‘காதலர் தினம்’ - பைக் பயணக் காதலால் இணைந்த ஜோடிகள்...!
காதலர் தினமான இன்று, தி ராயல் என்பீல்டு பைக் மற்றும் சாகசப் பயணங்கள்மீது கொண்ட காதலால், ஒருவர் மீது மற்றொருவர் காதலாகி, இன்று ஜோடியாக நீண்டதூரப் பயணங்களை மேற்கொண்டு வரும் இரண்டு இளம் தம்பதிகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
வாழ்க்கையையே நாம் ஒரு பயணம் என்றுதான் குறிப்பிடுவோம். அந்த பயணத்தில் நமக்குப் பிடித்த மாதிரி, ரசனைகள் ஒத்துப் போன வாழ்க்கைத் துணை கிடைத்தால் சொல்லவே வேண்டாம்... வாழ்க்கை ஒரு சொர்க்கம்தான். அதிலும் பயணத்தை குறிப்பாக பைக் காதலர்கள் திருமணம் செய்து கொண்டால், அந்த வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
காதலர் தினமான இன்று, தி ராயல் என்பீல்டு பைக் மற்றும் சாகசப் பயணங்கள்மீது கொண்ட காதலால், ஒருவர் மீது மற்றொருவர் காதலாகி, இன்று ஜோடியாக நீண்டதூரப் பயணங்களை மேற்கொண்டு வரும் இரண்டு இளம் தம்பதிகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
இந்த இரண்டு ஜோடியுமே பைக் மற்றும் பயணங்கள் என்ற புள்ளியால் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தவர்கள். இருவருக்குமே பைக் மீது இருந்த காதலால், ஒருவர் மற்றொருவர் மீது காதல் வயப்பட்டவர்கள். தங்களது தேனிலவுக்குக்கூட பைக்கில்தான் சென்று வந்துள்ளனர். காதலர் தினத்தையும் தங்களுக்குப் பிரியமான பயணத்தோடு திட்டமிட்டுள்ளனர் இந்த தம்பதிகள்.
மகாபலிபுரத்தில் பிறந்து வளர்ந்தவரான ஜோசப், கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக பைக்கராக இருக்கிறார். தனது கஃபேக்கு வாடிக்கையாளராக வந்த ரோஷிணியுடன் உண்டான நட்பு, பிறகு காதலாக மாறி, இப்போது இருவரும் கணவன் -மனைவியாக மாறியுள்ளனர்.
ஜோசப் மாதிரி ரோஷிணி பைக்கர் இல்லை. ஆனால் பயணங்கள் மீது காதல் கொண்டவர். பைக் மற்றும் தனது பயணங்கள் பற்றிய உரையாடல்கள்தான் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்ள காரணமக அமைந்தது, என்கின்றனர் இருவரும்.
பயணங்கள் மேற்கொள்ள ஆர்வம் வந்தது எப்படி..?
சின்ன வயசில் இருந்தே பைக் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். 19 வயதிலேயே டிரைவிங் லைசன்ஸ் வாங்கி விட்டேன். 21 வயதிற்குள்ளாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து விட்டேன். படித்து முடித்ததும் சில ஆண்டுகள் இசைத் துறை சம்பந்தப்பட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தேன். ஆனால், சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்ததால், அந்த வேலையைவிட்டு விட்டு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்திலேயேலே ’ஜோஸ் கஃபே’ என்ற உணவகத்தை ஆரம்பித்தேன், என்கிறார் ஜோசப்.
மகாபலிபுரம் சுற்றுலா தளம் என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கும் மேலும் பயணங்கள் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும். அப்படி விளையாட்டாக 2007ல் பிளான் பண்ணியதுதான் ஹிமாலயாவிற்குச் செல்வது. ஊட்டியைவிட இரண்டு மடங்கு உயரமாக இருக்கும் என்ற மனக்கணக்கில் கிளம்பி விட்டேன். இப்போது இருப்பதுபோல், ஆண்ட்ராய்டு போன், அதில் மேப் போன்ற வசதிகள் எதுவும் அப்போது இல்லை. ஆங்காங்கே இருக்கும் மைல்கல்லை வைத்துதான் பயணம் செய்தேன்.
இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று வந்த பிறகு வெளிநாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. நமது நாட்டில் செய்வதுபோல், அங்கும் பைக்கிலேயே பயணம் செய்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். எனவே இண்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் எடுத்தேன்.
”எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இலங்கை. அதனைத் தொடர்ந்து பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். நாட்டுக்கு நாடு போக்குவரத்து விதிமுறைகள் மாறுபடுவதுதான் கொஞ்சம் குழப்பமாக இருக்கும். மற்றபடி அனைத்துப் பயணங்களுமே இனிமையானதுதான். இதுவரை 13 நாடுகளுக்கு இதுபோல் பயணம் செய்துள்ளேன்.”
என்னிடம் நிறைய பைக்குகள் இருந்தாலும், ராயல் என்பீல்டுதான் எனது பயணங்களுக்கு சரியானதாக இருக்கும். ஆண்டின் ஒன்பது முதல் பத்து மாதங்கள் நன்றாக உழைப்பேன். பிறகு அதில் கிடைத்த வருமானத்தில் குடும்பத் தேவைகளுக்கு ஒதுக்கியதுபோது, மீதியை எடுத்துக் கொண்டு பைக்கில் சுற்றுலா கிளம்பி விடுவேன். எனது அப்பாகூட அடிக்கடி கூறுவார், ‘இப்படி இத்தனை நாடுகளுக்கு சென்றதற்கு நீ செலவழித்த பணத்தில் இங்கே ஒரு வீடு, நிலம் என்று வாங்கிப் போட்டிருந்தால் எதிர்காலத்திற்கு உதவும்’ என்று. ஆனால்,
அப்படி வாழ எனக்கு உடன்பாடில்லை. நமது வாழ்க்கையை நாம் விரும்பும்படிதான் வாழ வேண்டும்...
ரோஷிணியைச் சந்தித்தது எப்படி?
பைக்கர்ஸ் கிளப் நண்பர் ஒருவர் மூலம்தான் ரோஷிணியைச் சந்தித்தேன். எனது கஃபேக்கு வாடிக்கையாலராக வந்தார். ஆரம்பத்தில் நண்பர்களாகத்தான் பழகினோம். என்னைப் போலவே அவருக்கும் பயணங்கள் பிடிக்கும், உணவு பிடிக்கும். அந்த ஒரு புள்ளியில் இருவரும் ஈர்க்கப்பட்டோம். எங்களை அறியாமலேயே ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினோம்.
வீட்டில் எங்கள் காதலைப் பற்றிச் சொன்னபோது, அவர்கள் கேட்ட முதல் கேள்வியே, ‘நீ நினைத்தால் பைக்கை எடுத்துக் கொண்டு நீண்ட பயணங்களுக்கு சென்று விடுவாயே... அதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவிப்பாளா?’ என்பதுதான். ஆனால் என்னைப் போலவே சிந்தனை கொண்டவர் என்பதால், திருமணத்திற்கு முன்பே என்னைப்பற்றி நன்கு புரிந்து கொண்டார் ரோஷிணி.
கடந்தாண்டு ஏப்ரலில் லாக்டவுனில் தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக பாண்டிச்சேரிக்கு இருவரும் சேர்ந்து சென்றோம். அதன்பிறகு ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களுக்குச் சென்றோம். விரைவில் வடமாநிலங்களுக்கு இருவரும் சேர்ந்து பைக் ட்ரிப் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
”இருவருமே உணவுப் பிரியர்கள் என்பதால், எங்களது பயணங்களுக்கு இடையே ஆங்காங்கே நிறுத்தி ரோட்டோரக் கடைகள், புதிய உணவுகள் எனத் தேடித்தேடிச் சாப்பிடுவோம். அதனாலேயே அந்தப் பயணங்கள் மேலும் இனிமையானதாக அமைந்து விடும். வீட்டில் இருப்பவர்கள் காரில் போய் வாருங்கள் என்று கூறினால்கூட, நான் சொல்வதற்கு முன்பு, ‘பைக்கில் போகலாம்’ என ரோஷிணி சொல்லி விடுவார். அந்தளவிற்கு அவருக்கு பைக் பயணங்கள் பிடிக்கும்,” என்கிறார் ஜோசப்.
