இந்தியாவின் 10 முன்னணி இளம் தொழில்முனைவோர்கள் பட்டியல்!

By YS TEAM TAMIL|6th Nov 2020
வெவ்வேறு துறைகளில் முன்னணி வகிக்கும் 10 இளம் தொழில்முனைவோர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தொழில்முனைவு என்பது மிகவும் கடினமான, சவால் நிறைந்த பயணமாகவே கருதப்படுகிறது. தொழில் முயற்சியில் ஈடுபட வயது ஒரு தடை அல்ல. இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுள்ளவர்கள் தொழில்முனைவு முயற்சியில் களமிறங்கி ஒரு கை பார்த்துவிடுவதுண்டு.


முதியவர்கள் அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள். தொழில்முனைவு பயணத்தில் ஏற்படக்கூடிய லாப நஷ்டங்கள், ரிஸ்க் போன்றவற்றை முறையாகக் கணித்து வணிக செயல்பாடுகளை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வார்கள். இது சாதகமான அம்சம்.

மற்றொருபுறம் இளம் வயதில் தொழில்முனைவில் ஈடுபடுவர்கள் எந்தவித கருத்து திணிப்பும் இன்றி திறந்த மனதுடன் சந்தைத் தேவைகளைப் புரிந்துகொண்டு புதுமையான தீர்வுகளை வழங்க முற்படுவார்கள். இதுவும் சாதகமான அம்சமே.


மிகவும் இளம் வயதில் வெவ்வேறு துறைகளில் தொழில்முனைவு முயற்சியைக் கையிலெடுத்து பிரம்மாண்ட வெற்றியை வசப்படுத்திய 10 இளம் தொழில்முனைவர்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

1. ரித்தேஷ் அகர்வால் (Oyo)

1.1

இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோர்களை பட்டியலிட்டால் அதில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் பெயர் ரித்தேஷ் அகர்வால். ரித்தேஷ் கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தம் செய்தவர். அதன் பிறகு Oravel Stays என்கிற முதல் ஸ்டார்ட் அப்பைத் தொடங்கினார்.

இந்த முயற்சி மெல்ல விரிவடைந்து பயணிகளின் பட்ஜெட்டிற்கு ஏற்ற தங்குமிட வசதிகளை வழங்கும் OYO Rooms நிறுவனமாக பிரம்மாண்ட வளர்ச்சியடைந்துள்ளது. குருகிராமில் 11 அறைகள் கொண்ட ஹோட்டலாக தொடங்கப்பட்ட OYO Rooms இந்தியா முழுவதும் 65,000 அறைகளைக் கொண்டுள்ளது.

2. திரிஷ்னீத் அரோரா

2

திரிஷ்னீத் அரோரா ஒரு நூலாசிரியர். மிகச்சிறந்த ஹேக்கர். 25 வயதில் திரிஷ்னீத் அரோரா TAC செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆனார். இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பில் இருக்கும் சிக்கல்கள் கண்டறியப்பட உதவுகிறது.


ஏஞ்சல் முதலீட்டாளர் விஜய் கேடியாவிடமிருந்து நிதியுதவியும் ஐபிஎம் முன்னாள் துணைத் தலைவர் வில்லியம் மே அவர்களிடமிருந்து ஆதரவும் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு GQ Magazine சக்திவாய்ந்த 50 இளம் இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றார். நியூ மெக்சிகோ, சாண்டா ஃபே மேயர் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதியை `திரிஷ்னீத் அரோரா தினம்’ என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

3. ஸ்ரீலஷ்மி சுரேஷ்

3

இளம் இந்திய தொழில்முனைவோர்களில் ஒருவரான ஸ்ரீலஷ்மி சுரேஷ் உலகின் இளம் வெப் டிசைனர் மற்றும் சிஇஓ ஆவார். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் வென்றுள்ளார். 10 வயதிலேயே வெற்றியின் ருசி கண்டவர் இவர். அந்த வயதிலேயே eDesign என்கிற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.


இந்த வெப் டிசைனிங் நிறுவனம் வலைதளம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பிரபல நிறுவனங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட வலைதளங்களை இவர் உருவாக்கியுள்ளார்.

4. அகிலேந்திரா சாஹு

4

அகிலேந்திரா சாஹு 17 வயதில் ASTNT Technologies Pvt Ltd, Technical Next Technologies நிறுவனர் மற்றும் சிஇஓ ஆனார். இந்தியாவைச் சேர்ந்த ASTNT நிறுவனம் டிஜிட்டல் மார்கெட்டிங், வலைதளம் உருவாக்குதல், செயலி உருவாக்குதல், SEO சேவைகள் போன்ற சேவைகளை வழங்குகிறது. Technical Next Technologies நிறுவனம் சிறந்த வெப்ஹோஸ்டிங் தீர்வுகளை வழங்குகிறது. இவரது செயலிகள் கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ளன. அகிலேந்திரா முன்னணி வெப் டிசைனராகத் திகழ்கிறார்.

