Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

காதலர் தினத்தில் அரசு அலுவலகத்திலே திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் - ஐபிஎஸ் ஜோடி!

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த நேரமில்லாமல், அலுவலகத்திலேயே எளிமையாக நடத்தி முடித்துள்ளனர் ஒரு ஐஏஎஸ் - ஐபிஎஸ் காதல் ஜோடி.

காதலர் தினத்தில் அரசு அலுவலகத்திலே திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் - ஐபிஎஸ் ஜோடி!

Monday February 17, 2020 , 2 min Read

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என சிலர் எப்போதுமே தங்களது வேலையில் அர்ப்பணிப்போடு இருப்பதை நாம் பார்த்திருப்போம். தன் பணிக்காலத்தில் விடுமுறையே எடுக்காமல் உழைப்பவர்கள் ஏராளம். இதனால் குடும்ப விழாக்களில்கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.


சரி, மற்ற வீட்டு விஷேசங்களுக்கு போகவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் தங்களது திருமணத்தையே பிரமாண்டமாக நடத்த நேரமில்லாமல் அரசு அலுவலகத்திலேயே திருமணம் செய்து கொண்டு அசத்தியுள்ளனர் பஞ்சாபைச் சேர்ந்த காதல் ஜோடி.


அரசு அலுவலகம் என்றதும் இவர்கள் அடிப்படை அரசு ஊழியர்கள் என தவறாக எண்ணிவிடக்கூடாது. மணமகன் ஐஏஎஸ் அதிகாரி, மணமகள் ஐபிஎஸ் அதிகாரி.

IAS

2015 பேட்சைச் சேர்ந்தவர் மணமகன் தஷார் சிங்லா, 2017 பேட்சைச் சேர்ந்தவர் அவரது காதலி நவ்ஜோத் சிமி. பஞ்சாபைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தனர். திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். ஆனால், திருமணத்திற்கு அவர்களது பணியே இடைஞ்சல் ஆனது.

குடிமைப் பணிகளில் இருப்பவர்கள் எப்போதும் பிஸியாக இருப்பது வழக்கம் தான். மக்கள் தேவைகளைத் தீர்த்து வைக்க, எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். அந்தவகையில், துஷார் தற்போது மேற்குவங்கத்தில் உள்ள ஹௌராவில் மாவட்ட ஆட்சியராகவும், சிமி பிகாரில் உள்ள பாட்னாவில் டி.எஸ்.பியாகவும் வேலை செய்து வருகின்றனர்.


துஷாரும், சிமியும் முதலில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் தொடர் வேலையால் திருமணத்திற்கென இருவருக்குமே நேரம் ஒதுக்க முடியவில்லை. திருமண வேலைகளுக்காக பஞ்சாப் செல்ல இருவருக்குமே நேரமில்லை. இதனால் பலமுறை திருமணத்தேதி குறிக்கப்பட்டு, பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.


இப்படியே போனால் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள இயலாமல், காதலர்களாகவே காலம் கழிக்க வேண்டி வந்து விடும் என்ற கவலை காதலர்களுக்கு உண்டானது. எனவே, காதலர் தினத்தன்று எளிமையாக திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர்.


அதன்படி, ஹௌராவில் உள்ள துஷார் பணி புரியும் அரசு அலுவலகத்திலேயே காதலர் தினத்தன்று அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சார்பதிவாளரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கே வரவழைத்துப் பெற்றோர் மற்றும் ஒரு சில உறவினர்கள் சூழ மிகவும் எளிமையான முறையில் துஷாரும், சிமியும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். தனது காதலனைக் கரம் பிடிப்பதற்காகச் சிமி மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு மேற்குவங்கம் வந்திருந்தார்.
ips

இந்த சிறப்புத் திருமணம் குறித்து ஹௌரா மாவட்டத் தலைவர் அருப் ராய் கூறுகையில்,

"இருவரும் அரசாங்க அலுவலகத்தில் திருமணம் செய்துகொள்வதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரும் கையொப்பம் மட்டுமே போட்டனர். மற்றபடி விருந்து போன்ற எதுவும் அங்கு நடைபெறவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமாக திருமணம் செய்து கொள்ள நேரம் இல்லாமல் எளிமையாக பணி புரியும் அலுவலகத்திலேயே திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடியின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. வித்தியாசமாக திருமணம் செய்து கொண்ட இந்த புதுமணத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

WEdding

திருமணத்தை எளிமையாக முடித்து விட்டதால், பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த துஷாரும், சிமியும் முடிவு செய்துள்ளனர். ஆனால் அது இப்போதைக்கு இல்லையாம். 2021ம் ஆண்டு மேற்குவங்க மாநில பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தான், தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


அரசுப் பணியை வெறும் கடமையாக எண்ணாமல், அதற்காக தங்களது திருமணத்தை எளிமையாக முடித்து, வரவேற்பு நிகழ்ச்சியையும் இரண்டு வருடங்கள் கழித்து நடத்த முடிவு செய்துள்ள இந்த சின்சியர் ஊழியர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.