#100Unicorns | 'யுனிக்' கதை 10 | ShopClues: பில்லியன் டாலர் நிறுவனத்தின் முதல் பெண் நிறுவனரின் வெற்றி-தோல்வி!
பில்லியன் டாலர் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பற்றிய போராட்டக் கதையே இந்த யூனிகார்ன் அத்தியாயம். அவர் வேறுயாருமல்ல, பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ShopClues இணை நிறுவனர் ராதிகா அகர்வால்.
#100Unicorns | 'யுனிக்' கதை 10 | ShopClues
இன்று பெண்கள் போராடி ஒவ்வொரு துறையிலும் உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் ஒரு துறை ஸ்டார்ட்அப். இத்துறையில் பெண்கள் வெற்றி பெறுவது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், ஸ்டார்ட்அப்’களுக்கு முதலீடுகள் அளிக்கும் மூலதன நிறுவனங்கள் பலவும் ஆண்கள் நிறைந்தவையே. டெக் பிசினஸிலும் கோலோச்சுவது ஆண்களே என்பதால் பெண்களுக்கு முதலீடுகள் என்பது அவ்வளவு சாத்தியமில்லை.
இப்படியான தடைகளுக்கு மத்தியில் பில்லியன் டாலர் ஸ்டார்ட்அப்பின் இந்தியாவின் முதல் பெண் நிறுவனர் மற்றும் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பற்றிய போராட்டக் கதையே இந்த யூனிகார்ன் அத்தியாயம். அவர் வேறுயாருமல்ல, பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ஷாப்க்ளூஸ் (
) இணை நிறுவனர் ராதிகா கய் அகர்வால்.ராதிகா கய் அகர்வாலின் வளர்ச்சியை தெரிந்துகொள்ளும் முன் ஷாப்க்ளூஸ் தோன்றியது குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.
ShopClues தொடக்கம்
'ஷாப்க்ளூஸ்' என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட க்ளூஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு இ-காமர்ஸ் நிறுவனம் ஆகும். அப்படியென்றால், இது இந்திய நிறுவனம் இல்லையா என எண்ண வேண்டாம். பக்கா இந்திய மாடல் இ-காமர்ஸ் நிறுவனம்தான் ஷாப்க்ளூஸ். இதன் நிறுவனர்களும் இந்திய ரத்தங்களே.
ஷாப்க்ளூஸ் மூளையாக இருந்து இதை தொடங்கியது, அதன் இணை நிறுவனர்களில் ஒருவரான சந்தீப் அகர்வால். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சந்தீப், தனது நண்பர் சஞ்சய் சேத்தியை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது இ-காமர்ஸ் தொடங்க வேண்டும் என்ற யோசனை பிறக்க உதயமானது க்ளூஸ் நெட்வொர்க்.
யோசனை அமெரிக்காவில் இருந்தபோது வந்தாலும், சந்தையை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அமெரிக்காவில் ஏற்கெனவே ஒரு டஜன் இ-காமர்ஸ் இருந்ததும் அவர்களின் எண்ணத்துக்கான காரணம். சந்தீப்பும், சஞ்சய் சேத்தியும் இ-காமர்ஸ் குறித்து யோசித்தாலும், அதைப் பற்றிய விவாதத்தின்போதே சந்தீப்பின் மனைவி ராதிகா அவர்களுடன் இணைகிறார். யோசனை கொடுக்க வந்தவர், பின்னாளில் நிறுவனத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கும்படியானது.
திறமையான இணை நிறுவனரான ராதிகா அகர்வால்
இந்தியாவில் 10 வெவ்வேறு பள்ளிகளில் படித்த ராணுவக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த ராதிகா, ஆரம்பத்திலேயே அடிப்படை வாழ்க்கைத் திறன்களையும் சமூகத் திறன்களையும் கற்றுக்கொண்டவர்ர். சிறுவயதிலேயே வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த கற்றுக்கொண்டிருந்தார்.