5. கிங் சித்தார்த்

5

இளம் தொழில்முனைவரான கிங் சித்தார்த் வடிவமைப்பிற்கும், தத்துவங்களுக்கும் பெயர்போனவர். பல்வேறு கல்லூரி நிகழ்வுகளில் உரையாற்றுகிறார். இவர் படிப்பை இடைநிறுத்தம் செய்தாலும் கற்பதை நிறுத்தவில்லை. வழக்கமான சிந்தனைகளில் சிக்கிக்கொள்ளாத இவர், பள்ளியில் படித்த பருவத்திலேயே, அதாவது சுமார் 11 வயதிலேயே புத்தாக்க சிந்தனைகள் கொண்டவராக இருந்தார். அப்போதே இவர் தனது பகுதியில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

6. கவிதா சுக்லா

6

கவிதா சுக்லாவின் நிறுவனத்தின் பெயர் Fenugreen. இந்த நிறுவனத்தின் ஆர்&டி செலவுகள் பள்ளி அறிவியல் பிராஜெக்டிற்கு செலவிடும் தொகையைக் காட்டிலும் சற்று அதிகம், அவ்வளவே. கவிதா சுக்லாவுக்கு 12 வயதிருக்கும்போது இந்தியா வந்திருந்தார். அப்போது தெரியாமல் குழாய் தண்ணீரைக் குடித்துவிட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டது. கவிதா சுக்லாவின் பாட்டி வீட்டிலேயே தயாரித்துக் கொடுத்த மசாலா டீ இவரை குணப்படுத்தியுள்ளது. இதுவே இவரது ஆய்விற்கான ஆரம்பப்புள்ளியாக இருந்துள்ளது. இவர் மேரிலண்ட் திரும்பியதும் இதுகுறித்து பல ஆண்டுகள் ஆய்வு செய்தார். காய்கறிகள், பழங்கள் என உணவுப்பொருட்களை ஃப்ரெஷ்ஷாக பாதுகாக்கும் ஃப்ரெஷ்பேப்பர் ஷீட்களை இவரது நிறுவனம் வழங்குகிறது.

7. ஷ்ரவன் மற்றும் சஞ்சய் குமரன்

7

ஷ்ர்வன், சஞ்சய் இருவரும் சகோதரர்கள். ஷ்ரவன் வயது 17. சஞ்சய் வயது 15. இவர்கள் இந்தியாவின் இளம் தொழில்முனைவோர்கள் ஆவர். இவர்கள் இருவரும் GoDimensions நிறுவனத்தின் இணை நிறுவனர்கள். டிஜிட்டல் உலகிற்கான எளிமையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

இவர்கள் இந்தியாவின் இளம் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர்கள். புத்தக வாசிப்பும் சிக்கல்களுக்கு தீர்வுகாண்பதுமே வெற்றியை சாத்தியப்படுத்துகிறது என்கின்றனர் இந்த சகோதரர்கள். இவர்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS தளங்களுக்கான செயலிகளை உருவாக்குகிறார்கள்.

8. திலக் மேத்தா

8

13 வயது திலக் மேத்தா 2018ம் ஆண்டு Papers N Parcels நிறுவனத்தைத் தொடங்கினார். மும்பை நகருக்குள் சிறு பார்சல்கள் மற்றும் பேப்பர்கள் எளிதாக கூரியர் செய்யப்பட இந்த நிறுவனம் உதவுகிறது. திலக் மேத்தா மிகவும் இளம் வயதான 13 வயதில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார். அப்பாவையும் தனது தொழில் முயற்சியில் இணைத்துக்கொண்டார். மும்பையில் மிகவும் நம்பகமான விநியோகச் சேவையளிக்கும் பிரபல டப்பாவாலாக்களுடன் இணைந்து செயல்படுகிறார்.

9. அர்ஜுன் ராய்

9

அர்ஜுன் ராயின் வயதுடையவர்கள் வீடியோ கேம் விளையாடி பொழுதைப் போக்கும் நிலையில் இவர் தொழில்முனைவராக உருவெடுத்துள்ளார். 2010ம் ஆண்டு விரைவாக வளர்ச்சியடைந்த ஆன்லைன் விளம்பர நிறுவனத்தின் சிஓஓ ஆனார். விரைவில் சொந்த நிறுவனத்தை நிறுவினார். ஏழு வயதிலேயே தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்கிற எண்ணம் இவருக்கு எழுந்துள்ளது.

10. அத்வைத் தாகூர்

10

16 வயது அத்வைத் தாகூர் தொழில்நுட்ப மேதை. ஆறு வயதிலேயே கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். ஒன்பது வயதில் தன் முதல் வலைதளத்தை உருவாக்கியுள்ளார். கூகுளின் AI மற்றும் Cloud தளங்களில் இரண்டாண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் 12 வயதில் Apex Infosys India நிறுவனத்தை நிறுவினார். தற்போது இதன் சிஇஓ-வாக உள்ளார்.


இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஐஓடி போன்ற பிரிவுகள் சார்ந்து செயல்படுகிறது. அத்வைத் 2017-ம் ஆண்டு Wikia’s 20 வயதுக்குட்பட்ட இளம் தொழில்முனைவோர் பட்டியலில் 4-வது இடம் பிடித்தார்.


ஆங்கில கட்டுரையாளர்: டேவிட் பெர்ரி | தமிழில்: ஸ்ரீவித்யா