ஃபாரீனில் படிக்க விருப்பமா? உங்களின் ஏ டூ இசட் சந்தேகங்களை பூர்த்தி செய்து பயிற்சி அளிக்கு நிறுவனம்!
போலந்தில் முதுகலை பட்டம் முடித்து திரும்பிய தஞ்சாவூரைச் சேர்ந்த சுதன் கிள்ளிவளவன், தான் வெளிநாடு சென்று படிக்க முற்பட்டபோது சந்தித்த சிக்கல்களை மனதில் கொண்டு, ஊர்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் மற்றும் மொழி பயிற்சி வழங்கும் நிறுவனத்தை தன் நண்பருடன் தொடங்கியுள்ளார்.
வெளிநாட்டு கல்வி என்பது கடந்த தலைமுறையினரது பெருங்கனவு. வசதி படைத்தவர்கள் மட்டுமே அக்கனா காண தகுதியானவர்கள் என்பதெல்லாம் அந்த காலம். இன்று, சரியான வழிகாட்டுதலுடன் திட்டமிட்டு செயல்பட்டால் மிடில் கிளாஸ் பேமிலியின் பட்ஜெட்டுக்குள்ளும் படித்து முடித்துவிடலாம். இருப்பினும் சிறிய ஊர்கள், கிராமங்களில் வசிப்போருக்கு வெளிநாட்டுகல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலே, பலரும் முயற்சி எடுப்பதற்கு முன்பே கனவை கலைத்து கொள்கின்றனர். கனவை கலைப்பவர்களது தயக்கங்களை கலைத்து, என்ன படிக்கலாம்/ எங்கு படிக்கலாம்? தொடங்கி, வெளிநாட்டு பல்கலைகழகத்தில் அட்மிஷன் கிடைத்து கல்லூரிக்கு செல்லும் வரை கைபிடித்து வழிகாட்டுகிறது ’அல்ஜீப்ரா எஜூகேஷன் கன்சல்டன்சி’.
’Algebra Education Consultancy' ’அல்ஜீப்ரா எஜூகேஷன் கன்சல்டன்சி’ன் நிறுவனர் சுதன் கிள்ளிவளவன் முதுகலை பட்டப்படிப்பு படிக்க முயற்சித்த போது அத்தனை சிரமங்களை சந்தித்தார். தஞ்சாவூரை பூர்விகமாகக் கொண்ட சுதன், இளங்கலை பட்டப்படிப்பு முடிக்கும் முன்னே, முதுகலை பட்டத்தை பாரீனில் தான் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். இருப்பினும், அவர் விரும்பிய முக்கியத்துவங்களை வழங்கக்கூடிய பல்கலைகழகத்தை அடையாளம் காண அவருக்கு உதவக்கூடிய ஒரு வழிகாட்டி கன்சல்டன்சியை அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
சரியாக ஒன்றரை ஆண்டுகள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் உள்ள 60 -70க்கும் உட்பட்ட கன்சல்டன்சியை அணுகியுள்ளார் சுதன். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, விரும்பும் பட்டப்படிப்பை படிக்க பெஸ்ட்டான பல்கலைகழகம் எது? படிப்பு செலவு எவ்வளவு? அங்குள்ள வாழ்வாதாரச் செலவுகள் என்ன என்ற அனைத்திற்குமான பதில்களை ஒரே இடத்தில் கண்டறியவது கடினம் என்பதை உணர்ந்தார். தவிர, இச்சிரமங்கள் தனக்கு மட்டும் நேரவில்லை, தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு படிக்க சென்ற பலரது அனுபவங்களுமே இப்படியாகவே இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டார்.
அதிகப்பட்ச தேடலுக்கு பின், ஐரோப்பாவின் போலந்து நாட்டிலுள்ள வார்சா பல்கலைகழகத்தில் முதுகலைப்பட்டம் படித்துமுடித்தார். படிக்கும் காலத்திலே அவருடைய பல்கலைகழகத்திலே சேர விரும்பிய கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, அட்மிஷன் தொடங்கி விசா நடைமுறை வரை அனைத்திற்கும் உதவி செய்து பல்கலைகழகத்தில் சேர உதவிசெய்துள்ளார்.
இதன் விளைவாக, வெளிநாடுகளில் படிப்பது குறித்து அவருக்கு தெரிந்த தகவல்களைக் கொண்டு, அவருக்கு நேர்ந்த சிரமங்கள் நம்மூர் மாணவர்களுக்கு ஏற்படாமலிருக்க, ’அல்ஜீப்ரா எஜூகேஷன் கன்சல்டன்சி’ தொடங்கினார். அச்சமயம், அவர் போலந்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
தஞ்சை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பயிலும் மாணவர்கள் அளித்த கிரேட் ரெஸ்பான்சில், வெளிநாட்டு வேலையை துறந்து மாணவர்களது வழிகாட்டியாகி மாறியுள்ளார்.
