15 வயதில் தொழில்முனைவர் - கேக் பேக்கிங்கில் கலக்கும் சென்னைச் சிறுமி!
தொழில்முனைவோர் ஆவதற்கு வயது ஒரு தடையேயில்லை என தனது பேக்கரி தொழில் மூலம் நிரூபித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுமி கேஷிகா மனோகர்.
கொரோனா காலத்தில் வகுப்புகள் எல்லாம் ஆன்லைனில் மாறிப்போக, கிடைத்த நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்தி தொழில்முனைவோர்களாக மாறியவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தான் சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுமி கேஷிகா மனோகர்.
2020ம் ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் உலகமே ஸ்தம்பித்து நின்றது. ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல். அப்போது தங்களது தேவைக்கு பொருட்களை எங்கே எப்படி வாங்குவது எனப் பலர் தேடிக் கொண்டிருக்க, தங்களின் தேவையை எப்படி தொழிலாக மாற்றி, எப்படி மற்றவர்களுக்கு உதவி, தானும் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என யோசித்தவர்கள் பலர், இன்று வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக வலம் வருகின்றனர்.
அப்படி தொழில்முனைவோராகி, இன்று தன் தொழிலில் வெற்றிகரமாகி இருக்கிறார் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியான கேஷிகா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக K's Kitchen என்ற பெயரில் பேக்கரி தொழிலில் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் இவர் தமிழக ஆளுநர் ரவிக்கு பிறந்தநாள் கேக் தயாரித்துக் கொடுக்க, சமூகவலைதளங்களில் மேலும் பிரபலமாகி விட்டார். 15 வயதில் இப்படி ஒரு தெளிவான எதிர்காலச் சிந்தனையா எனக் கேட்பவர்களை ஆச்சர்யமடைய வைக்கும் வகையில் நிறுத்தி, நிதானமாகப் பேசுகிறார் கேஷிகா.
பேக்கர் ஆன மாணவி
கேஷிகாவின் அப்பா ரயில்வே ஊழியர், அம்மா இண்டீரியர் டிசைனராக இருந்து, தற்போது கேஷிகா மற்றும் அவரது அக்காவுக்காகவும் முழு நேர இல்லத்தரசியாக மாறியவர்.
“சிறுவயதில் இருந்தே சமையல் கலையில் எனக்கு ஆர்வம் அதிகம். விலங்குகள் மீது பிரியம் அதிகம் இருந்ததால், கால்நடை மருத்துவராக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு என் பாதையையே மாற்றி விட்டது,” என்கிறார் கேஷிகா.
நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தான் கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. அப்போது என் தோழியின் அம்மா யூடியூப் சேனல் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு ஒரு சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்காக ஆன்லைன் வகுப்புகள் போக மீதி நேரத்தில் கேக் செய்ய ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பமானதுதான் கே’ஸ் கிட்சன், என தான் தொழில்முனைவோராக உருவானக் கதையைக் கூறுகிறார் கேஷிகா.
பெரியவர்களே கேக் செய்யத் தடுமாறும்போது, சிறுமியான கேஷிகாவுக்கு மட்டும் அவ்வளவு சுலபத்தில் அது கைகூடி விடுமா? பல கிலோ மைதா மாவை வீண் செய்துதான், தனக்கென தனி சுவையில் கேக்கை உருவாக்கி இருக்கிறார் கேஷிகா.
மற்ற குழந்தைகள் ஆன்லைன் வகுப்பு போக மீதி நேரத்தில் செல்போனே கதி எனக் கிடக்க, தங்கள் மகள் கிச்சனே கதி என உபயோகமாக பொழுதைக் கழிப்பதைப் பார்த்து, கேஷிகாவின் பெற்றோருக்கு மகிழ்ச்சியே. எனவே, அவரது முயற்சிக்கு உதவும் விதமாக, அந்தாண்டு பிறந்தநாளுக்கு ஓவன் ஒன்றை வாங்கிப் பரிசளித்துள்ளனர்.
"என் பிறந்தநாளுக்கு என் பேரண்ட்ஸ் ஓவன் வாங்கிக் கொடுத்ததும் ரொம்பவே சந்தோசமாகிடுச்சு. யூடியூப் பார்த்து அதுல நிறைய கேக் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்துல நிறைய தவறுகள் நடந்தது. ஆனா, எங்கே தவறு செய்கிறோம்னு பார்த்து, நானே அதை திருத்திக்கிட்டேன். முதல்ல வீட்ல இருக்கறவங்களுக்கு மட்டும்தான் கேக் செஞ்சு கொடுத்தேன். அப்புறம் அக்கம்பக்கத்துல இருக்கறவங்க, தெரிஞ்சவங்க எல்லாம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. என் வாடிக்கையாளர் வட்டத்தை சமூகவலைதளப் பக்கங்கள் மூலமாக மேலும் விரிவாக்கிட்டேன்,” என ஒவ்வொரு வார்த்தையிலும் தெளிவு தொணிக்கப் பேசுகிறார் கேஷிகா.
