'தடுப்பூசி பெண்மணி’ - கோவாக்சின் தயாரித்த பாரத் பயோடெக் இணை நிறுவனர் சுசித்ரா எல்லாவின் கதை!
ஹெர்ஸ்டோரியின் Women on a Mission மாநாட்டில் பாரத் பயோடெக் இணை நிறுவனரும் இணை நிர்வாக இயக்குநருமான சுசித்ரா எல்லா, அமெரிக்க வாழ்க்கை, தொழில் முயற்சி, உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு என சவால் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
குழந்தைப் பருவத்திலிருந்து ஒருவர் வளரும் விதம் பின்னாளில் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.
இந்தியாவின் முதல் உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசி உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் சுசித்ரா எல்லா-வின் வாழ்க்கையும் அப்படித்தான். இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த சவாலான தருணங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார். இதற்கு இவர் வளர்ந்த விதம் முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
புதிய நாட்டிற்கு மாற்றலாகிச் செல்வது உற்சாகமான அனுபவம் மட்டுமல்ல மோசமான அனுபமும்கூட என்று சொல்லலாம். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ஒருவர் பட்டப்படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு செல்வதானால் எப்படி இருக்கும்? அதிலும் அவரது வருவாயை மட்டுமே கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால் கேட்கவா வேண்டும்?
1986-ம் ஆண்டு சுசித்ராவும் அவரது கணவர் டாக்டர் கிருஷ்ணா எல்லாவும் உயர் கல்விக்காகவும் ஆராய்ச்சியில் ஈடுபடவும் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார்கள். கிருஷ்ணா எம்எஸ் படிப்பதற்காக ஹவாய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்தார். ஏழாண்டுகள் வரை படித்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தில் பணச்சிக்கல் ஏற்பட்டது. சுசித்ரா இந்த சவாலைத் துணிந்து எதிர்கொண்டார்.
”அமெரிக்காவில் 13-14 ஆண்டுகள் தங்கியிருந்தோம். இந்த காலகட்டமானது சுதந்திரமான கண்ணோட்டத்துடன் இருந்த என் குழந்தைப் பருவ அனுபவங்களை நினைவுப்படுத்தியது. கிருஷ்ணா பிஎச்டி படிப்பை முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனது. மிகக்குறைந்த உதவித்தொகையே கிடைத்தது. இதனால் குடும்பத் தேவைகளுக்காக சம்பாதிக்கவேண்டிய பொறுப்பு முழுமையாக என்னை வந்து சேர்ந்தது. சூழலைப் புரிந்துகொண்டேன். இந்த நொடி என்னுடைய பங்களிப்பு குடும்பத்திற்கு அவசியம் என்பது புரிந்தது,” என்று ஹெர்ஸ்டோரியின் Women on a Mission மாநாட்டில் சுசித்ரா பகிர்ந்துகொண்டார்.
பட்டப்படிப்பு முடித்திருந்த சுசித்ராவிற்கு சில்லறை வர்த்தகப் பிரிவில் மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது. சுசித்ரா தொடர்ந்து தனது திறனை மெருகேற்றிக்கொண்டே இருந்தார்.
“எனக்கு இரண்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். அவளை கவனித்துக் கொண்டே முழுநேரமாக வேலைக்கும் போகவேண்டியிருந்தது. குடும்பத்தின் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் தரமான நேரம் செலவிடுவதையும் உறுதி செய்துகொண்டேன். கிருஷ்ணாவும் நானும் அனைத்து வீட்டு வேலைகளையும் பகிர்ந்துகொள்வோம்,” என்றார்.
விஸ்கான்சில் உள்ள மேடிசன் பகுதிக்கு மாற்றலானார்கள். இரண்டாவது முறை சுசித்ரா கர்ப்பமானார். மீண்டும் வேலை, வீடு குழந்தை என அதே ஓட்டம்.
“குழந்தை பிறப்பதற்கு 48 மணி நேரம் முன்புவரை நான் வேலை செய்துகொண்டிருந்தேன்,” என்கிறார் சுசித்ரா.
குடும்பத்தை ஆதரிக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கம் அவருக்கு தொடர்ந்து உந்துசக்தியாக இருந்து வந்தது.
தொடக்க முயற்சி
1995-96 காலகட்டத்தில் தொழில் முயற்சியில் ஈடுபட இந்தியா திரும்ப நினைத்தார் சுசித்ரா. கணவர் கிருஷ்ணாவிடம் இதுபற்றி பேசினார். கிருஷ்ணா அந்த சமயத்தில் தெற்கு கரோலினா-சார்லெஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்தியர்கள் வாய்ப்பு தேடி அமெரிக்காவில் செட்டில் ஆகத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. ஆனால் இந்தத் தம்பதியோ அமெரிக்காவில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தொழில் முயற்சியில் களமிறங்கினார்கள்.
