‘Cancel Culture’ என்றால் என்ன? இதிலிருந்து ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் தப்பியது எப்படி?
சமூக ஊடகங்களில் ஒரு செலிபிரிட்டியை காலி செய்ய கூட்டாக மக்கள் பயன்படுத்துவதே ‘கேன்சன் கல்ச்சர்’. இதை பிரபலங்கள் எப்படி கையாண்டனர் என ஒரு அலசல்!
தமிழகத்தில் 2கே கிட்ஸின் விருப்பதுக்குரிய திரைக் கலைஞன் ஆகியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ‘கோமாளி’ மூலம் இளம் இயக்குநராக கவனம் ஈர்த்த பிரதீப், ‘லவ் டுடே’ மூலம் நடிகராகவும் ஈர்த்திருக்கிறார். குறிப்பாக, ‘லவ் டுடே’ கண்டுள்ள வெற்றியும், அப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் மலைக்கத்தக்கது என்றே சொல்லலாம்.
ஏனெனில், இணையத்தில் ‘கேன்சல் கல்ச்சர்’ (Cancel Culture) ரக தாக்குதல்களைத் தாண்டி அவர் வென்றிருப்பதும், வெற்றியாளராக வலம் வருவதும் இங்கே நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒன்று.
சரி, அதென்ன ‘கேன்சல் கல்ச்சர்...??
முதலில் சில பல உதாரண தரமானச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு, இதில் பிரதீப் ரங்கநாதன் மாட்டியது, தப்பியதன் காரணங்கள் குறித்து பிற்பகுதியில் அலசுவோம்.
2010-க்குப் பிறகுதான், மிகக் குறிப்பாக சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகுதான் ‘கேன்சல் கல்ச்சர்’ என்ற அணுகுமுறை அதிகரிக்கத் தொடக்கியது. இன்றைய காலக்கட்டத்தில் உலக அளவில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், குறிப்பாக படைப்பு, திரைத்துறை சார்ந்த பிரிவுகளின் நட்சத்திரங்களை அலறவிடும் முதன்மை விஷயம்தான் இந்த கேன்சல் கல்ச்சர்.
Cancel Culture என்றால் என்ன?
ஏதோ ஒரு செயலையோ, கருத்தை வெளிப்படுத்தியன் எதிர்வினையாக ஒருவரை அல்லது ஒரு நிறுவனத்தை அல்லது ஓர் அமைப்பை ஒட்டுமொத்த சமூகமோ அல்லது பெரும்பாலானோரோ வார்த்தைகளால் கழுவியூற்றி புறக்கணிப்பதுதான் ‘கேன்சல் கல்ச்சர்’.
அதாவது, சம்பந்தப்பட்டவரை சமூகம் ரத்து செய்கிறது. ‘உன்னை நாங்க கேன்சல் பண்றோம்’ என்கிறது போல். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், பஞ்சாயத்துத் தீர்ப்புகளில் ‘நீ பண்ண தப்புக்கு, உன்னை ஊரை விட்டு தள்ளி வைக்கிறோம். உன் கூட யாரும் அன்னந்தண்ணி புழங்கக் கூடாது’ என்று தமிழ் சினிமாவில் சொல்வதைக் கேட்டிருப்போமே, அதுபோலதான் இந்த ‘கேன்சல் கல்ச்சர்’. இது அரங்கேற்றப்படும் இடம்தான் இணையம் - குறிப்பாக, சமூக வலைதளங்கள்.
கேன்சல் கல்ச்சருக்கு இலக்கான பிரபலங்களில் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க உதாரணம் என்றால், அவர் ‘ஹாரி பாட்டர்’ எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் தான். மூன்றாம் பாலினத்தவர் குறித்து அவர் வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கருத்துக்காகவே சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. சமூக வலைதளத்தில் கேன்சல் கல்ச்சரால் ‘சம்பவம்’ செய்யப்பட்டார்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை
இந்தியாவிலும் ‘கேன்சல் கல்ச்சர்’ என்ற டேர்ம் பயன்படுத்தாமலேயே சமூக வலைதளங்களில் இம்முறை வலுவான வேரூன்றி வருவதை அண்மை ஆண்டுகளாக கவனிக்க முடிகிறது.
