'இடையூறு இன்றி சேவை தொடரும்' - வணிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த பேடிஎம்!
எவ்வித இடையூறும் இல்லாமல் சேவை தொடரும் என வணிகர்களுக்கு பேடிஎம் நிறுவனத்தின் உரிமையாளரான One97 கம்யூனிகேஷன்ஸ் உறுதியளித்துள்ளது.
எவ்வித இடையூறும் இல்லாமல் சேவை தொடரும் என வணிகர்களுக்கு பேடிஎம் நிறுவனத்தின் உரிமையாளரான One97 கம்யூனிகேஷன்ஸ் உறுதியளித்துள்ளது.
பிளாட்ஃபார்மில் மூன்று கோடிக்கும் அதிகமான வணிகர்களைக் கொண்டுள்ளது, இவர்களில் சுமார் 60 லட்சம் பேர் பேமெண்ட்ஸ் வங்கியைத் தங்கள் தீர்வுக் கணக்காகப் பயன்படுத்துகின்றனர். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பேடிஎம் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பிப்ரவரி 29க்குள் தங்களது பயனர்களை வேறு வங்கிகளுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் உள்ளது.
பேடிஎம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் ஒரே பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ள ரிசர்வ் வங்கி, இதனால் பணமுறைகேடுகள் நடைபெறக்கூடும் எனக்கருதியது. இதனையடுத்து, பிப்ரவரி 29க்குப் பிறகு பிறகு டெபாசிட்களை ஏற்க வேண்டாம் என Paytm Payments வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ப்ரீபெய்டு வசதிகள், பணப்பைகள், FASTagகள், தேசிய பொது மொபிலிட்டி (NCMC) கார்டுகள் போன்றவற்றில் கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப்-அப்கள் நிறுத்தப்படவுள்ளன.

இந்நிலையில், பேடிஎம் ஆப் மற்றும் அது தொடர்பான சேவைகள் முழுமையாக இயங்கும் என அதன் உரிமையாளரான One97 கம்யூனிகேஷன்ஸ் வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
"Paytm ஆப்ஸ் மற்றும் சேவைகள் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்படும் என்று எங்கள் பயனர்களுக்கும் வணிகக் கூட்டாளர்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்களின் அசோசியேட் Paytm Payments வங்கி பேக்-எண்ட் வங்கியாக செயல்படும் இந்தச் சேவைகளை மற்ற கூட்டாளர் வங்கிகளுக்குத் தடையின்றி மாற்றலாம். இது எங்கள் வணிகக் கூட்டாளர்கள் எந்த இடையூறுகளையும் எதிர்கொள்வதையும், ஏற்கனவே உள்ள அமைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை, கூடுதல் முயற்சியும் இல்லை என்பதை உறுதிசெய்கிறது,” எனத்தெரிவித்துள்ளது.
வணிக கூட்டாளிகள் முன்பு போலவே Paytm QR குறியீடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு இயந்திரங்கள் போன்ற தீர்வுகளிலிருந்து தொடர்ந்து பயனடையலாம் என்று கூறினார்.
"அரவிந்த் லிமிடெட், ஸ்மாஷ், BIBA போன்ற சில்லறை வணிகம், பொழுதுபோக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள முன்னணி நிறுவனங்கள்எங்கள் தடையற்ற கட்டணத் தீர்வுகளின் பலன்களை நேரடியாக அனுபவித்து, எங்கள் கூட்டாண்மைகளின் வலிமைக்கு சான்றாக நிற்கின்றனர்," என்று வலைப்பதிவு கூறியது.
இத்துடன் முன்னணி நிறுவனங்கள் பேடிஎம் உடனான தங்களது நீண்ட கால தொடர்பு திருப்தியளிப்பதாகவும், அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ள கருத்துக்களையும் One97 கம்யூனிகேஷன்ஸ் தனது வலைப்பதிவில் மேற்கொள் காட்டியுள்ளது.
“இது இந்தியாவின் ஃபின்டெக் புரட்சியை முன்னேற்றுவதில் எங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிறுவனத் தலைவர்களின் வலுவான ஆதரவு இந்தியாவின் டிஜிட்டல் கட்டணத் துறையை மறுவடிவமைப்பதில் எங்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு நம்பகமான பார்ட்னர்களாக எங்களை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆதரவால் ஈர்க்கப்பட்டு, எங்கள் அர்ப்பணிப்புள்ள குழுக்கள் தொடர்ந்து அயராது உழைத்து, எங்கள் கூட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இணையற்ற சேவை மற்றும் ஆதரவை வழங்குகிறோம்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வரை கால்வின் க்ளீன், டாமி ஹில்ஃபிகர் போன்ற பிராண்டுகளை இயக்கும் Advaith Hyundai, Smaash, BIBA Fashion மற்றும் Arvind Limited ஆகிய நிறுவனங்கள் Paytm வழங்கும் சேவைக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.