கொரோனா லாக்டவுன் முடிந்து மீண்டும் பள்ளிகள் வழக்கமாகச் செயல்படத் தொடங்கியதும், பேக்கிங் தொழிலில் கேஷிகாவால் முழுக்கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வீட்டுப்பாடங்களை எல்லாம் முடித்துவிட்டு, இரவில் கண் விழித்து பேக்கிங் செய்துள்ளார். தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் மட்டும்தான், நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற இக்கட்டான நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் படிப்பா, பேக்கிங்கா என்ற சூழல் வந்தபோது, பேக்கிங் தான் தனது தொழில் என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளார் கேஷிகா. எனவே, பேக்கரி தொழிலை நன்கு விரிவு படுத்த வேண்டும் என்பதால், பெற்றோரின் உதவியுடன் தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தில், வீட்டில் இருந்தபடியே படிக்கும் முறைக்கு மாறியுள்ளார். தற்போது படிப்பும், பேக்கிங்கும் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் கேஷிகா, தமிழக கவர்னருக்கு கேக் செய்து கொடுத்ததன் மூலம் மேலும் பிரபலமாகி விட்டார்.
நிகழ்ச்சி ஒன்றின் மூலம்தான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் அறிமுகம் கிடைத்தது. அதன்மூலம் அவரது பிறந்தநாளுக்கு கேக் செய்து கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அவருக்கு கேக் செய்து முடிப்பதற்குள் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது.
கேக் பிரிட்ஜில் இருக்கும் போது, எங்கள் வீட்டில் கரண்ட் பிராப்ளம் ஆகி விட்டது. உடனே பக்கத்து வீட்டுக்குச் சென்று மீதி கேக்கை வெற்றிகரமாக முடித்தேன். விழாவுக்கு கிளம்ப 15 நிமிடங்கலே இருந்த நிலையில், கேக்கின் ஃப்ராஸ்டிங் எல்லாம் கரைந்து போக ஆரம்பித்ததும், எனக்கு முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு ஒரு வழியாக எல்லாவற்றையும் சரி செய்தேன். அந்த கேக் தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
“என் கேக்கை சாப்பிட்டு விட்டு கவர்னர் பாராட்டியது மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கேஷிகா.
கேக் செய்து கொடுப்பதோடு, பேக்கிங் வகுப்புகளையும் எடுத்து வருகிறார் கேஷிகா. ஆரம்பத்தில் தனது வீட்டு கிச்சனையே தனது பேக்கிங்கிற்கு பயன்படுத்தியவர், தற்போது வகுப்புகள் எடுக்க மற்றும் பேக் செய்வதற்கு என தனியாக வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார்.
“வெட்டிங் கேக்ஸ், பர்த்டே கேக்ஸ், தீம் கேக் என எல்லா வகையான கேக்குகளையும் நான் செய்வேன். ஒரு கேக் 16,000 ரூபாய் மதிப்பில் கூட நான் செய்திருக்கிறேன். கேக் மட்டுமின்றி இத்தாலியன், சைனீஸ் என்று எல்லா வகையாக உணவுகளையும் நன்கு சமைப்பேன். இதுதவிர ஊறுகாய், ஜாம், பன்ஸ், பிரெட்ஸ் என அனைத்தும் செய்வேன்,” என்று அடுக்குகிறார்.
சிறிய முதலீட்டில் வீட்டிலேயே பேக்கிங் தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும். நானும் சரி, எனது அக்காவும் சரி எங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்யும் சுதந்திரத்தை எங்கள் பெற்றோர் எங்களுக்கு கொடுத்துள்ளனர். முதலில் அவர்களுக்குத்தான் நன்றிகூற வேண்டும். அதனால்தான் என்னால் பேக்கிங்கில் சிறப்பாகச் செயல்பட முடிகிறது, என்கிறார் கேஷிகா.
பேக்கரி தொழில்முனைவோராக மட்டுமல்லாமல், விலங்கு நல ஆர்வலர், பேக்கரி தொழில் பயிற்சியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்குகிறார் கேஷிகா.
பொதுவாகவே பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கு. அப்படித்தான் ஒருமுறை ஹெவன் பார் அனிமல்ஸ் என்ற என் ஜி ஓ நடத்திய நாய்க்குட்டிகளை தத்து கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, அதுவரை ஒரு நாய்க்குட்டி கூட தத்து போகாத நிலையில், என் பேச்சு சாமர்த்தியத்தால் அடுத்தடுத்து மளமளவென 10 நாய்க்குட்டிகள் தத்து போயின. இதனால் அந்த அமைப்பே கேஷிகாவை தங்களது என் ஜி ஓவில் சேர்த்துக் கொண்டது.
“சின்ன வயதில் இருந்தே நாய்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே இந்த அமைப்பில் என்னால் மகிழ்ச்சியாக செயல்பட முடிகிறது. எங்களது இந்த அமைப்பு மூலமும் தினமும் சுமார் 4 ஆயிரம் நாய்களுக்கு மேல் உணவு அளித்து வருகிறோம்.
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக தெரு நாய்களுக்கென கிளவுட் கிச்சன் ஒன்றையும் நடத்தி வருகிறோம். சுமார் 2100 நாய்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கியுள்ளதாக கூறுகிறார்.
படிப்பு, தொழில், சமூகசேவை என ஒரே நேரத்தில் பன்முகத் திறமையாளராக விளங்கி வரும் கேஷிகா, நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களைத் தொடுவார் என்பதில் சந்தேகமேயில்லை. விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது.