சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவு - அமெரிக்க பொருளாதாரச் சரிவு அச்சம் காரணமா? - ஓரு பார்வை
உலகப் பொருளாதார மந்த நிலை இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்று வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக பங்குச் சந்தைகளில் கடும் சரிவு நிலைகள் ஏற்பட்டு முதலீட்டாளர்களின் பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஆசியா, குறைந்த அளவில் ஐரோப்பா பங்குச் சந்தைகள் கடும் சரிவுகளைச் சந்தித்து வருகின்றன.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி விரைவதாக எழும் தகவல்களை அடுத்து இந்த சரிவு நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு மிகப்பெரிய காரணம் அமெரிக்காவின் வேலையின்மை குறித்த தரவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்டதே.
ஆனால், ஜாப் டேட்டாவை வைத்து அமெரிக்க பொருளாதாரமே நலிவடைவதாக எழும் பேச்சுகள், அச்சங்கள் அவசியமற்றவியே என்கின்றனர் வேறு சில பொருளாதார நிபுணர்கள்.
இந்த சிலநாட்களாக உலவி வரும் எதிர்மறைச் செய்தி ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் 1,75,000 புதிய வேலைகள் உருவாக்கப்படுமென்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் 1,14,000 வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டதே காரணமானது. மேலும், வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.3% ஆக அதிகரித்துள்ளது. இது 3 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என்கின்றனர். இந்த ஜாப் டேட்டாதான் பொருளாதார சரிவுக்கான அறிகுறி என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் கிளாடியா சாஹ்ம் ஒருமுறை தெரிவித்ததையடுத்து இதனை "Sahm rule" என்று அழைக்கின்றனர்.
இதோடு, அமெரிக்க மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. மற்ற வளர்ந்த பொருளாதார நாடான இங்கிலாந்தின் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டி விகிதத்தை குறைத்தது, ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தைக் குறைத்தது.
சரி, வட்டி விகிதம் குறைப்பு என்றால் என்ன என்று பார்த்தோமானால், வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் கடன் வாங்குவோர் அதிகம் வாங்குவார்கள் இதனால் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்பது கோட்பாட்டளவில் உண்மை. மேலும், செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலினால் டெக்னாலஜி நிறுவனப் பங்குகள் சரிவு கண்டுள்ளன.
கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான இண்டெல் கடந்த வாரம் 15,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாக அறிவித்தது. டெக்னாலஜி நிறுவனங்கள் அதிகம் லிஸ்ட் ஆகியுள்ள அமெரிக்கப் பங்குச் சந்தை நாஸ்டாக் சரியத் தொடங்கியது. குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று 10% சரிவு கண்டது.
இந்தியப் பங்குச் சந்தைகளில் இதனால் கடும் பங்குகள் விற்பனை அதிகரித்து முதலீடுகள் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறி கடும் சரிவுகளைக் கண்டது, இன்று செவ்வாய்க் கிழமை சற்றே முன்னேற்றம் கண்டது.
அமெரிக்க பொருளாதாரப் பின்னடைவு வெறும் பயமா? உண்மையா?
கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலைக்கான வாய்ப்பை 15%லிருந்து 25% ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் தற்போது அதற்கான அறிகுறிகள், சுவடுகள் தெரிகிறதே தவிர இது முழுதான பொருளாதார சரிவுக்கு இட்டுச் செல்லுமா என்று சொல்ல முடியாது என்று வேறு சில பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க பொருளாதார ஆய்வுக் கழகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின் படி,
அமெரிக்கப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டு காலக்கட்டத்தில் 2.8% என்ற விகிதத்தில் வளர்ச்சி கண்டு வருவதாகத் தெரிவித்தனர். வளர்ச்சி விகிதம் விரைவில் எதிர்மறையாகப் போகும், என்று எச்சரிக்கின்றனர் சிலர்.
இன்னும் சில நிபுணர்களோ அமெரிக்காவில் உழைப்புச் சக்தி, உழைக்கும் மக்கள் அதிகமாகியுள்ளதால் ஜாப் டேட்டா வேலையின்மையை இப்படிக் காட்டுகிறதே தவிர இது பொருளாதார சரிவின் அறிகுறி அல்ல என்கின்றனர்.
பொருளாதார மந்த நிலையினால் இந்தியாவுக்கு நல்லதா?
உலகப் பொருளாதார மந்த நிலை இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது. அதாவது, மேற்கு நாடுகளில் பொருளாதார சரிவு என்றால் கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும். இந்தியா கச்சா இறக்குமதியில் 3ம் இடத்தில் இருப்பதால் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யலாம். இதனால் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகம் இதனால் நிதிப்பற்றாக்குறை குறையும். இது ஒரு பூஸ்ட்.
ஆனால், உலகப் பொருளாதார பின்னடைவினால் இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு வரும் அன்னிய முதலீடுகள் குறைவினால் பங்குச் சந்தைகள் ஏற்றமும் இறக்குமாக இருக்கும். அதே போல் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
ஆனால், பொதுவாக இந்திய முதலீட்டாளர்கள் அமெரிக்க பொருளாதார நிலையைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை, என்றே கூறுகின்றனர் நிபுணர்கள்.