“90-களில் இறுதியில் தொடங்கப்பட்ட எங்கள் ஸ்டார்ட் அப் முயற்சி மேற்கத்திய நாடுகளுக்கு ஹெல்த்கேர் தீர்வுகளை வழங்கவேண்டும் என்கிற நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. செலவுகளைப் பொருத்தவரை ஹெல்த்கேர் அமைப்பில் மிகப்பெரிய சுமை இருந்து வந்தது. தடுப்பூசிகள் குறைந்த விலையில் கிடைக்கவில்லை. குறைந்த செலவிலான தீர்வுகள், சிறந்த பாதுகாப்பான தொழில்நுட்பம், தரமான தீர்வுகள் ஆகியவற்றை உருவாக்கவேண்டிய அவசியம் நாட்டில் இருந்தது. வளர்ந்து வரும் நாடு என்பதால் பொது சுகாதாரம் தொடர்பான சிக்கல்களும் இருந்தன,” என விவரிக்கிறார் சுசித்ரா.
மற்ற ஸ்டார்ட் அப்கள் போன்றே மனிதவள தட்டுப்பாடு, பட்ஜெட், ஆய்வு தொடர்பான அழுத்தங்கள் என ‘பாரத் பயோடெக்’ நிறுவனமும் பல்வேறு சவால்களை சந்தித்தது. மார்க்கெட்டிங், நிர்வாகம், வாடிக்கையாளர் சேவை, வணிக மேம்பாடு போன்றவை மட்டுமல்லாது பில் கட்டணம் செலுத்துவது முதல் தொலைபேசி அழைப்புகளை ஏற்பது வரை அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டார்.
“சிறிய ஸ்டார்ட் அப் தொடங்கும் தொழில்முனைவோர் பல்வேறு பொறுப்புகளை ஏற்கவேண்டும். மூன்றாண்டுகள் எங்களுக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை. வருவாய் ஈட்டாத நிறுவனத்தில் சேர யார் முன்வருவார்கள்? ஒவ்வொரு வேலையையும் நானே செய்துகொண்டிருந்தேன்,” என்கிறார்.
வளர்ச்சி
இன்று பாரத் பயோடெக் நிறுவனம் பெங்களூரு, ஹைதராபாத், குஜராஜ் ஆகிய இடங்களில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் ஒரு மாதத்திற்கு 80 மில்லியன் டோஸ் தயாரித்து வருகிறது. ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையளிக்கிறது.
நாட்டின் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் பங்களிப்பது பெருமையாக இருக்கிறது என்கிறார் சுசித்ரா.
”நாட்டின் தடுப்பூசி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இரண்டு இந்திய நிறுவனங்கள் பங்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் எண்ணிக்கை விரைவில் ஒரு பில்லியனை எட்டிவிடும். கோவிட்-19 தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி திட்டங்களை இந்தியா சிறப்பாக செயல்படுத்தியதை உலகமே வியந்து கொண்டிருக்கிறது,” என்கிறார்.
இந்நிறுவனம் இத்தகைய சாதனை படைத்திருப்பதற்கு தங்கள் குழுவின் செயல்பாடுகளே காரணம் என்கிறார் சுசித்ரா.
”புனேவில் சாம்பிள் சேகரிப்பது, ஹைதராபாத் கொண்டு வருவது, ஃபார்முலேஷன் உருவாக்குவது என தங்கள் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டு அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டனர் எங்கள் குழுவினர்,” என்கிறார்.
அவர் மேலும் கூறும்போது,
“கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வீட்டிற்கே செல்லாமல் உழைத்தார்கள். வீட்டில் இருந்த சொந்தங்களைப் பார்க்காமல் எங்கள் தொழிற்சாலைக்கு அருகிலேயே தங்கியிருந்து வேலை செய்தார்கள்,” என்று பகிர்ந்துகொண்டார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரும் இணை நிர்வாக இயக்குநருமான சுசித்ராவின் நோக்கம், கடின உழைப்பு, தலைத்துவம் உள்ளிட்ட திறன்கள் போன்றவையே நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறது.
“நாங்கள் முதல் தலைமுறை தொழில்முனைவோர். எங்களுக்கு எளிதாக அனைத்தும் கிடைத்துவிடவில்லை. ஆரம்பத்திலிருந்து தொடங்கினோம். எங்கள் கடின உழைப்பே எங்களை சிறு அடிகளாக முன்னோக்கி நகர்த்தி சென்றது,” என்கிறார்.
பெண் தலைவர்கள் முறையாக திட்டமிட்டு, முன்னுரிமை அளித்து, நேரத்தை நிர்வகித்து முக்கியமானவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என ஆலோசனை வழங்குகிறார்.
“எல்லாவற்றையும் நம்மால் ஒரே நேரத்தில் செய்து முடிக்க முடியாது. எனவே குறுகிய கால, இடைக்கால, நீண்டகால நோக்கங்கள் ஆகியவற்றிற்கிடையே புத்திசாலித்தனமாக தேர்வு செய்துகொள்ளுங்கள்,” என்கிறார் சுசித்ரா எல்லா.
ஆங்கில கட்டுரையாளர்: நயினா சூட் | தமிழில்: ஸ்ரீவித்யா