அப்போ வாட்ச்மேன்; இப்போ ஐபிஎல் வீரர்: கிரிக்கெட் விளையாடி லட்சாதிபதி ஆன மன்சூர் தார்!
பாதியில் படிப்பை விட்டு, இரவு நேரத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து கஷ்டப்பட்ட மன்சூர் தார், ஐபிஎல் மூலம் லட்சாதிபதி ஆகியுள்ளார்.
காஷ்மீரின் வட பகுதியில் உள்ள பந்திப்பூர் மாவட்டம் சோனாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்சூர் தார். இவரின் தந்தை கூலித் தொழிலாளி. மன்சூருடன் உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். குடும்ப வறுமை காரணமாக பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திய மன்சூர், வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.
ஆனாலும் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. எனவே, கிரிக்கெட் பயிற்சி எடுத்தபடியே வேலை பார்ப்பது என அவர் முடிவெடுத்தார். அதற்கு இரவு நேர காவலர் பணி தான் சரியாக இருக்கும் என மன்சூர் நினைத்தார்.
“2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை தனியார் நிறுவனங்களில் இரவு நேரத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்துக் கொண்டு, பகல் நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்த ஒரு வழி மட்டுமே அப்போது எனக்கு இருந்தது. எப்படியும், கிளப் கிரிக்கெட்டில் எனது பெயர் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். முதல் முறையாக உள்ளூர் அணிக்காக விளையாடிய போது, காலில் அணிய என்னிடம் நல்ல ஷூகூட கிடையாது,” என்கிறார் மன்சூர்.
கிரிக்கெட் அவரது வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. 2011ம் ஆண்டு முதன் முறையாக மாநில அணிக்கான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், 2017ம் ஆண்டு தான் அந்த அணியில் அவரால் அறிமுகம் ஆக முடிந்தது. இதுவரை ஒன்பது டி20 மற்றும் நான்கு லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மாநில அணியில் இடம் பெற்று இவர், அடித்த 100 மீட்டர் சிக்சர்தான் மன்சூரை ஐபிஎல் அணியில் இடம் பெறச் செய்தது. இவர் 9 போட்டிகளில் விளையாடி 185 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 14 பவுண்டரி, 13 சிக்சர் அடங்கும்.
கடந்தாண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் தேர்வானார். ரூ. 20 லட்சம் கொடுத்து அவரை அந்த அணி வாங்கியது. பல வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதே தனக்கு மிகப்பெரிய சந்தோசம் தான் என்கிறார் மன்சூர். இந்தத் தொகை மூலம் பாதி கட்டுமானத்தில் நிறுத்தப்பட்ட தனது வீட்டு வேலையை மீண்டும் தொடங்கவும், தனது தாயின் மருத்துவச் செலவிற்கும் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார் அவர்.
நல்ல ஷூ வாங்கக் கூட காசில்லாத நிலையில் இருந்து, இன்று ஐபிஎல் மூலம் லட்சாதிபதி ஆகியுள்ளார் மன்சூர். இவர் ஐபிஎல்-க்கு தேர்வான செய்தியைக் கேட்டு, அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, அப்பகுதி மக்கள் அனைவருமே மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 30 ஆயிரம் பேர் மன்சூரைத் தேடி அவரது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்துச் சென்றுள்ளனர்.
“இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இறைவனுக்கு உண்மையிலேயே நன்றி தெரிவிக்கிறேன். மேலும் கிங்ஸ் லெவன் அணிக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் நன்றி. இறுதியாக நான் ஒரு அணியில் ஏலம் எடுக்கப்படும் வரைக்கும், என்னுடைய வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. வீட்டின் வறுமைச் சூழலால் தினக் கூலியாக 60 ரூபாய்க்கு வேலைக் சென்றதை நினைத்துப் பார்க்கிறேன்,” என ஐபிஎல்க்கு தேர்வான சமயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மன்சூர் தெரிவித்துள்ளார்.
கபில்தேவ் மற்றும் தோனியை போன்று விளையாட வேண்டும் என்பது தான் மன்சூரின் ஆசை. ஆனால் பாவம் கடந்த முறை ஐபிஎல் போட்டியில், அவருக்கு கடைசி வரை விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. இருந்தபோதும், கஷ்டப்பட்டு கடின உழைப்பின் மூலம் கிரிக்கெட் விளையாட்டிற்குள் நுழைந்த வீரர்கள் பட்டியலில் மன்சூரும் இடம் பிடித்து விட்டார். ஐபிஎல் மூலம் அவரது வாழ்க்கையே தற்போது மாறியுள்ளது.