அஞ்சலி | நம்பிக்கையை விதைத்து மறைந்த ‘What a Karwad’ இணை நிறுவனர் ஸ்டாலின் ஜேக்கப்!
‘வாட் எ கருவாடு’ இணை நிறுவனர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம், சோஷியல் மீடியா களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையக் களத்தின் செயல்பாடுகளாலும், தனது தனித் திறமைகளாலும் இளம் தலைமுறைக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த ‘வாட் எ கருவாடு’ இணை நிறுவனர் ஸ்டாலின் ஜேக்கப், செங்கல்பட்டு - மறைமலைநகர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஸ்டாலின் ஜேக்கப் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கார் மோதி விபத்து ஏற்பட்டதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்டாலினுடன் பயணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார்.
ஜேக்கப் ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, வியாழக்கிழமைதான் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில், மறுநாளே விபத்தில் சிக்கி காலமானது பெருந்துயர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘வாட் எ கருவாடு’
மண்சட்டியில் மாங்காய் போட்ட மீன் குழம்பு, பச்சப்புளி ரசம், கருவாட்டுத் தொக்கு, பொறித்த மீன், சாதம் என நால்வர் உண்டு மகிழும் வகையிலான 'வாட் எ கருவாட்’-ன் காம்போ பேக்கேஜ் சென்னையில் மிகவும் பிரபலம். கிளவுட் கிச்சனில் இயங்கினாலும் வாட் எ கருவாடை சக்ஸஸ்புல்லான பிராண்ட் ஆக மாற்றிய பெருமை, இணை நிறுவனரான மனோஜ் சூர்யா உடன் ஜேக்கப் ஸ்டாலினையும் சேரும்.
மனோஜ் ரூ.2,00,000 பணத்தை நண்பர்களிடமிருந்து கடனாகப் பெற, ஸ்டாலின் 2,50,000 ரூபாயை பெர்சனல் லோன் எடுத்து ரூ.4,50,000 முதலீட்டில் கடந்தாண்டு 'வாட் எ கருவாடு' கிளவுட் கிச்சனை தொடங்கியுள்ளனர் இருவரும்.
‘வாட் எ கர்வாட்’ உருவான கதையை மனோஜ் சூர்யா ஏற்கெனவே ஒருமுறை யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்திருந்தார். அப்போது அவர் கூறியதில் இருந்து...
"நானும், ஸ்டாலினும் ஃபேஸ்புக் நண்பர்கள். 2018-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஸ்டாலின் ப்ளம் கேக்குகளை விற்பதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தார். போஸ்ட் பாத்திட்டு அவரிடம் கேக் ஆர்டர் செய்தேன். கேக்கை அவரே டெலிவரி செய்தார். அது தான் எங்களது முதல் சந்திப்பு. அதன் பிறகு, ஃபேஸ்புக்கில் அவ்வப்போது மெசேஜ்ஜில் பேசியிருக்கிறோம். ஒரு முறை வீட்டில் மீன் சமைத்து சாப்பிட்டதை ஸ்டாலின் போஸ்ட் போட்டிருந்தார்.
'அடுத்தமுறை சமைக்கும் போது என்னையும் கூப்பிடுங்க'னு அந்த போஸ்டுக்கு கமெண்ட் பண்ணியிருந்தேன். அவரும் அதே மாதிரி கூப்பிட்டார். அப்போ, ருசியான மீனைச் சாப்பிட்டு கொண்டே நாம ஏன் இதை பிசினஸா பண்ணக் கூடாதுனு கேட்டேன். அப்படி ஆரம்பித்த உரையாடல் தான் இன்றைய ’வாட் எ கருவாட்’. உடனே, லாக்டவுண் வந்துவிட்டதால் பெரிசா இத பத்தி பேசிக்கல நாங்க. கடந்த ஆண்டு தான் ஐடியாவினை செயல்படுத்தத் தொடங்கினோம்” என்றார்.
ப்ரீ ஆர்டர் முறையில் வீக்கென்டில் மட்டும் முதலில் வாட் எ கருவாடின் மீன் குழம்பு சாப்பாட்டை ஹோம் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளனர். மீன் வாங்கி வருவது தொடங்கி பார்சலை வாடிக்கையாளர்களிடம் சென்றடைய வைப்பது வரை சகல வேலைகளையும் இருவரும் பகிர்ந்து செய்துள்ளனர்.
தொடங்கிய முதல் மாதத்திலே 150 பாக்ஸ் விற்பனையாகியுள்ளது. தொழில் தொடங்கிய 6 மாதத்திலே முதலீடாக பெற்றக் கடனை அடைத்து, மாதம் 500 பாக்ஸ்களை விற்பனை செய்து, மாதத்திற்கு ரூ.5,00,000 வருவாயும் ஈட்டி வந்தனர். ஓராண்டிலே மக்களின் வரவேற்பை பெற்று 'வாட் எ கருவாடு' நிலையான ப்ரான்ட்டாக உருவெடுக்கத் தொடங்கியது. இந்த முன்முயற்சி, தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது.
மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்
ஸ்டாலின் ஜேக்கப் ஒரு மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர். திமுகவின் சமூக வலைதளப் பிரிவிலும் இயங்கி வந்தவர். சமூக வலைதள பதிவுகள் சில ஜேக்கப் ஸ்டாலினின் பேரிழப்பை பறைசாற்றுவதாக உள்ளன. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதிச் சடங்கின்போது இவர் எடுத்த புகைப்படங்கள் பரவலாக கவனம் ஈர்த்தன.
“கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர், கொள்கை உறுதியோடு சமூக வலைத்தளங்களில் களமாடிய தம்பி ஸ்டாலின் ஜேக்கப்-ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரிழப்பு. குடும்பத்தினர் மற்றும் சமூக வலைத்தள உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதல்.உன் உழைப்பை என்றும் மறவோம்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.