'ரூ.1,000 கோடி பிசினஸ்' - வித்தியாச ‘வனனம்’ வெற்றிக் கொடி நாட்டுவது எப்படி?
தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், வேளாண் பொருட்கள், சில்லறை விற்பனை ஆகிய தொழில்களால் ‘வனனம்’ ரூ.1,000 கோடியை ஈட்டியுள்ளது.
சமஸ்கிருதத்தில் செல்வத்தைக் குறிக்கும் என்ற அர்தத்தை தரும் பெயர் ‘வனனம்’. இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கும் ‘வனனம்’ வெறும் ஸ்டார்ட்அப் மட்டுமல்ல, இது இந்தியாவின் வளர்ந்து வரும் கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். வேறு வேறான வணிக அமைப்புகள் பலவும் ஒன்றிணைவதே கூட்டு நிறுவனங்கள். அதாவது, Conglomerate கான்செப்ட்.
“வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவது என்பது குடும்பம் மற்றும் நல்ல கல்வியில் தொடங்குகிறது” - ‘வனனம்’ ஸ்டார்ட்அப்'பின் நிறுவனர்கள் கேஷவ் இனானி மற்றும் மகேந்திர ரத்தோட் ஆகியோரின் கூற்று இது.
இந்தியாவில் கிடைக்கும் ஆற்றலை உலக அளவில் கொண்டு சென்று அதன்மூலம் ஒரு பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதே இந்த நிறுவனர்களின் நோக்கம். அந்த நோக்கத்தின் வெற்றி அவர்களின் வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது என்றால் மிகையல்ல.

தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், வேளாண் பொருட்கள், சில்லறை விற்பனை ஆகிய தொழில்களால் ‘வனனம்’ ரூ.1,000 கோடியை ஈட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் வெற்றிக் கதை இந்திய ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் லாபகரமான பிசினஸை உருவாக்குவதில் செலுத்திய கவனம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை அறியும் முன் நிறுவனர்களை பற்றி அறியலாம்.
சிக்கனமும், கல்வியின் வல்லமையும்
கேஷவ் இனானி, ஜவுளித் தொழிலை பின்னணியாகக் கொண்ட ஒரு மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத் தொழிலை கவனிப்பதற்காக அவரின் தந்தை சட்டக் கல்லூரியில் இருந்து பாதியில் நின்றவர். இதன்பின், குழந்தைகளின் கல்விக்காக கேஷவ் குடும்பம் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது.
சிறுவயது முதலே கேஷவின் தந்தை வெற்றிகரமான தொழிலைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான கடின உழைப்பையும் சிக்கனத்தின் தன்மையையும் மகனுக்குள் விதைத்தார். கேஷவ் ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆக வளரும்போது தந்தையின் இந்தப் படிப்பினை அவருக்கு தொழிலை பற்றி கண்ணோட்டத்தை கொடுத்தது.
“அடிப்படை இல்லாமல் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவது பற்றி நீங்கள் சிந்திக்க முடியாது என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தது. இன்றைய பிசினஸை போலல்லாமல், நான் வேறுபட்ட சிந்தனை கொண்ட பள்ளியிலிருந்து வந்தவன். அதாவது, பிசினஸில் நீங்கள் வருவாய் ஈட்டினால், அது லாபகரமாக இருக்க வேண்டும். அதுதான் அந்த சிந்தனை,” என்கிறார் கேஷவ்.
கேஷவின் இந்த தத்துவத்துடன் உடன்படும் மகேந்திர ரத்தோட், எளிமையான பின்னணியை கொண்டவர். அவரது தந்தை ஆரம்பத்திலேயே கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டவராக இருந்து, அவர்களின் கிராமத்தில் கல்லூரிக்குச் சென்ற முதல் நபராக இருந்தார். கல்வியின் மீதான தந்தையின் இந்த முக்கியத்துவம் மகேந்திர ரத்தோட் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. விளைவு, ஐஐஎம்-பெங்களூரு மாணவராக உருவெடுத்தார்.
அடுத்து தொழில்முனைவு. கடந்த பத்து ஆண்டுகளில், மகேந்திர ரத்தோட் பல தொழில்முனைவோர் அவதாரங்களை எடுத்தார். 2014-ல் அவரது முதல் முயற்சி. முக்கிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு டி-ஷர்ட்களை விற்கும் நிறுவனம். அது கைக்கொடுக்க தவற, அடுத்ததாக 'செல்லர்வொர்க்ஸ்' (Sellerworx). இது பின்னாளில் கேபிலரி டெக்னாலஜிஸால் கையகப்படுத்தப்பட்டது.
பின்னர், ட்ரெக்கிங் சாகசங்களுக்கான ஃபேஸ்புக் பக்கமாகத் தொடங்கிய 'ட்ரெக்நோமட்ஸ்' (TrekNomads). கொரோனா தொற்றுக்கு பிறகு இது நல்ல வளர்ச்சியை பெற்றது. இதற்கு பிறகு ஒரு கன்சல்டிங் நிறுவனத்தையும் நிறுவினார்.
பரஸ்பர மரியாதையில் உண்டான கூட்டணி
கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றும்போது தான் கேஷவும் மகேந்திர ரத்தோடும் சந்தித்துக் கொண்டனர். தொழில் சந்திப்பாக தொடங்கி இவர்களின் பயணம் விரைவில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பரஸ்பர மரியாதையால் நட்பு கூட்டணியாக உருமாறியது. இருவருக்குமான உரையாடல்களில் பொதுவாக வெளிப்பட்டது பணம் சம்பாதிப்பதும், தங்களுக்கென பிசினஸை கட்டமைப்பதும். இந்த பொதுவான எண்ணம் அவர்களுக்கான கூட்டணியை வலுப்படுத்துகிறது.
இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம். ஆனால், அது பல்வேறு கண்ணோட்டங்களை கொண்டுவருகிறது. குறிப்பாக, முடிவெடுக்கும் விஷயங்களில் பல்வேறு யோசனைகளை இந்த வயது வித்தியாசம் கொண்டுவருகிறது. வித்தியாசங்கள் இருந்தாலும், அவர்கள் கொண்டிருந்த வணிக தத்துவம் இருவரையும் பொதுவான பாதையில் பயணிக்க வைத்தது. அவர்களின் வணிக தத்துவம் மிக சிம்பிள்...
பிசினெஸ் செய்தால் லாபம் பார்க்க வேண்டும். லாபம் பெற தேவையான முயற்சிகள் அனைத்தையும் செய்வது!
இதுதான் அந்த தத்துவம். இதனால் வனனம் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டு, அதன்மூலம் கேஷவும், மகேந்திராவும் சப்ளை செயினில் தொடங்கி ரியல் எஸ்டேட், சரக்கு போக்குவரத்து வரை பல்வேறு பிசினஸை பரிசோதனை செய்தனர்.
அவர்களின் பிசினெஸ் மந்திரம்... ‘சரியான திறமையைக் கண்டுபிடித்து, லாபத்திற்கு முன்னுரிமை அளித்தாலே போதும் சாதாரண பிசினெஸ்களில் வெல்ல முடியும்’ என்பதே. இதைத்தான் ‘வனனம்’ ஸ்டார்ட்அப் ரியல் எஸ்டேட், சரக்கு போக்குவரத்து என பழமையான பிசினஸ் மாடல் மூலம் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.
“இந்திய பிசினஸுக்கு என்று ஒரு பெரிய சந்தை உள்ளது. அடுத்த 30 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுகள் என்பதால் தனிநபர் வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வளமான எதிர்காலம் உள்ளது,” என்கிறார் மகேந்திர ரத்தோட்.
அடுத்த தலைமுறை டெக்னாலஜி சார்ந்த பிசினஸில் முதலீடு செய்து வருவதை அவர் மறுக்கவில்லை. அதனால்தான் தொழில்நுட்பம் ஒரு சக்தி என்றாலும் வலுவான வணிகத்துக்கு அடிப்படை மிக முக்கியமானவை என்கிறார்கள் இந்த நண்பர்கள்.
பாரதத்தை மையமாகக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனம்
‘வனனம்’ நிறுவனத்தின் தத்துவம், இந்தியாவில் நீண்டகால முதலீடுகளுக்கு முன்னுரிமை அளித்தலே. இதனால்தான் வனனத்தின் குறிக்கோள்,
“பாரதத்தில் கட்டமை, பாரதத்தால் கட்டமை, உலகத்திற்காக கட்டமை,” என்பதை அடிப்படையாக கொண்டது என்கிறார் கேஷவ்.
இந்தியாவை உலகளாவிய வாடிக்கையாளரிடம் கொண்டு செல்ல அடுத்த வணிகத்தை முயற்சிக்கின்றனர். அவர்களின் அடுத்த முயற்சி கேஷவ் குடும்ப தொழிலான ஜவுளி. ஜியோர்வன் (Giorvan) என்கிற ஜவுளி பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது ஒரு ஆடம்பர ஆடை பிராண்ட் ஆக, சந்தையில் பிரபலமாக உள்ள Louis Vuitton, Gucci போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“தற்போது, இந்தியாவை மையமாக கொண்டு எந்த ஆடம்பர ஆடை பிராண்டுகளும் இல்லை. ஜவுளி தொழிலில் எங்கள் குடும்பத்துக்கு இருக்கு வரலாற்றை அடிப்படையாக கொண்டு 60-65 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தை ஆய்வு செய்து இந்த பிராண்டை கொண்டுவந்துள்ளோம்,” என்கிறார் கேஷவ்.
அடுத்த 10 மாதங்களில் துபாய், ஐரோப்பா மற்றும் இந்தியாவை ஆரம்ப இலக்கு சந்தைகளாகக் கொண்டு ஜியோர்வன் செயல்படத் தொடங்குகிறது. அதன்பின் படிப்படியாக உலக சந்தையை நோக்கி நகரும்.
சமூகப் பொறுப்பு
வணிகத்தை தாண்டி சமூகப் பொறுப்பு இருந்தால் மட்டுமே ஒரு நிறுவனம் மக்களை எளிதில் அடையும். அதனைத்தான் ‘வனனம்’ செய்கிறது.
வனனத்தின் வருவாயில் ஒரு பகுதி கல்வி, பேரிடர் நிவாரணம், உதவித்தொகை (விளையாட்டு உதவித்தொகை உட்பட) மற்றும் கலாச்சார பாதுகாப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் அறக்கட்டளைக்கு கொடுக்கப்படுகிறது.
“நாங்கள் பணத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை, செல்வத்தை உருவாக்க முயற்சிக்கிறோம். செல்வம் எப்போதும் சமூகத்திற்கும், அதன் பல பங்குதாரர்களுக்கும் சொந்தமானது,” - மகேந்திர ரத்தோட்.
நேர்காணல்: ஷ்ரத்தா சர்மா

சுயநிதியில் ரூ.10,000 கோடி நிறுவனமாக உருவெடுத்த ‘ரூட் மொபைல்’ வெற்றிக்கதை!
Edited by Induja Raghunathan