இணையத்தை கலக்கும் ’அறிவாளி பை’ மீம்கள்...
நீங்கள் கல்லூரி மாணவரா? அப்படி என்றால் நீங்கள் ’அறிவாளி பை’ வைத்திருக்கிறீர்களா? இப்படித் தான் இணையம் கடந்த சில நாட்களாக எல்லாரையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது கலாய்த்துக் கொண்டிருக்கிறது.
'அறிவாளி பை’ என்ற பதத்தை பார்த்ததும் உங்களால் புன்னகைக்க முடிந்தது என்றால், இந்த பை தொடர்பாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் சமீபத்திய மீம்களை நீங்களும் பார்த்து ரசித்திருக்கிறீர்கள் என்று பொருள். இல்லை என்றாலும் பரவாயில்லை, இணையத்தின் சமீபத்திய பரபரப்பான அறிவாளி பை போக்கை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
அதற்கு முன்னர், டிவிட்டரிலோ, இன்ஸ்டாகிராமிலோ #maturebag எனும் ஹாஷ்டேகை ஒரு முறை தேடிப்பாருங்கள். இந்த ஹாஷ்டேக் தொடர்பாக வந்து நிற்கும் விதவிதமான பதிவுகள் எல்லாவற்றிலும், அழகிய லெதர் பை ஒன்று தவறாமல் இடம்பெற்றிருப்பதை பார்க்கலாம். அது தான் மெச்சூர் பேக். அதாவது ’அறிவாளி பை’.
இந்த பையை வைத்திருந்தால் தான், கல்லூரி மாணவர்கள் அழகானவர்களாக, ஸ்டைலானவர்களாக முக்கியமாக முதிர்ச்சி அடைந்தவர்களாக தோன்ற முடியும் என கருதப்படுகிறது.
அதெப்படி, ஒரு தோள் பையை மாட்டிக்கொண்டால், முதிர்ச்சியான கல்லூரி மாணவர் என்று சொல்ல முடியும்? என நீங்கள் கேட்கலாம்.
இதில் தான் விஷயமே இருக்கிறது. கல்லூரி மாணவர்களை ஒரு தோள் பை அறிவாளியாக்கிவிடும் எனும் கருத்தே இங்கு கேலிக்கு உள்ளாகி, அதன் காரணமாக நூற்றுக்கணக்கான மீம்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு வீடியோ தான் இந்த மீம் அலையின் துவக்கப் புள்ளியாக அமைந்தது. பதின் பருவத்து வாலிபர் ஒருவர் உருவாக்கி பதிவேற்றிய வீடியோ சில நாட்களுக்கு முன்னர் டிக்டாக் செயலியில் வெளியானது.
அந்த வீடியோவில் தோன்றிய, பதின் பருவ நபர் ஒருவர், தன்னை பேஷன் வல்லனர் என வர்ணித்துக் கொண்டு, கல்லூரி மாணவர்கள் எப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
கல்லூரி மாணவர்களை பொருத்தவரை அவர்கள் கொண்டு செல்லும் பை முக்கியமானது, பள்ளிக்கு எடுத்துச்சென்ற பையை கல்லூரிக்கும் கொண்டு செல்லக்கூடாது, கல்லூரிக்கு என்று பொருத்தமாக அறிவாளி பையை (மெச்சூர் பேக்) கொண்டு செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறியவர், அமேசானில் வாங்கக் கூடிய தோள் பை ஒன்றையும் உதாரணமாக காட்டியிருந்தார்.
இந்த பை, நேர்த்தியான, ஸ்டைலான மற்றும் வளர்ந்த தோற்றத்தை அளிக்கும் என்றும் அவர் வீடியோவில் கூறியிருந்தார். மிகுந்த நம்பிக்கையோடு, அந்த பையன் வீடியோவில் தனது கருத்தை விவரிப்பதை பார்த்தால், விழுந்து விழுந்து சிரிக்கத் தோன்றும்.
ஆனால், இணையவாசிகள் சிரிப்பதோடு நின்றுவிடவில்லை. மீம்களில் கொண்டாட இன்னொரு விஷயம் கிடைத்துவிட்டது என காரியத்தில் இறங்கிவிட்டனர். விளைவு, டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் #maturebag ஹாஷ்டேகுடன் வரிசையாக குறும்பதிவுகள் வெளியாகத் துவங்கின.
அந்த பதின் பருவத்து பையனின் அறிவாளி பை ஆலோசனையை அப்படியே உண்மை என நம்பி விட்டது போலவே பலரும் குறும்பதிவு வெளியிட்டனர். உதாரணத்திற்கு, ஒருவர் . இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி இந்த தோள் பையை வைத்திருப்பது போல புகைப்படம் வெளியிட்டு, அதனுடன், இது தான் கோஹ்லியின் வெற்றி ரகசியம் என குறிப்பிட்டிருந்தார்.
இன்னொருவர் நடிகர் ரன்பீர் கபூர், தோள் பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு, அவரது வெற்றிக்கு மெச்சூர் பேக் தான் காரணம் என கூறியிருந்தார்.
இப்படியே பல பிரபலங்களை தோள் பையுடன் வெளியிட்டு, பலரும் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டனர். ஒரு சிலர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்த போது வழக்கமான சூட்கேசை எடுத்து வராமல் இருந்ததையும் தோள் பையையும் இணைத்து மீம் உருவாக்கி பகிர்ந்து கொண்டனர்.
இந்த குறும்பதிவுகளையும், தோள் பை மீம்களையும் பார்த்தவர்கள், இதென்ன மெச்சூர் பேக் என்று வியந்து போய், இதன் பின்னே உள்ள கதையை தெரிந்து கொண்ட போது, இன்னும் குஷியாகி தங்கள் பங்கிற்கு ஒரு மீமை உருவாக்கி பகிர்ந்து கொண்டனர். இதன் பயனாக டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகி வைரலாக பரவியது.
உண்மையிலேயே தோள் பை வைத்திருந்த வாலிபர் ஒருவர், ஆறு மாதமாக இந்த பையை வைத்திருக்கிறேன். ஒரு பிரச்சனையும் இல்லை, இப்போது இப்படியாகி விட்டதே என்று மெச்சூர் பேக் மீம்களால் தனது நிலையை நொந்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம், மும்பை காவல்துறை, இந்த வைரல் நிகழ்வை சரியாக பயன்படுத்திக் கொண்டு தன் பங்கிற்கு சபாஷ் வாங்கியது. பை எப்படி இருக்கிறது என்பது முக்கியம் அல்ல, அது கேட்பாரற்று கிடந்தால் உடனே காவல்துறையிடம் தெரிவிக்கவும், என மும்பை காவல்துறை விழிப்புணர்வு நோக்கில் இந்த மீமை பயன்படுத்திக்கொண்டது. இந்த குறும்பதிவு ஆயிரக்கணக்கானோரால் லைக் செய்யப்பட்டு பிரபலமாது.
மேற்கு ரயில்வேயும், தோள் பை படத்தை வெளியிட்டு, அன்பான பயணிகளே உங்கள் உடமைகளில் கவனமாக இருங்கள் என விழிப்புணர்வு செய்தி வெளியிட்டது.
இப்படி தோள் பை (அறிவாளி பை) மீம் இணையத்தில் கலக்கி கொண்டிருக்க, இது உருவாகக் காரணமாக இருந்த பதின் பருவத்து பையனான வைபவ் வோரா, அசராமல், இந்த விவகாரம் எப்படி வைரலானது என விளக்கம் அளிக்கும் யூடியூப் வீடியோவை உருவாக்கிப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது பற்றி பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.