இராணுவ சேவைக்குப் பின் ராதிகாவின் தந்தை தொழில்முனைவு பக்கம் திரும்பியதால், ராதிகாவவுக்கு தொழில் முனைவு குணம் இயற்கையாகவே வந்தது. அவர் விளம்பரம் மற்றும் பொது உறவுத்துறையில் பட்டம் பெற்றிருந்ததால், 1997ல், தனது சொந்த விளம்பர நிறுவனத்தை தொடங்கி நடத்தினார்.
அதன் பின்னர், அமெரிக்கா சென்ற ராதிகா, அங்கே Nordstrom என்ற பிரபல டிபார்ட்மெண்ட் செயின் ப்ராண்டில் பணிபுரியத்தொடங்கினார். அதைத்தொடர்ந்து சொந்த நிறுவன ஆசை மீண்டும் மிளிர, Fashion Clues என்ற பேஷன் வெப்சைட் ஒன்றை தொடங்கி அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளுக்காக நடத்தினார். இங்கு கற்ற பாடங்களைக் கொண்டே 'ஷாப்க்ளூஸ்' தொடங்கும் எண்ணத்தின் தொடக்கம் முதல் வளர்ச்சி வரை ராதிகா பெரும் பங்கு வகித்தார்.
2011ல் கலிபோர்னியாவில் தொடங்கிய க்ளூஸ் நெட்வொர்க், 2012-ல் ஷாப்க்ளூஸ் பெயரில் டெல்லி குர்காவை தளமாகக் கொண்டு இந்தியாவில் செயல்பட ஆரம்பமானது. இன்று, ஷாப்பிங் செய்யும் இந்தியர்களின் பலரின் விருப்பமாக இருப்பது இ-காமர்ஸ் நிறுவனங்களே. இந்த சந்தையில் ஃபிளிப்கார்ட், அமேசான் தொடங்கி எண்ணற்ற நிறுவனங்கள் இந்தியாவில் நிரம்பி வழிகின்றன. ஷாப்க்ளூஸும் இதே வகையறாவை சேர்ந்தவையே. என்றாலும், ஷாப்க்ளூஸ் மற்ற பெரிய நிறுவனங்களிலிருந்து சற்று வித்தியாசமானது.
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதற்கும் ஷாப்க்ளூஸ் என்ன சாதித்தது என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
சமையலறை உபகரணங்கள் தொடங்கி ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ் வரை மக்களின் தினசரி பயன்பாட்டுக்கான பொருட்கள் என மற்ற இ-காமர்ஸ் தளங்களில் இருக்கும் அனைத்தும் ஷாப்க்ளூஸில் கிடைத்தன. ஆனால், மற்ற நிறுவனங்களில் இருந்து ஷாப்க்ளூஸை தனித்து காட்டியது ’மேட் இன் இந்தியா’ போன்ற பிற சேவைகள்தான்.
2010 காலகட்டத்தில் இந்திய சந்தையில் இருந்த மற்ற நிறுவனங்கள் உலக பிராண்டுகளை முன்னிறுத்தி செயல்பட, ஷாப்க்ளூஸ் மட்டும் "மேட் இன் இந்தியா" கொள்கையில் ஜன்பத் மற்றும் லஜ்பத் நகர் போன்ற பிரபல இந்திய பஜார்களில் உள்ள சிறிய பிராண்டுகளையும் உலக நிறுவனங்களின் பிராண்டுகளுடன் களமிறக்கியது.
மேலும், இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களை இலக்காக வைத்து இயங்கியதும், மற்ற இ-காமர்ஸ் தளங்கள் நுழைய முடியாத இடங்களில் எல்லாம் இது சென்று விற்பனை செய்ததும் ஒரு வெகுஜன சந்தையைப் பெற அவர்களுக்கு உதவியது.
இந்தியாவிலும் பிற இடங்களிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் வழங்கியதன் மூலம் ஷாப்க்ளூஸ் சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்தது.
வருவாயும் வளர்ச்சியும்
படிப்படியாக வளர்ச்சி அடைந்த ஷாப்க்ளூஸ், 2014ல் மொத்த விற்பனை மற்றும் செயலியை அறிமுகப்படுத்தியபோது 14 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. 5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளர்கள் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை தங்கள் தளத்துக்கு வரவைத்தது இதன் சாதனைகளில் ஒன்றாகும்.
2016 ShopClues-க்கு ஒரு முக்கிய ஆண்டு எனச் சொல்லலாம். பேமண்ட் கேட்வே வசதியை சொந்தமாக உருவாக்க மொபைல் கட்டண ஸ்டார்ட் அப்பான Momoe-வை வாங்கியது செயலி மற்றும் இ-வாலட் இல்லாத ஆஃப்லைன் வணிகர்களுக்காக எஸ்எம்எஸ் மூலமான பணமில்லா பரிவத்தனைகளுக்காக ‘ரீச்’ என்ற சேவையை இந்த ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது.
அதைவிட, இந்த ஆண்டு தான் இந்திய யூனிகார்ன் கிளப்பில் 10-வது நிறுவனமாக கால்பதித்தது ShopClues. இந்திய இ-காமர்ஸ் சந்தையில் 35-வது நிறுவனமாக நுழைந்த ஷாப்க்ளூஸ் தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் யூனிகார்ன் கிளப்பிலும் நுழைந்தது போட்டியாளர்களை வியக்க வைத்தது.
2016-ம் ஆண்டில், இதன் மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள் என்று ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் வருவாய் 46% அதிகரித்து 273 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2011-ல் 11 ஊழியர்களுடன் தொடங்கிய இந்த நிறுவனம் 3 பூர்த்தி மையங்களைக் கொண்டு 50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 5.3 கோடி பொருட்கள் உடன் இந்தியாவில் உள்ள 30,000 நகரங்களுக்கு டெலிவரி செய்யும் உருவெடுத்தது.
“இன்றைய நாளை நேற்றை விட சிறந்ததாக மாற்றுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் சிறிய படிகள்தான் உங்களை உயரத்தை நோக்கித் தொடர வைக்கின்றன” - ராதிகா அகர்வால்
முதலீடு
க்ளூஸ் நெட்வொர்க், யூனிலேசர் வென்ச்சர்ஸ், டைகர் க்ளோபல் மற்றும் ஹீலியான் வென்சர்ஸ் போன்றவை ஷாப்க்ளூஸின் முக்கியமான முதலீட்டாளர்கள் ஆவர். 11 சுற்று நிதி திரட்டலில் மொத்தம் 257 மில்லியன் டாலர் முதலீடாக பெற்றது. இவ்வளவு முதலீடுகளும், வளர்ச்சியும் மற்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களை அசைத்து பார்க்கத் தவறவில்லை.
இதனால் அலிபாபாவும் , ஃப்ளிப்கார்ட்டும் ஷாப்க்ளூஸை வாங்க முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்தனர் ஷாப்க்ளூஸின் இணை நிறுவனர் சந்தீப் அகர்வால், தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் சேத்தி மற்றும் தலைமை வணிக அதிகாரி ராதிகா அகர்வால்.
வளர்ச்சியை மட்டுமே சந்தித்ததா?
இந்தக் கேள்விக்கு இல்லை என்பதே ராதிகாவும் சந்தீப்பும் சஞ்சயும் உரக்க சொல்லும் பதில். மற்ற நிறுவனங்கள் நிதியை பெறுவதில் தான் பிரச்னைகளை சந்திக்கும். ஷாப்க்ளூஸோ வேறுவிதமான பிரச்னைகளை சந்தித்தது. குறிப்பாக, 2014ல் சந்தீப், தான் வேலைபார்த்த முன்னாள் நிறுவனத்தின் வழக்கு ஒன்றால் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட, ஒட்டுமொத்த நிறுவனமும் சற்றே நிலைகுலைந்தது.
சரிவை சந்திக்கத் தொடங்கிய சமயத்தில் சஞ்சய் சேத்தியுடன் இணைந்து களத்தில் இறங்கினார் ராதிகா. சஞ்சயை விட ராதிகா சிந்தனையில் முற்றிலும் மாறுபட்டவர். உதாரணமாக, அவர் அலுவலகத்தில் தனக்காக எந்த அறையையும் ஒதுக்கவில்லை.