2015-ல் 'நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது' என ஆமீர்கான் பேசியதற்காக, அந்தப் படத்தை புறக்கணிக்க வலியுறுத்தி ‘#BoycottLaalSinghChaddha' என்ற இயக்கமே நடந்தது. அதன் விளைவால் அப்படம் ஃப்ளாப் ஆனது.
இவரோடு இது நிற்கவில்லை. அக்ஷய் குமார் முதல் கங்கானா ரணவத் வரை பலரும் தாக்கப்பட்டனர். ‘பாய்காட் பாலிவுட்’ என்பது ஓர் இயக்கமாக பல நட்சத்திரங்களின் கரியரை டரியலாக்கியது. எதற்கோ, எப்போதோ சொன்ன கருத்துகள் எல்லாம் அகழாய்வு செய்யப்பட்டு, அந்தக் கருத்துகளுக்காக, பழைய செயல்பாடுகளுக்காக புதிய விளைவுகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தது.
தமிழ் சினிமாவிலும் உதாரணங்கள் உள்ளன. #MeToo இயக்கம் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் கவிஞர் வைரமுத்து. அவருக்கு எதிராக ஒரு தரப்பினரால் சமூக வலைதளங்களில் கருத்துகள் கொட்டப்பட்டு ட்ரெண்ட் ஆனார். அதன்பின், அவரது திரைத் துறை கரியரே மூழ்கியது. அந்த சர்ச்சையில் அவர் சிக்கவில்லை என்றால், ‘பொன்னியின் செல்வன்’ ப்ராஜக்டில் அவர் தவிர்க்க முடியாத ஒருவராகத் திகழ்ந்திருக்கக் கூடும். ஆக, வைரமுத்துவை வெளுத்து வாங்கியதும் கேன்சல் கல்ச்சரின் ஒரு முக்கிய வடிவம்தான்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக அறிமுகமான படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் தன்னை உச்ச நட்சத்திரம்போல காட்டிக்கொண்ட விதமும், பேசிய விஷயங்களும் சமூக வலைதளங்களில் பலரது கலாய்ப்புக்கும், கடுப்புக்கும் காரணமானது.
குறிப்பாக, “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று அவர் பேசியது ‘கன்டென்ட்’ ஆனது. சமூக வலைதளத்தில் வைத்துச் செய்யப்பட்டதன் விளைவின் தாக்கத்தை இன்று வரை அஸ்வின் அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடும். இதுகூட கேன்சல் கல்ச்சர் வடிவம்தான்.
’லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் தப்பியது எப்படி?
இதன் நீட்சியாகவே ‘ல்வ டுடே’ பிரதீப் ரங்கநாதனும் கேன்சல் கல்ச்சர் வடிவத்தில் குறிவைக்கப்பட்டார். ஆனால், அந்தக் குறியில் இருந்து அவரால் எளிதில் தப்ப முடிந்திருக்கிறது.
‘லவ் டுடே’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அளித்த வீடியோ பேட்டி ஒன்றின் க்ளிப் வைரல் ஆனது. அதில், ‘ஸ்ட்ரிக்டான தந்தை என்பதை வெளிப்படுத்த நெற்றியில் ஒரு கோடு இட்டால் போதும்’ என்றும் தாம் கண்டறிந்த குறியீட்டை, படத்தில் தான் பயன்படுத்திய குறியீடு குறித்து கூறியிருந்தார். அது, சாதி சார்ந்த அடையாள அரசியலாக சர்ச்சை ஆனது. அந்தக் கருத்துக்கு எதிராக முற்போக்குவாதிகள் கொந்தளித்தனர். ‘சங்கி’ என்ற அடைமொழியும் அவர் மீது குத்தப்பட்டது.
இந்த எதிர்ப்பலையின் எதிரொலியாக, படம் வெளியான பிறகு இன்னும் நிறைய வைத்துச் செய்யப்படுவார் என்றுதான் சமூக வலைதளங்களி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.
படம் செம்ம ஹிட். 2கே கிட்ஸ் கும்பல் கும்பலாக குவிந்து படத்தைக் கொண்டாடத் தொடங்கினர். இன்ஸ்டா முழுவதுமே ‘லவ் டுடே’ பேச்சுதான்.
