பழுதடைந்த பாலத்தை ஒரே நாளில் சீரமைத்த இடுக்கி இளைஞர்கள்!
'கட்டப்பனா நண்பர்கள்’ என்கிற உள்ளூர் இளைஞர்களின் தொண்டு அமைப்பு ஒன்றிணைந்து தன்னார்வலர்களின் உதவியுடன் பாலத்தை சீரமைத்துள்ளது.
2018ம் ஆண்டு கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது இடுக்கி மாவட்டத்தில் உள்ள சந்திப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்காமல் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து பாலத்தை மீண்டும் கட்டினார்கள்.
2019-ம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக மலமலா கிராமத்தையும் வண்டி பெரியார் நகரையும் இணைக்கும் பாலம் சேதமடைந்தது. சமீபத்திய மழையின் காரணமாக இந்தப் பாலத்தின் நிலை மேலும் மோசமானது.
'கட்டப்பனா நண்பர்கள்’ (Friends of Kattapana) என்கிற உள்ளூர் இளைஞர்களின் தொண்டு அமைப்பு ஒன்றிணைந்து தன்னார்வலர்களின் உதவியுடன் பாலத்தை சீரமைத்துள்ளது.
“மலமலா பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்கள். இந்த பாலத்தை நம்பியே வாழ்க்கை நடத்துகிறார்கள். தேயிலைத் தோட்டம் வழியாக உள்ள சுற்றுப்பாதையிலோ அல்லது நீந்தியோ பெரியவர்கள் செல்லலாம். ஆனால் குழந்தைகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது,” என்று கட்டப்பனா நண்பர்கள் தலைவர் ஜோஷி மணிமாலா `தி பெட்டர் இந்தியா’ இடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “அவசர காலங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தேயிலைத் தோட்டம் வழியாக செல்லக்கூடிய சிறிய சாலைகள் பாதுகாப்பானவை அல்ல. இந்த ஆண்டு பெய்த மழை நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. மற்ற பகுதிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு மலமலா தனித்தீவு போன்று மாறியது. இதுவே நாங்கள் முயற்சியில் இறங்கக் காரணமாக அமைந்தது,” என்றார்.
ஃபாத்திமா பள்ளி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்ட மனு கொடுத்தும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தின் தரப்பில் பாலம் சரிசெய்யப்படும் என்று ஏற்கெனவே உறுதியளிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தாமதிக்க விரும்பாத இக்குழுவினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரே நாளில் பாலத்தை சரி செய்தனர். இவர்களுக்கு கட்டுமானப் பணியில் முன் அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் மலமலா பகுதியினரின் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பது மட்டுமே இவர்களது நோக்கமாக இருந்தது.
தன்னார்வலர்கள் இடிந்த பொருட்கள், பாறைகள், மரக்கட்டைகள் போன்றவற்றை அகற்றி ஒழுங்கமைத்து பாலத்தை சரிசெய்துள்ளனர். பாலத்தில் மண், கற்கள் ஆகியவற்றைக் கொண்டு சமன் படுத்தியுள்ளனர். தற்போது இந்தப் பாலம் வாகனங்கள் ஓட்டிச் செல்லக்கூடிய நிலையில் தயாராக உள்ளது.
“ஆரம்பத்தில் 25 பேர் மட்டுமே இருந்தனர். ஃபேஸ்புக் லைவ் செய்த பிறகு ‘ஆர்த்தடாக்ஸ் கிரிஸ்டியன் யுத் மூவ்மெண்ட்’, ‘கட்டப்பனா ரோட் கிளப்’ போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த பலர் இணைந்துகொண்டனர். அன்று மதியம் கிட்டத்தட்ட 150 பேர் சேர்ந்துவிட்டோம். அனைவருமே தாமாகவே முன் வந்தனர். இறுதியில் சில வாகனங்களையும் இயக்கினோம். கிராம மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர்,” என்று ஜோஷி `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்தார்.
பாலம் சரிசெய்யப்பட்டதும் கிராம மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தது மன நிறைவை ஏற்படுத்தியதாக ஜோஷி கூறுகிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA