பட்ஜெட் 2022: வரி விதிப்பால் விலை உயரும், குறையும் பொருட்கள் எவை?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022 -23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து எந்தெந்த பொருட்களில் விலை அதிகரிக்கவும், குறையவும் செய்யும் என பார்க்கலாம்...
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022 -23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து எந்தெந்த பொருட்களில் விலை அதிகரிக்கவும், குறையவும் செய்யும் என பார்க்கலாம்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சில பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. பல வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த வரி மாற்றங்களால் பல பொருட்களின் விலை அதிகரிக்கவும், சில பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புள்ளது.
வரி குறித்த முக்கிய அறிவிப்புகள்:
- சுங்க வரி சீர்திருந்தங்கள் கொண்டு வரும் விதமாக 7.5 சதவீத சுங்க வரி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
- வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரத்தின் மீதான சுங்க வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- இமிடேஷன் ஜூவல்லரி எனப்படும் கவரிங் நகைகள், ரசாயனங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
- துருப்பிடிக்காத எஃகு, இறால் மீன் வளர்ப்புகளுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.
- ஸ்டீல் ஸ்கிராப்களுக்கு விதிக்கப்படும் வரி மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குடை மீதான இறக்குமதி வரி 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது
- செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
விலை உயரக்கூடிய பொருட்கள் எவை?
நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி மாற்றங்களால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்தும் குடை, ஹெட்போன்கள், இயர்போன்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் மீட்டர்கள், கவரிங் நகைகள், எக்ஸ்ரே மெஷின்கள், எலக்ட்ரானிக் விளையாட்டு பொம்மைகள், சோலார் செல்கள் மற்றும் சோலார் மாட்யூல்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க உள்ளது.
அதிலும், கோடை மற்றும் மழைக்காலங்களில் மக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தக்கூடிய குடை மீதான இறக்குமதி வரி 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
விலை குறைய உள்ள பொருட்கள்:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே தங்க நகைகள், வைர நகைகள் வியாபாரிகள் தரப்பில் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதனையடுத்து, வெளியான மத்திய பட்ஜெட்டில் வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் மீதான சுங்க வரி 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விவசாயக் கருவிகள் மீதான வரி விலக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், ஃப்ரோசன் மஸ்ஸல்ஸ், ஃப்ரோசன் ஸ்குவிட்ஸ், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ், பெட்ரோலிய தயாரிப்புகளுக்கான ரசாயனப் பொருட்கள், ஸ்டீல் ஸ்கிராப்கள் மற்றும் அசிடிக் அமிலம் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய உள்ளது.