Logic மேனேஜ்மென்ட் பயிற்சி மைய நிறுவனத்தை கையகப்படுத்திய சென்னை Veranda Learning!
வெராண்டாவின் வணிகக் கல்வி முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக லாஜிக் மேனேஜ்மென்ட் பயிற்சி நிறுவனங்கள், ஜே.கே.ஷா வகுப்புகளுடன் இணைந்து செயல்படவுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனமான வெராண்டா லேர்னிங் கேரளாவைச் சேர்ந்த லாஜிக் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் பிரைவேட் லிமிடெட்டை வாங்க ஒப்புக் கொண்டுள்ளது.
Veranda-வின் வணிகக் கல்வி முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக லாஜிக் மேனேஜ்மென்ட் பயிற்சி நிறுவனங்கள், ஜே.கே.ஷா வகுப்புகளுடன் இணைந்து செயல்படவுள்ளது.
இந்த கையகப்படுத்தல், அதன் துணை நிறுவனமான வெராண்டா எக்ஸெல் லேரிங் சொல்யூஷன்ஸ் (Veranda XL Learning Solutions Pvt Ltd) மூலம் எளிதாக நடந்தேறியது. இந்தக் கையகப்படுத்தல் மூலம் வெராண்டா, மாணவர்களுக்கு பரந்த கல்வித் திட்டங்களை வழங்க வழிவகை செய்யும்.
இந்த கையகப்படுத்தல் ஒப்பந்தங்களின் மதிப்பு என்ன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. லாஜிக், வெராண்டாவின் வணிகக் கல்வி முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக, ஜே.கே.ஷா வகுப்புகளுடன் ஒத்துழைக்கவுள்ளது.
2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லாஜிக் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், அதன் பல்வேறு வகையான ‘காமர்ஸ்’ தொழில்முறை படிப்புகளுக்கு பெயர் பெற்றது, கேரளா முழுவதும் எட்டு கிளைகளில் செயல்படுகிறது.
வெராண்டா லேர்னிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் கல்பாத்தி இது தொடர்பாகக் கூறுகையில்,
“லாஜிக் நிறுவனம்; வெராண்டாவின் கல்விச்சூழல் பொருளாதார அமைப்புக்குள் எந்த வித தங்குதடையுமின்றி ஒன்றிணைகிறது. 2025-ம் ஆண்டில் சுமார் 10 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் என்று நம்புகிறோம்,” என்றார்.
பிபிஇஏ இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் தனியார் நிறுவனத்திடமிருந்து மாற்றமுடியாத கடன் பத்திரங்கள் மூலம் வெராண்டா லேர்னிங் ரூ.425 கோடி கடன் நிதியை திரட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த கையகப்படுத்தல் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
வெராண்டாவின் முழு வளர்ச்சி உத்தியும் ஏறக்குறைய முழுமையாக கையகப்படுத்துதல்களையே நம்பியுள்ளது — இதுவரை பனிரெண்டு நிறுவனங்களைக் கையகப்படுத்த வெராண்டா நிறுவனம் ரூ.1,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.
கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமத்தால் 2018 இல் நிறுவப்பட்ட 'வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்' பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனமாகும், இது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது, அத்துடன் தொழில்முறை திறன் மேம்பாடு திட்டங்களையும் வழங்குகிறது.