படம் பேசும் விஷயம், படம் சொல்லும் கருத்தியல் பற்றி எல்லாம் இங்கே எதுவும் பேசவில்லை. அது தனி ஏரியா. ஆனால், பல்வேறு காரணங்களால் 2கே கிட்ஸுக்கு பிடித்துப் போன இப்படம், முதலீட்டை விட பல மடங்கு கோடிகளை வசூல் செய்து, 2022-ன் மெகா ஹிட் தமிழ்ப் படங்களில் ஒன்றாகவிட்டது நிஜம்.
இதனிடையேதான், பிரதீப் ரங்கநாதனின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அவரது பழைய போஸ்டுகள் அகழாய்வு செய்யப்பட்டன. பல போஸ்டுகளின் ஸ்க்ரீன் ஷாட் வைரலாகின. அவை அனைத்துமே அபத்தமான பதிவுகளாக இருந்தன. குறிப்பாக,
ஜாம்பவன்களான சச்சின், யுவன் போன்றோரையெல்லாம் கொச்சையாக விமர்சிப்பதாகவும் அந்தப் பதிவுகள் இருந்தன. மீண்டும் ஒரு தரப்பினர் பிரதீப் மீது சமூக வலைதளங்களில் பாயத் தொடங்கியது.
ஆனால், இளம் தலைமுறையில் பலரும் பிரதீப்புக்கு ஆதரவாகவே இருந்தனர்.
‘பிரதீப் ஓர் இளம் கலைஞர். அவர் தனது ஆரம்ப காலங்களில் சரியான புரிதல்கள் இல்லாமல் போகிற போக்கில் முதிர்ச்சியற்ற பதிவுகளை இட்டிருக்கலாம். காலமும் அனுபவமும் அவரை அடுத்த லெவலுக்கு மாற்றியிருக்கிறது. எனவே, பழசை இப்போது கிளறுவது சரியல்ல...’ எனும் விதமாகவும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது.
இதற்கு ஏற்றார்போல் ரொம்பவே சாதுர்யமான ஒரு விளக்கத்தை அளித்திருந்தார் பிரதீப்.
“தற்போது பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு சொல்லை மாற்றினாலும் மொத்த அர்த்தமும் மாறுகிறது. இந்த வேலையைச் செய்தவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. மாறாக, அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் தான் என் மீது நேசம் கொண்டவர்களை எனக்கு இப்போது காட்டி இருக்கிறார்கள்,” என்று ஆதரவாளர்களை ஆரத் தழுவினார் பிரதீப்.
அத்துடன், “ஆம், சில பதிவுகள் உண்மைதான். ஆனால், கொச்சை வார்த்தைகளோடு உள்ள பதிவுகள் போலியானவை. நான் தவறுகள் செய்திருக்கிறேன். நாம் வளர்கிறோம். கற்றுக் கொள்கிறோம். நான் அவற்றை சரிசெய்ய முயற்சி செய்து கொண்டிருறேன். இப்போதும் ஒரு நல்ல மனிதராக இருக்க தினமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்...” என்று அவர் அளித்த விளக்கம்தான் முதிர்ச்சியின் வெளிப்பாடாக மாறியது.
இயல்பிலேயே தன்னடக்கம் மிகுந்தவராக வெளிப்படுத்திக் கொள்ளும் பிரதீப் ரங்கநாதனை இந்தத் தலைமுறையினருக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது. இதனால்தான் தன்னை நோக்கி வீசப்பட்ட ‘கேன்சல் கல்ச்சர்’ வடிவ அம்புகளில் இருந்து அவரால் எளிதில் தப்ப முடிந்தது.
எந்த நட்சத்திரமாக இருந்தாலும் திறமையுடன் கூடிய ‘அணுகுமுறை’தான் ‘கேன்சல் கல்ச்சர்’ யுகத்தில் பேராயுதம் என்பதை நிரூபித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
‘நாம் இருவர்... நமக்குப் பலர்...’ ஈர்ப்பு அதிகரிக்கும் ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ - என்றால் என்ன?
Edited by Induja Raghunathan