“ஓவர்சீஸ் கன்சல்டன்சி என்றாலே இப்பவும் மக்களிடம் அவர்கள் சரியானவர்கள் தானா? யாரிடம் பணம் செலுத்துகிறோம்? எதற்காக பணம் செலுத்துகிறோம்? என்ற குழப்பம் இருக்கும். நம்பகத்தன்மை இருக்காது. நான் சென்ற கன்சல்டன்சிகளே, உண்மையே இல்லாத ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தாங்க,” என்கிறார் சுதன்.
என் கூட படிக்க வந்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் அணுகிய கன்சல்டன்சியில், வெளிநாட்டில் அரசுவேலை வாங்க முடியும்னு சொல்லியிருக்காங்க. நிறைய கன்சல்டன்சிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. சரி, நாம இதை ஒரு சர்வீஸ் கம் பிசினசா பண்ணலாம்னு தான் ஆரம்பித்தேன்.
”தஞ்சாவூரில் எதற்காக தொடங்கினேன் என்றால், தென்தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு படிக்கச் செல்பவர்கள் அதிகம். ஆனால், போதுமான வழிகாட்டும் கன்சல்டன்சிகளே இல்லை. சோ, ஹோம்டவுனிலே தொடங்கலாம் என்று தீர்மானித்தேன். நினைத்ததுபோலவே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது,” என்கிறார்.
2017ம் ஆண்டு தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், வெளிநாட்டு பல்கலைகழகங்கள் அளிக்கும் சலுகைகளை முன்வைத்தும், கட்டண விஷயங்களில் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளிடம் தொடர்பில் இருந்து மாணவர்களை வழிநடத்தி வரும் சுதன், சமீபத்தில் சென்னையிலும் முத்துராமலிங்கம் என்பவருடன் இணைந்து மற்றொரு கிளையை தொடங்கியுள்ளார். தஞ்சை மற்றும் சென்னையில் இரு கிளைகளுடன், போலந்தில் ஒரு ஆப்ரேட்டிங் ஆபிஸ் என மூன்று அலுவலகங்களில் 15பேர் பணிபுரிகின்றனர்.
தவிர, இவர்களது வழிகாட்டுதலில் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே, பகுதிநேர பணியாளர்களாக மாறி வருங்கால மாணவர்களுக்கு அந்நாட்டில் தேவையான சேவைகளை வழங்குகின்றனர்.
“தினமும் 100பேர் போன் செய்து விசாரிக்கிறாங்கனா, அதில் 10சதவீதம் தான் பிசினசாக மாறும். நாங்கள் அதற்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. இந்த பல்கலைகழகத்தில் சேருவதற்கு இது தான் டெட்லைன் என்று கூறி அதை பிசினாக மாற்றவேண்டும் என்ற முனைப்பில் மாணவர்களை நெருக்கடிக்கு உட்படுத்தும் மற்ற கன்சல்டன்சி போன்று நாங்கள் செயல்பட விரும்பவில்லை.”
எங்களிடம் மாணவர் ஆலோசகர் இருக்கிறார்கள். அவர்கள் முதலில் மாணவர்களின் திறனை ஆராய்ந்து, எந்தத் துறையில் அவர்களுக்கு ஆர்வமிருக்கிறது? ஆர்வத்துக்கு ஏற்றாற் போல் துறை சார்ந்த ஆற்றல் இருக்கிறதா என்பதை ஆராய்வர். ஏனெனில், சில மாணவர்களுக்கு தாங்கள் என்ன படிக்கப் போகிறோம் என்ற தெளிவில் இருப்பார்கள். அதனால், மாணவர்களின் திறன் பகுப்பாய்ந்து மாணவ ஆலோசகர்கள் குழு ஒரு ரிப்போர்ட் தயார் செய்யும்.
அதற்கு அடுத்து, அவர்கள் படிக்கவிரும்பும் படிப்பிற்கு சிறந்த நாடு எது? சிறந்த பல்கலைகழகம் எது? சர்வதேச அளவில் அந்தக் கல்வி நிறுவனத்தின் ரேங்க், அவர்கள் விரும்பும் படிப்புகளுக்கு உள்ள சர்வதேச மதிப்பு என்ன, அங்கீகாரம், வெளிநாட்டு மாணவர்களுக்கு அக்கல்லூரி அளிக்கும் ஸ்காலர்ஷிப், கட்டணங்கள் போன்ற அனைத்தையும் சேகரித்து ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி மாணவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம்.
”இந்த நாட்டிலுள்ள இந்த பல்கலைகழகம் என்று முடிவாகிவிட்டால், அதற்குரிய தகுதித் தேர்வு மற்றும் அந்த நாட்டின் மொழியை கற்றுகொள்வதற்கு பயிற்சிகளை வழங்குகிறோம். அங்கு தொடங்கி விசா நடைமுறை, வெளிநாட்டில் இறங்கியவுடன் அவர்களை பிக் அப் செய்து, அங்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் வரை முழுமையாய் ஒரு மாணவன் அப்பல்கலைகழகத்தில் பயிலத் தொடங்கும் வரை உடனிருப்போம்,” என்று அவர்களது மொத்த செயல்பாடு குறித்து தெளிவாய் விளக்கினார் சுதன்.