பெண்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தினர். ராணுவ அதிகாரியின் மகளாக பிறந்ததால் பல்வேறு கலாச்சாரம் மற்றும் மொழி நடுவே வளர்ந்ததால் அவர் சந்தித்த அனுபவங்கள் சந்தீப் இல்லாத சமயத்தில் பிசினஸுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தது. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு பற்றிய அவரின் பட்டப்படிப்பும் கைகொடுக்க ஷாப்க்ளூஸில் மாற்றங்களை கொண்டுவந்தார்.
"கடின உழைப்பு என்பது ஆர்வத்தின் விளைவு. நீங்கள் ஆர்வமாக இருந்தால், முடிவுகளை அடைவதற்கு நீங்கள் வேலை செய்வீர்கள், பின் வெற்றி தொடரும்." - ராதிகா அகர்வால்
அவரின் வழிகாட்டுதலின் உதவியுடன் மெல்ல மெல்ல மீண்டு யூனிகார்ன் கிளப் வரை சென்றது 'ஷாப்க்ளூஸ்'.
யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்தியாவின் முதல் பெண் தொழில்முனைவோர் என ராதிகா கொண்டாடப்பட்டார்.
எனினும், வீழ்ச்சி என்பது அவர்களை விட்டுவைக்கவில்லை. ஷாப்க்ளூஸ் இந்திய சந்தையில் தொடங்கியபோது, இ-காமர்ஸ் நிறுவனங்கள் மிகவும் அரிதானவை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தி கொண்டது. ஆனால், 2014 வாக்கில், அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட் இந்தியாவில் ஆன்லைன் சந்தைகளை பிடிக்க அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைமை மாறத் தொடங்கின.
ஒருகட்டத்தில் ஷாப்க்ளூஸ் விற்பனை செய்த பொருட்களின் மோசடி தன்மை குறித்து நுகர்வோர் புகார்கள் குவியத் தொடங்கின. ரே-பான் நிறுவனத்திற்கு சொந்தமான லக்சோட்டிகா குழுமம், ஷாப்க்ளூஸ் போலியான ரே-பான் பொருட்களை விற்பனை செய்வதாக வழக்கு தொடுக்க, டெல்லி உயர் நீதிமன்றம் அந்த விற்பனையைவே நிறுத்த உத்தரவிடும் நிலைக்கு சென்றது.
இப்படி தரமான பொருட்களின் பற்றாக்குறை, செலவு குறைப்பு நடவடிக்கைகள் என நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது, விளம்பரச் செலவினங்களை 80% குறைத்தது என ஷாப்க்ளூஸின் நடவடிக்கை 2017க்கு பிறகு முரணாக அமைய வீழ்ச்சியை சந்தித்தது.
"பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே புதிய பிசினஸை தொடங்கமுடியும் என்றிருந்த காலம் மலையேறி விட்டது. புதுயுக தொழில்முனைவோர் இன்று எல்லாவற்றையும் மாற்றிவிட்டனர். தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெரிய தொழில்களை அவர்கள் கட்டமைக்கின்றனர்" - சஞ்சய் சேத்தி
இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் சந்தீப் தனியாக droom என்ற மற்றொரு யூனிகார்ன் நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டுவந்தாலும், ஷாப்க்ளூஸின் வீழ்ச்சி என்பது மீள முடியாதவையாகவே அமைந்தது. ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவின் உண்மையான பஜார் என்றால் அது ஷாப்க்ளூஸ் மட்டுமே. சரிவுகளை சந்தித்தாலும், இன்னும் களத்தில் இருந்துகொண்டு தனித்துவமான தயாரிப்புகளுடன் அற்புதமான சலுகைகளை வழங்கி இந்தியாவின் விருப்பமான ஆன்லைன் பஜாராக உள்ளது.
முயற்சிகளை தீவிரப்படுத்தி, தவறுகளை களையெடுத்தால் உலக நிறுவனங்களுக்கு போட்டியாக மீண்டும் உருவெடுக்கலாம். ஆனால் அது சந்தீப், சஞ்சய் மற்றும் ராதிகா ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.
தகவல் உதவி: ஜெய்
யுனிக் கதைகள் தொடரும்...