திருமணத்திற்குப் பிறகு தனது கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்து விட்ட ரோஷிணி, தற்போது கணவரின் தொழிலைக் கவனித்து வருகிறார்.
காதல் உருவான விதம்...
எனக்கு சிறுவயதில் இருந்தே பைக் ஓட்டுவது, பைக்கில் செல்வது போன்றவை பிடிக்கும். ஆனால் எப்படி நீண்டதூர பயணங்கள் பைக்கில் செல்வது என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. எனது நண்பர் மூலம்தான் ஜோ எனக்கு அறிமுகமானார். ஜோவை எனது நண்பர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தபோதே, ‘இவர் சுவாரஸ்யமான நபர், பைக் பற்றி எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்’ என்று கூறினார்.
அதன் பிறகு, பைக் மற்றும் பயணங்கள் பற்றிப் பேசிப் பேசியே இருவரும் நண்பர்களாகி விட்டோம். தான் சென்று வந்த இடங்களைப் பற்றியும், அந்த அனுபவங்களைப் பற்றியும் அவர் பேசும் போது, நாமும் அந்த இடத்திற்கே போய் வந்த மாதிரி நிறைவாக இருக்கும்.
திருமணம் முடிந்ததும் ஒரு ஆல் இந்தியா டூர் போக வேண்டும் என்று முன்பு திட்டமிட்டிருந்தோம். ஆனால் லாக்டவுனில் திருமணம் நடந்ததால் அப்படிப் போக முடியவில்லை. முதலில் இந்தியாவில் ஒரு ரவுன்ட் டூர் முடித்துவிட்டு, பிறகு வெளிநாடுகளுக்குப் போக வேண்டும்.
முதன்முறையாக இவரும் பாண்டிச்சேரிக்கு பைக்கில் போன அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதிகாலையில் கிளம்பினோம். பைக்கில் சென்று கொண்டே சூரிய உதயத்தை ரசித்ததை மறக்கவே முடியாது.
காதலர் தினத் திட்டம்..
இந்தக் காதலர் தினத்திற்கு அருகில் இருக்கும் கிராமத்திற்கு செல்லலாம் எனப் பிளான் செய்திருக்கிறோம். 90ஸ் கிட்ஸ் என்பதால் எப்போதுமே எங்கள் பயணங்களில் சின்ன சின்ன பெட்டிக் கடைகளைப் பார்த்தால்கூட, அதில் ஏதாவது வாங்கிச் சாப்பிடுவோம். இந்தக் காதலர் தினத்தையும் அப்படி வித்தியாசமாக கொண்டாடலாம் எனப் பிளான் செய்துள்ளோம், என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரோஷிணி.
அடுத்த பைக் காதல் கதை இதோ...
கன்னியாகுமரியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஜெனோ, கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக தனது ராயல் என்பீல்டு பைக்கிலேயே இந்தியாவில் 50%க்கும் அதிகமான பகுதிகளுக்கு பயணம் சென்று வந்துள்ளார். கடந்த டிசம்பரில் தன்னைப் போலவே பைக் மீது காதல் கொண்ட ஹெப்சிபாவைத் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணம்தான் என்றபோதும், இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு வர பாலமாக இருந்தது பைக் காதல்தான் என்கின்றனர்.
நிச்சயிக்கப்பட்ட திருமணம்..
“பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் எங்களுடையது. நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் இடையில் ஆறு மாதங்கள் இடைவெளி இருந்தது. அப்போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்.