இத்துறையின் வெளிப்படையற்ற தன்மை காரணமாக அவர் சந்தித்த சவால்கள் குறித்து பகிரத்தொடங்கினார். படித்த மாணவர்களிடையே வெளிநாட்டுக் கல்வி குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாமலிருக்கையில், அநேக பெற்றோர்கள் டிராவல் ஏஜென்சி என்று தவறுதலாக புரிந்து கொள்வதாகவும், இன்றும் அப்பிரச்னை நீடிப்பதாக கூறினார் அவர்.
“அடுத்த 4 ஆண்டுகள் வரை ஒரு நாட்டில் தங்கி பயிலப் போகிறவர்கள், கண்டிப்பாக 5 முதல் 10 கன்சல்டன்சிக்கு போகாமல் இருக்கமாட்டார்கள். அதிலும், மாணவிகள் என்றால் அவர்களது பெற்றோர்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அதிகம் தயங்குவர். அவர்களை நாங்க ஏற்கனவே வெளிநாடுகளுக்கு படிக்கச் சென்றுள்ள மாணவர்களுடன் ஸ்கைப் காலில் பேசச் சொல்லுவோம். நமது நாட்டிலிருந்து சென்றிருக்கும் மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டறிவதன் மூலம் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும்,” என்கிறார்.
அல்ஜீப்ரா அதன் போட்டியாளர்களிடமிருந்து எப்படி வேறுப்பட்டது?
“2015ம் ஆண்டு வரை வெளிநாட்டில் படிப்பு என்றாலே, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா என ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு தான் போவாங்க. அதையும் தாண்டி, ஜெர்மனி, பிரான்ஸ். ஆனா, நிறைய யூரோப்பியன் நாடுகளில் சிறந்த கல்வியை வழங்குகின்றனர்.
ஜெர்மனி, இத்தாலியில் ‘0 டியூசன் ஃபீஸ்’ என்ற கான்செப்ட் இருக்கு. சோ, அங்குள்ள பல்கலைகழகங்களுடன் டை-யப் பண்ணியுள்ளோம். நம்மூரில் எப்படி தமிழில் படித்தால் ஃபீஸ் குறைவோ, அதுபோன்று அந்த நாடுகளில் அவர்களது மொழியில் படிக்கும்போது ஃபீஸ் ரொம்ப குறைவு. சோ,
நாங்க ஜெர்மன், ரஷ்யன், பிரெஞ்ச், ஸ்பானீஷ், கொரியன் என 13 அயல்நாட்டு மொழிகள் எங்களது சென்டரிலே கற்றுக்கொடுக்கிறோம். 85% மார்க், அந்த நாட்டு மொழி தெரிந்திருந்தாலே வந்துபோகும் செலவு தவிர்த்து எந்த டியூசன் ஃபீசும் இல்லாமல் மாணவர்கள் படிக்கமுடியும். அதனால், நாங்க அயல்நாட்டு மொழிகளை கற்றுக் கொடுத்து, அந்நாட்டு அரசு அளிக்கும் வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள உதவுகிறோம்.”
இருப்பினும் சீசன் பிசினஸ் என்பதால், துறையில் நீடித்து நிலைப்பது அத்தனை சுலபமில்லை என்கிறார் சுதன். “ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நம்மூரில் மே- ஜூன் மாதங்கள் என்றால், வெளிநாடுகளில் பிப்ரவரி, மற்றும் செப்டம்பர் என இரு பருவத்தில் மாணவ சேர்க்கை நடைபெறும். அதுவும் 6 மாதங்களுக்கு முன்பே அட்மிஷன் தொடங்கிவிடும்.
தொழில் ரீதியாக பார்த்தால், ஆண்டுக்கு இருமுறை மட்டும் தான் பிசினஸ் நடக்கும். அதனால், நிலைத்து நிற்பது பெரிய சவால். இப்போதும், சொந்த பணத்தை முதலீடாக்கிக் கொண்டு தான் இருக்கிறேன். இதுவரை 58 மாணவர்களை பல்வேறு நாடுகளுக்கு படிக்க அனுப்பியுள்ளோம். வரவிருக்கும் செப்டம்பர் கல்வி பருவத்திற்கு 21 மாணவர்கள் செல்ல உள்ளனர்,” என்றார்.
பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வெளிநாட்டு கல்வியுடன் நம்நாட்டு கல்வியை ஒப்பிட்டு இலவச செமினார்கள் வழங்கி மார்க்கெட்டிங் செய்யும் அவர்கள் எதிர்காலத்தை எதிர்பார்த்து இரு திட்டங்களுடன் ஆயத்தமாக உள்ளனர்.
இரு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்:
- ஒன்று மொழி பயிற்சி. 13 அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கிறோம். தேர்ந்தெடுத்த சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதனால், வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை தவிர்த்து, மொழி பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்.
- மற்றொன்று வசதிபடைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வெளிநாட்டில் உள்ள முன்னணி பல்கலைகழகங்கள் மற்றும் அவர்களது கல்விமுறைகளை அப்பல்கலைகழக பேராசிரியர்களே விளக்கும் வகையில் அமையும் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம், என்றார்.