'பார்வைக் குறைபாடு இருந்தால் என்ன? யூடியூப் சேனல் மூலம் வருவாய் ஈட்டும் நாகலட்சுமி!
வருவாயில் பெரும் பகுதியை நன்கொடையாக கொடுத்து அசத்தல்!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்வைக் குறைபாடுள்ள பெண் நாகலட்சுமி. 30 வயதாகும் இவருக்கு இடது கண்ணில் முழுமையான கண்பார்வை இழந்ததால் பார்வைக் குறைபாடு உள்ளது. அவளுக்கு இப்போது 5 சதவிகிதம் மட்டுமே தெரியும். ஆயினும்கூட, இந்த குறைபாடு அவரின் வாழ்க்கையைத் தடுக்கவில்லை. தனது 10 வயதிலிருந்தே வித்தியாசமான வேலைகளை செய்து தனது குடும்பத்தை ஆதரித்து வருகிறார் நாகலட்சுமி.
அதேநேரம், அரசின் ஓய்வதியத் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்றுவாழ்ந்து வந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்பு அவரின் வாழ்க்கை முற்றிலும் மாறத் தொடங்கியது. அரசின் ஓய்வதியத் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்றுவாழ்ந்து வந்தவர், தற்போது அரசின் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கும் அளவுக்கு வளர்த்துள்ளார். இந்த உதவியை சாத்தியப்படுத்தியது அவரின் யூடியூப் சேனல்.
நெல்லூர் மாவட்டம் வரிகுண்டபடு மண்டலத்தைச் சேர்ந்த நாகலட்சுமி, தனது குடும்பத்தின் இளைய மகள். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த லட்சுமி அவரின் சகோதரர் மூலமாக யூடியூப் உலகிற்கு உள்ளே வரும் வரையில் உடன்பிறந்தவர்களோடு சேர்ந்து வறுமையின் பிடியில் வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ஆரம்பத்தில் லட்சுமியின் இளைய சகோதரர் ஆதி ரெட்டி ‘மூவி கிரிக் நியூஸ்’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கும்வரை தான். இந்த சேனலுக்கு பின் அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் சகோதரர் யூடியூப் சேனலைத் தொடங்க ஆதிக்கு ரூ.50,000 கொடுத்தார் நாகலட்சுமி.
பின்னர், நாகலட்சுமியே தனது சகோதரர் ஆதரவுடன் செப்டம்பர் 2020 இல் ‘கவிதா நாகா விலாக்’ (Kavitha Naga Vlogs) என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனலைத் தொடங்கினார். அதில், தனது அண்ணி கவிதாவுடன் சேர்ந்து சமையல் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார் நாகலட்சுமி. இவர்கள் பதிவிட்ட முதல் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த வீடியோக்கள் பதிவிட தொடங்கினர். இது ரசிகர்களை பெரிதும் கவரத் தொடங்கியது.
இப்படிப் படிப்படியாக தொடங்கிய, இவர்களின் சேனலுக்கு தற்போது 1.5 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர் மற்றும் பார்வையாளர்களில் 50 சதவிகிதம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 30 முதல் 45 சதவீதம் பேர் நடுத்தர வயதுடையவர்கள், மற்றும் 10 சதவிகிதம் இளைஞர்கள். ஆதி ரெட்டியின் மனைவி கவிதா, நாகலட்சுமியுடன் வீடியோக்களைத் தயாரிப்பதில் பெரும் ஆதரவாக இருந்தார். இருவரும் இணைந்து 89 வீடியோக்களை உருவாக்கி இருக்கின்றனர்.
நாக லட்சுமிக்கும் அவரது அண்ணி கவிதாவுக்கும் இடையிலான பிணைப்பு பார்வையாளர்களை அவர்களின் சேனலுக்கு அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. பார்வையாளர்கள் அதிகமாக நிறைய சம்பாதிக்கவும் செய்கின்றனர் இவர்கள். இதில் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கி வருகிறார் நாகலட்சுமி. குறிப்பாக நடிகர் சோனு சூட்டின் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை அளித்ததன் மூலம் இந்தியா முழுவதும் இருந்து லட்சுமி பாராட்டுகளைப் பெற்றார்.
”சில மாற்றுத் திறனாளிகள் தங்கள் இயலாமையுடன் வாழ முடியாமல் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதை நான் கேள்விப்பட்டேன். எங்களைப் போன்றவர்கள் சாதாரண மக்களை விட வலிமையானவர்கள், வாழ்க்கையில் எதையும் செய்ய முடியும். என்னால் பார்க்க முடியவில்லை என்றால் என்ன. மற்றவர்களால் முடியுமே. இதனைக் கொண்டு எனது சிறப்புகளைச் சமைக்க நான் அவர்களுக்குக் கற்பிக்க முடியும்," என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார் நாகலட்சுமி.
யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதி மற்றும் சூட் தொண்டு நிறுவனத்திற்கு தலா ரூ.25,000 நன்கொடையாக வழங்கி இருக்கிறார். மேலும், தனது கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு ரூ.60,000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்கியது, கோவூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ரூ. 25,000 நன்கொடை அளித்தது என பல்வேறு உதவிகளைச் செய்ய தொடங்கி இருக்கிறார்.
தொகுப்பு: மலையரசு