‘கிரிப்டோ கரன்ஸி வருமான வரி விதிப்பு; கிரிப்டோவுக்கு அரசு தரும் மறைமுக அங்கீகாரம்’ என துறையினர் மகிழ்ச்சி!
கிரிப்டோ கரென்ஸி வருமானத்திற்கு வரி விதிப்பு மற்றும் டிஜிட்டல் கரென்சி அறிவிப்பு கிரிப்டோ துறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி ஒரு பார்வை.
கிரிப்டோ கரன்ஸி பரிவர்த்தனை மூலமான வருமானம் வரி விதிப்புக்கு பொருந்தும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கான அங்கீகாரமாக அமையும் எனும் நோக்கில் கிரிப்டோ ஆர்வலர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரென்சி வெளியிடப்படும் எனும் அறிவிப்பும் கிரிப்டோ துறையினரால் வரவேற்கப்படுகிறது.
2020 மத்திய பட்ஜெட்டை பொருத்தவரை பொதுமக்கள் மத்தியிலும் தொழில்துறையினர் மத்தியிலும் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், கிரிப்டோ கரன்சிகள் தொடர்பான அரசின் அணுகுமுறையை தான் கிரிப்டோ ஆர்வலர்களும் நிதித்துறையினரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையில், பட்ஜெட்டில் கிரிப்டோ பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியர்கள் மத்தியில் அண்மைக்காலமாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரென்ஸிகள் முதலீடு அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோ கரென்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பலரும் கோரி வந்தனர்.
இந்தப் பின்னணியில் பட்ஜெட்டில் கிரிப்டோ கரென்ஸி வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்டிருப்பது, இந்த கரென்ஸிகளுக்கான அங்கீகராமாக அமைந்திருப்பதாக கிரிப்டோ ஆர்வலர்கள் கருதுகின்றனர். பலரும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
”கிரிப்டோவை அரசு வரி விதிப்புக்கான சொத்தாக கருதுவது, அவற்றுக்கு மறைமுகமாகக் கொடுக்கப்படும் அங்கீகாரமாக கருத வேண்டும்,” என எஸ்.ஏ.ஜி இன்போட்கெ, நிர்வாக இயக்குனர் அமீத் குப்தா கூறியுள்ளார்.
‘டிஜிட்டல் கரன்ஸி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனெனில் கிரிப்டோ தடை அல்லது முழு கட்டுப்பாட்டிற்கான வாய்ப்பு குறைந்துள்ளது,” என UniFarm இணை நிறுவனர் தாருஷா மிட்டல் கூறியுள்ளார்.
இது ஒரு நல்ல துவக்கம். பிளாக் செயின் சார்ந்த டிஜிட்டல் ரூபாயை வெளியிடுவது, பணம் மற்றும் நிதி தொடர்பான பெளதீக செயல்கள் மீதான சுமையை குறைத்து, இந்த தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
”பிளாக்செயின் நுட்பம் சார்ந்த டிஜிட்ட்ல ரூபாய் தொடர்பான அறிவிப்பும் அருமையானது. டிஜிட்டல் கரன்ஸியை ஏற்றுக்கொள்ளப்படும் பரிவர்த்தனை வழியாக கொள்ள இந்த நடவடிக்கைகள் வழி வகுக்கும்“ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பிட்காயின் பிரபலமாகி வரும் நிலையில், டிஜிட்டல் கரன்சிகளுக்கான வரி விதிப்பு, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு இப்போது இந்த வரி விதிப்பை நிதி அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார், என்று ஃபின்கார்பிட் கன்சல்டிங் (Fincorpit Consulting) இயக்குனர், இணை நிறுவனர் கவுரவ் கபூர் தெரிவித்துள்ளார்.
“கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கான வரி விதிப்பு தொடர்பான குழப்பத்தை போக்கியிருப்பதால் டிஜிட்டல் சொத்து மீதான வரி விதிப்பு வரவேற்கத்தக்கது. வரி விதிப்பு மற்றும் டிடிஎஸ் கிரிப்டோவில் உள்ள அனாமதேயத்தன்மை தவறாக பயன்படுத்தப்படுவதைக் குறைக்கும். கிரிப்டோவின் எதிர்காலம் கே.ஒய்.சி சார்ந்த பரிவர்த்தனையில் இருக்கிறது என நம்புகிறோம் என ASQI நிறுவனர் ஸ்வம்னில் பவார் கூறியுள்ளார்.
”கிரிப்டோ வரிவிதிப்பை அடுத்து, சில்லறை முதலீட்டாளர்கள் கிரிட்போவை வைத்திருக்கலாமா? வேண்டாமா? என குழும்ப வேண்டிய அவசியம் இருக்காது என மெட்டாஸ்பேஸ் இணை நிறுவனர் பிபின் பாபு கூறியுள்ளார்.
வரி விதிப்பின் மூலம் கிரிப்டோ கரென்ஸி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என Colexion நிறுவனர் அபய் அகர்வால் கூறியுள்ளார்.
‘கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்ஸியை வெளியிடும் எனும் அறிவிப்பு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்து தொடர்புடைய பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும்,” என Oddz Finance சி.இ.ஓ ஐஸ்வர்யா சிவகுமார் கூறியுள்ளார்.
கிரிப்டோவுக்கான வரி விதிப்பு, கிரிப்டோ நாணயங்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. மேலும், கிரிப்டோவுக்கான மறைமுக அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது.
இதனிடையே, இந்திய அரசு டிஜிட்டல் கரன்ஸியை வெளியிடும் எனும் அறிவிப்பும் பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பான தெளிவான புரிதல் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் கரன்சி அறிவிப்பு கிரிப்டோவுக்கு ஆதரவாக அமைவதாகக் கருதப்பட்டாலும், இரண்டும் அடிப்படையில் வேறானவை என்பதையும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிரிப்டோ தவிர்க்க இயலாத பரிவர்த்தனை வழி என்பதை டிஜிட்டல் கரன்சி அறிவிப்பு உறுதி செய்வதாக அமைந்தாலும், கிரிப்டோ போல டிஜிட்டல் கரன்சி ஒரு முதலீடு சொத்தாக அமையாமல், பரிவர்த்தனை வழியாகவே அமையும் என்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரிசர்வ் வங்கி வெளியிடக்கூடிய டிஜிட்டல் ரூபாய் பிளாக் செயின் நுட்பத்தில் அமைந்திருந்தாலும், ரூபாயுடன் மாறக்கூடிய தன்மை கொண்டதாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. எப்படியும் கிரிப்டோ கரன்ஸி பரப்பு மேலும் ஆழ்ந்த கவனத்திற்கு உரியதாக அமைகிறது.