸ்கான், பிரமல் குழுமம், டாடா, ஈபே என முன்னணி நிறுவனங்கள் பணத்தை வாரிகொட்ட இந்தியாவின் 11வது யூனிகார்ன் நிறுவனமாக 2016-ல் சாதனை படைத்தது ஸ்நாப்டீல்.
விடாப்பிடி வித்தகர்கள்
யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த ஒரு வருடத்தில், முக்கியப் போட்டியாக இருந்த ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீலை கையகப்படுத்த முயற்சித்தது. 950 மில்லியன் டாலர் வரை அதற்காக வழங்கவும் முன்வந்தது. அமேசான் இந்திய சந்தையில் காலூன்றிய தருணம் அது. சந்தையில் போட்டி ஃப்ளிப்கார்ட் vs அமேசான் என மாறிக்கொண்டிருந்ததால், விற்கும் முடிவுக்கு ஸ்நாப்டீல் ஒப்புக்கொள்ளும் என்றே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், குணாலும் ரோகித்தும் ஃப்ளிப்கார்ட் vs அமேசான் போட்டியில் ஸ்நாப்டீலும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தினர். ஃப்ளிப்கார்ட் உடனான இணைப்பை ஏற்க மறுத்தனர். இந்த முடிவின் பின்னணியில் இருந்தது முழுக்க குணாலே. இயல்பாகவே போராட்ட குணம் கொண்ட குணால், சுதந்திரமாக செயல்படுவதை விரும்பி ஃப்ளிப்கார்ட் இணைப்பை தவிர்த்து ரோகித்துக்கு அதை புரியவும் வைத்தார்.
இருவரும் தங்கள் வாழ்க்கையில் எடுத்த துணிச்சலான நடவடிக்கை இது என்கின்றனர் நண்பர்கள் இருவரும். இந்த கடினமான முடிவு அவர்களுக்கு வெற்றியை கொடுத்ததா என்றால், இல்லை. இதன்பின் சரிவை தான் சந்திக்கத் தொடங்கியது.
சரிவுக்கு ஃப்ளிப்கார்ட் காரணமில்லை. போலி பொருட்கள் டெலிவரி குறித்த புகார்கள் தான் ஸ்நாப்டீலுக்கு சோதனையாக அமைந்தது. காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கும் நிலை உண்டாக ஸ்நாப்டீல் சற்றே நிலைகுலைந்தது. அதிலிருந்து மீள நண்பர்கள் ஸ்நாப்டீல் 2.0 தொடங்கினர்.
சிக்கன நடவடிக்கை தொடங்கி பிராண்டுகளின் உறுதித்தன்மை வரை 2.0-வில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தனர். 2018-19-ம் நிதியாண்டில், அதன் மொத்த வருவாய் ரூ.925.3 கோடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் நஷ்டத்தையும் ரூ.186 கோடியாக குறைத்து ஃப்ளிப்கார்ட் இணைப்பை தவிர்த்து சரியே என நிரூபித்தனர்.
20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் 75000-க்கு மேற்பட்ட விற்பனையாளர்கள், 30 மில்லியனுக்கு மேற்பட்ட பொருட்கள் கொண்ட, நாட்டில் 6000 நகரங்களில் டெலிவரி என 2.0-வில் இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தையில் இந்திய நிறுவனமாக ஜொலித்து வருகிறது ஸ்நாப்டீல்.
என்டிடிவியின் ‘வாக் த டாக்’ நிகழ்ச்சியில் குணால் பால் மற்றும் ரோகித் பன்சல் இருவரின் பேச்சுக்கள் இப்படியாக இருந்தது...
"2007-ல் அடுத்த நாள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 5 லட்சம் தேவைப்பட்டபோது வங்கியில் எங்களின் கணக்கில் ரூ.50,000 தான் இருந்தது. நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு, வேறு வேலையை தேடிக்கொண்டு வெற்றிகரமாக விளங்கியிருக்கக் கூடிய தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது. ஆனால், மனம் தளராமல் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி நிறுவனத்தை தொடர்ந்தோம்.
இதேபோல, 2013-ல் 5 லட்சம் டாலர் தர வேண்டிய நிலையில் ஒரு லட்சம் டாலர் தான் கையில் இருந்தது. மிகவும் நெருக்கடியான நிலை இது. எனினும் விடாமுயற்சியுடன் நிறுவனத்தை தொடர்ந்தோம். இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளோம். கடினமான தருணங்களில் எங்களை இயக்கியது, எங்கள் மீதும், எங்கள் வர்த்தகம் மீதும் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே".
அந்த நம்பிக்கையே இன்னும் ஸ்நாப்டீலை உயிர்ப்புடன் வைத்துள்ளது. ஸ்நாப்டீலின் சிஇஓ குணால் உதிர்த்தவற்றில் மிகவும் கவனத்துக்குரிய ஒற்றை வரி இதுதான்:
“தொழில்முனைவோர் தொடர்வதற்கான உத்வேகத்தைக் கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும்.”
ஆம், நாம் கட்டியெழுப்பும் எதையும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்றால், எத்தகைய பின்னடைவுகள் பதம் பார்த்தாலும் தொடர்ந்து இயங்கும் மனோதிடம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டுரை உதவி: ஜெய்
யூனிகார்ன் கதைகள் தொடரும்...
யூனிகார்ன் 100 | 'யுனிக்' கதை 10 | ShopClues: பில்லியன் டாலர் நிறுவனத்தின் முதல் பெண் நிறுவனரின் வெற்றி-தோல்வி!