”இருவருக்குமே ராயல் என்பீல்டு சிறுவயதில் இருந்தே பிடிக்கும். இருவருக்குமே பயணங்கள் மீது ஆர்வம் இருந்தது எங்கள் அன்பை மேலும் வலுப்படுத்தியது,” என்கிறார் ஜெனோ.
பைக் பயணங்கள் மீது ஆர்வம் வந்தது எப்படி?
“அப்பா நீண்ட தூரங்களுக்கு செல்வதென்றாலும் பைக்கில்தான் செல்வார். சிறுவயதில் இருந்து அதைப் பார்த்தே வளர்ந்ததால், எனக்கும் பைக் மீது தீராக்காதல். கார் அல்லது பேருந்தில் செல்வதைவிட பைக் தான் எப்போதுமே எனக்கு வசதியாக இருக்கும். அப்படியே பழகி விட்டது.
கல்லூரி காலம் வரை பைக்கர்ஸ் நண்பர்கள் யாரும் கிடையாது. கல்லூரி முடிந்தபிறகுதான் அப்படி ஒரு வட்டம் அமைந்தது. ராயல் என்பீல்டு ஷோரூமில் மாதம் ஒரு பயணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள். அதில் கலந்து கொண்ட பிறகுதான் நிறைய பைக்கர்ஸ் நண்பர்கள் கிடைத்தார்கள். இப்போதுவரை அதே நட்பு தொடர்கிறது. எனக்கு ஏற்ற மாதிரியான நட்பு வட்டம் அமைந்தபிறகுதான், வெளிமாநிலங்களுக்கு, நீண்ட தூர பயணங்களுக்கு திட்டமிடத் தொடங்கினேன்.
ராயல் என்பீல்டில் கிளாஸிக் மற்றும் ஹிமாலயன் என இரண்டுமே நான் வைத்திருந்தேன். பெரும்பாலும் ஹிமாலயன் தான் நீண்டதூர பயணங்களுக்கு பயன்படுத்துவேன். உத்தரகாண்ட் போன்ற வட இந்திய பயணங்களுக்கும் அதுவே வசதியாக இருக்கும். ஆனால்,
இப்போது மனைவியோடு பயணம் செய்வதற்கு கிளாஸிக்தான் வசதியாக இருக்கிறது. நமக்குப் பிடித்த விசயத்தை ஆசையாகச் செய்யும்போது, நீண்டதூரம் பைக்கில் சென்றாலும் உடல்வலி எதுவும் இருக்காது. ஹிமாலயனும் சரி, கிளாஸிக்கும் சரி இரண்டுமே எனக்கு நீண்டதூர பயணங்களுக்கு வசதியாக இருந்தது,” என்கிறார் ஜெனோ.
மனைவியோடு ஹனிமூனுக்கு பைக்கில் போன அனுபவம்...
நான் தொடர்ச்சியாக 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள்கூட பயணம் செய்திருக்கிறேன். மும்பை, கோவா, உத்தரகாண்ட் என பல்வேறு இடங்களுக்கு பைக்கிலேயே சென்றுள்ளேன். ஆனால், அந்தப் பயணங்களில் இருந்து மனைவியோடு பைக்கிலேயே மூனாருக்கு ஹனிமூன் சென்றிருந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இதுவரை தனி ஆளாகத்தான் பைக்கில் நீண்டதூர பயணங்களுக்கு சென்றிருக்கிறேன். முதன்முறையாக பைக்கில் பின்னாடி ஒருவரை அமர வைத்துக் கொண்டு சென்றது நன்றாக இருந்தது. அதுவும் உடன் வந்தது மனைவி என்பதால், அந்தப் பயணம் மிகவும் ரசிக்கும்படியாக, மகிழ்ச்சியாக இருந்தது.
நண்பர்களோடு செல்லும்போது இரவு நேரத்திலும் தொடர்ந்து பயணம் செய்வோம். தொடர்ச்சியாக 21 மணி நேரங்கள்கூட பைக்கிலேயே பயணித்திருக்கிறோம். ஆனால் மனைவியோடு செல்லும்போது பாதுகாப்பு கருதி இரவு நேர பயணத்தை தவிர்த்து விட்டோம்.
சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றி...
தமிழகத்தில் பல இடங்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் என இந்தியாவின் பல இடங்களுக்கு பைக்கில் சென்றுள்ளேன். இதுவரை 60 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்துள்ளேன். பைக்கில் பயணம் செய்யும் போது பல வித்தியாசமான அனுபவங்களைச் சந்தித்துள்ளோம்.
காதலர் தினத்திற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
காதலர் தினத்திற்கு வர்கலாவிற்கு செல்லலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் பகுதியில் இருந்து சுமார் 150 கிமீ வரும். என் மனைவிக்கு கடற்கரை என்றால் ரொம்பவே பிடிக்கும். எனவே கடற்கரை சாலைகளை மையப்படுத்தி, இனிமையான நினைவுகளை உருவாக்கும் முயற்சியாக இந்தப் பயணத்தை திட்டமிட்டுள்ளோம், என்கிறார் ஜெனோ.
ஜெனோவின் காதல் மனைவி ஹெப்சிபாவும் பைக் காதலிதான்.
“இதுவரை இவ்வளவு தூரம் நான் பைக்கில் பயணம் செய்ததில்லை. எனவே ரொம்பவே கஷ்டமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அந்தளவிற்கு இல்லை. காலை 5 மணிக்கு கிளம்பினோம். மாலை 3 மணியளவில் மூனாறு சென்று விட்டோம். நான் இல்லாமல் அவர் மட்டும் சென்றிருந்தால் இன்னமும் சீக்கிரமா அங்கு சென்றிருப்பார். நான் உடன் சென்றிருந்ததால், இடையில் கொஞ்சம் நின்று நின்று சென்றோம்.”
எனது அப்பாவும் ஒரு பைக் விரும்பி தான். அவர் மட்டும் தனியாகச் செல்வதென்றால் கொச்சி வரைகூட பைக்கில் சென்றிருக்கிறார். ஆனால் எங்களை காரில் மட்டுமே வெளியில் அழைத்துச் செல்வார். ஒருமுறை கட்டாயப்படுத்தி என்னை திருவனந்தபுரம் அழைத்துச் செல்ல வைத்தேன். ஒருநாள் முழுவதும் பைக்கிலேயே திருவனந்தபுரம் முழுவதும் சுற்றினோம். அதுவும் மறக்க முடியாத அனுபவம். என் ஆசைப்படியே ஒரு பைக்கர் எனக்கு வாழ்க்கைத்துணையாக அமைந்து விட்டது வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி.
நானும் பைக் ஓட்டுவேன். யாரும் எனக்கு அதைச் சொல்லித் தரவில்லை. மற்றவர்களிடம் கேட்டவற்றை வைத்து நானே எனது அப்பாவின் பைக்கை ஓட்டிப் பழகினேன். அப்போதிருந்தே ராயல் என்பீல்டு ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது என் கணவரிடம் அந்த பைக் இருப்பதால், அதையும் ஓட்டிப் பழகி விட்டேன்.
திருமணம் முடிந்து சில தினங்களில் நாங்கள் கன்னியாகுமரிக்கு பைக்கில் சென்றோம். அப்போது நான் தான் பைக்கை ஓட்டிச் சென்றேன். அவர் பின்னாடி அமர்ந்து வந்தார். அது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் பைக் ஓட்டிய வீடியோக்களைப் பார்த்து வீட்டில் இருந்தவர்கள் ஆச்சர்யமடைந்து விட்டனர்.
”எதிர்காலத்தில் ஆல் இந்தியா டூர் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. விரைவில் அழைத்துச் செல்கிறேன் என என் கணவர் சொல்லி இருக்கிறார்,” என மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
பைக் பயணங்கள் நினைவலைகளில் இவர்களின் காதல் நினைவுகளும் வெளியே தெரிந்தது.