‘வாட்ஸ் அப்’ குரூப் மூலம் கிடைத்த தார்சாலை: ஒன்றிணைந்து சாதித்த கிராம இளைஞர்கள்!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக ஒன்றிணைந்து சிதலமடைந்த தங்களது கிராமத்துச் சாலையை தாங்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக ஒன்றிணைந்து சிதலமடைந்த தங்களது கிராமத்துச் சாலையை தாங்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எழுச்சி மிகு இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை தாங்களே செய்து கொடுக்கும் அதிசய செயல்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு.
முகநூல் மூலமாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ நண்பர்களை ஒன்றிணைத்து கிராமத்தில் உள்ள குளங்களை தூர்வாருவது, சிதிலமடைந்த பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்து கொடுப்பது, தெருவிளக்குகள் அமைத்துக் கொடுப்பது, சாலை வசதி செய்து கொடுப்பது என பல ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி, திருவாரூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் குரூப் இணைந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் கொடுத்த ஊக்கத்தால், சொந்த கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை அப்பகுதி இளைஞர்கள் தொடங்கியுள்ளனர்.
சொந்த ஊருக்காக கரம் கோர்த்த இளைஞர்கள்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த மாதம் தமிழகம் முழுவதுமே கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு, கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள், விளைநிலங்கள், சாலைகள், தரைப்பாலங்கள் சேதமடைந்தன.
மன்னார்குடி அருகே குமட்டி திடல் ஊராட்சிக்குட்பட்ட புத்தகரம் கிராமத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. ஏற்கனவே மண் சாலையான இது, மழைக்காலம் வந்துவிட்டாலே சேறும், சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு பெருஞ்சிரமத்தை கொடுத்து வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் கூட சென்று வர முடியாத அளவிற்கு புத்தகரம் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
புத்தகரம் கிராமத்தின் இந்த நிலையை மாற்ற வேண்டுமென அந்த கிராமத்து இளைஞர்கள் முடிவெடுத்தனர். இதற்காக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இளைஞர்களிடம் நிலையை விளக்கியுள்ளனர்.
ஆம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் இன்றளவும் கிராமத்து இளைஞர்களுடன் ‘புத்தகரம் 360°’ என்ற வாட்ஸ் அப் குரூப் மூலமாக தொடர்பில் உள்ளனர்.
குவைத், துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்க்கும் புத்தகரம் இளைஞர்கள் நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு நண்பர்கள் கொடுத்த நிதியின் மூலமாக 2 லட்சம் ரூபாய் திரப்பட்டு, தார்சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சம்பளமின்றி சாலை அமைக்கும் பணிக்கு உதவிய பெண்கள்:
இளைஞர்களின் கூட்டு முயற்சியை தட்டிக்கொடுத்து பாராட்டிய கிராமத்தினர், தங்களால் முடிந்த பங்களிப்பையும் வழங்கியுள்ளனர். இதனையடுத்து முதற்கட்டமாக 650 மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
இளைஞர்களுடன் கரம் கோர்த்து ஒட்டுமொத்த கிராமமே களமிறங்கியது குறித்து கிராமத்தினர் கூறுகையில்,
இந்த சாலையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் எங்களது கிராம இளைஞர்களும், வெளிநாடு வாழ் இளைஞர்களும் ஒன்றிணைந்து சாலையை சீரமைக்க முடிவெடுத்தனர். அதற்கு உதவும் விதமாக கிராம மக்களும் தங்களால் ஆன பணத்தை கொடுத்து உதவினர். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவர்கள் கூட தங்களால் ஆன 100 ரூபாயை கொடுத்து உதவியுள்ளனர். என தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் முன்னெடுத்த இந்த பணிக்கு ஆதரவாக கிராமத்தில் உள்ள பெண்களும் களமிறங்கியுள்ளனர். தனது சொந்த கிராமத்திற்கு தார்சாலை வேண்டி இளைஞர்களுடன் இணைந்து கிராமத்து பெண்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
எந்த சம்பளமும் பெறாமல், சாலை அமைக்கத் தேவையான வேலையை செய்து வருகின்றனர். 650 மீட்டருக்கு சாலை அமைக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
கொடுப்பதற்கு மனமும், உழைப்பதற்கு திடமும் இருந்து அனைவரும் ஒன்றுபட்டால், முடியாது என்ற காரியம் கிடையாது என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர் புத்தகரம் கிராம மக்கள்.
இதுவரை 650 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 கிலோ மீட்டருக்கு அரசு தார்சாலை அமைத்துக்கொடுக்க வேண்டுமென புத்தகரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் உதவி: ஃபேஸ்புக்