‘நாம் இருவர்... நமக்குப் பலர்...’ ஈர்ப்பு அதிகரிக்கும் ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ - என்றால் என்ன?
ஓபன் ரிலேஷன்ஷிப் என்னும் கான்செப்ட் 80களிலேயே வந்துவிட்டாலும் ‘ஒருவருக்கு ஒருவர்’ (monogamy) என்னும் முறைதான் உலக அளவில் பரவலாக ஏற்கத்தக்க ஒன்றாக இருப்பதால், இந்த முறை பலரால் ஏற்கப்படவில்லை. Open Relationship என்றால் என்ன? விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த சாரா எனும் பெண் தன் கணவர் மற்றும் காதலருடன் ஒரே வீட்டில் வசிப்பது தொடர்பான செய்திகள் சமீபத்தில் இணையத்தில் பேசப்பட்டது. குறிப்பாக, நம் சமூகத்தில் அந்தச் செய்தியான ஒருவித அதிர்ச்சித் தன்மையான தாக்கத்தை ஏற்படுத்தியதையே காண முடிந்தது.
இன்னொரு பக்கம், அந்த உறவை மலிவாக்கும் மீம்களும் பதியப்பட்டன. இந்தியா போன்ற நாடுகளில் ‘ஓபன் மேரேஜ்’ (Open Marriage), ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ (Open Relationship) முதலானவை பற்றிய அறிதல் இல்லாததே இதற்குக் காரணம் எனலாம்.
Open Relationship என்றால் என்ன?
காலம் மாறும்போது கலாச்சாரமும் மாறும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஒரு சில நாடுகளில் உருவாகும் சில கலாச்சார போக்குகள் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதை எல்லா தலைமுறையிலும் பார்த்து வருகிறோம். வாழ்வியலில் அப்படி ஓர் அதிர்வுக்குரிய போக்காக பார்க்கப்படுகிறது ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ (open relationship) என்னும் கான்செப்ட். காதலர்கள், இணையருக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத திறந்த புத்தகம் போன்ற அணுகுமுறை என்பதால் இதை தமிழில் ‘திறப்புறவு’ என்று வைத்துக்கொள்வோம்.
ஒருவருக்கு ஒருவர் ஒளிவு மறைவின்றி வாழ்தல் இனிதுதானே என்று நம்மில் பலரும் கருதலாம். ஆம், அது இனிதுதான். ஆனால், இந்த ஓபன் ரிலேஷன்ஷிப் முறையைப் பொறுத்தவரையில், ஒளிவு மறைவின் எல்லை வேற லெவலானது. ஆம், உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் தங்களுக்குப் பிடித்த வேறு நபர்களுடன் உடலளவிலும் உளபூர்வமாகவும் உறவு வைத்துக்கொள்ளல்லாம் என்பதே இங்கு ‘ஹைலைட்’.
ஓபன் ரிலேஷன்ஷிப் என்னும் கான்செப்ட் 80களிலேயே வந்துவிட்டாலும் ‘ஒருவருக்கு ஒருவர்’ (monogamy) என்னும் முறைதான் உலக அளவில் பரவலாக ஏற்கத்தக்க ஒன்றாக இருப்பதால், இந்த ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ முறை என்பது பெரும்பாலானோரால் ஏற்கப்படவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக - அதுவும் குறிப்பாக கொரோனா காலத்துக்குப் பின்பு அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ மீதான ஈர்ப்பும் ஈடுபாடும் மக்களிடையே அதிகரித்து வருவதாக சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ப்ரைம் பார்ட்னர்!
‘காதல் என்பது ஒருமுறைதான் பூக்கும்’, ‘காதல் என்பது ஒரே நேரத்தில் ஒருவருடன் மட்டும்தான்’ என்பன போன்ற க்ளிஷேக்களை எல்லாம் கிள்ளி எறியத்தக்கதே இந்த ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’.
இதில், இருவர் ‘ப்ரைம் பார்ட்னர்’ (Prime Partner) ஆக இருப்பர். இருவரும் உடலும் உள்ளமும் கலந்திருப்பர். ஆனால், இருவரும் தங்கள் ப்ரைம் பாட்ர்ட்னரைத் தவிர, வெளியே தங்களுக்குப் பிடித்த யாருடன் வேண்டுமானாலும் தற்காலிக உறவில் இருக்கலாம். இருவருக்குள் யாரும் யாரையும் அதுபற்றி கேள்வி கேட்கக் கூடாது. தங்கள் மனசுக்குப் பிடித்த யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்தபடியே இங்கே ப்ரைம் பார்ட்னர் இருவருக்குள்ளும் உறவு வழக்கம்போல் வலுவாகவே இருக்கும். மிகவும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால்... “நாம் இருவர்... நமக்குப் பலர்!”
இதை தயவு செய்து கொச்சையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த உறவும் மேன்மையாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்த உளவியல் ரீதியில் பல்வேறு ஆய்வுகளும், கருத்துக்கணிப்புகளும் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.
காதலும் அன்பும் ஒரே நேரத்தில் ஒருவர் மீது மட்டும்தான் வரக் கூடியதா என்ன?
நமக்குப் பிடித்த வெவ்வேறு நபர்களுடன் உறவில் இருப்பதன் மூலம் அக வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் வேண்டியதைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்தானே?
பல்வேறு தேவைகளின் காரணமாக இணையருக்குத் தெரியாமல் வெளியே ரகசிய துணையை நிர்வகிப்பதைவிட, இப்படி ஓபன் ஆக இருந்து தேவைக்கேற்ப துணைகளை நாடுவது நேர்மைதானா?
- இப்படி பல கேள்விகளுக்கு பதிலாகவே ‘ஓபன் ரிலேஷன்ஷிப்’, ‘ஓபன் மேரேஜ்’ பார்க்கப்படுகிறது.
OkCupid daters ஆப்பில் ஒரு கேள்வி: நீங்கள் ஒரு ஓபன் ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்ள விருப்பமா?
இதற்கு 10 லட்சம் பேர் பதிலளித்துள்ளனர். அதில், 31 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்துள்ளன. இதே கருத்துக் கணிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தபோது ‘ஆம்’ என்று விருப்பம் தெரிவித்தோரின் எண்ணிக்கை 26% என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம், கொரோனா பேரிடரின் தாக்கம்தான் என்கின்றனர் உளவியலாளர்கள்.
ஓபன் ரிலேஷன்ஷிப் - சாதகங்கள்:
> ஆழமான உறவு: நம் மனதில் தோன்றுவதை அப்படியே சென்சாரின்றி ப்ரைமரி பார்ட்னருடன் பகிர்ந்துகொள்வது அந்த உறைவை மிக மிக ஆழமானதாக்கும்.
> எதிர்பார்ப்புகள்: ப்ரைம் பார்ட்னரிடம் நம் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழலில், ஓபன் ரிலேஷன்ஷிப்பில் வேறு நபர்கள் மூலம் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
> துரோகத்துக்கு இடமில்லை: இங்கே எல்லாமே ஓபனாக நடப்பதால், துரோகம் செய்வது என்பதற்கு இடமே இல்லை. ரிலேஷன்ஷிப் சீட்டிங்கில் வரக் கூடிய மனநல பிரச்சினைகளுக்கும் இங்கே இடமில்லை.
> உறவுகள் தொடர்கதை: நாம் இருவர், நமக்குப் பலர் என்கிற வழியில், இந்த வாழ்க்கையில் நமக்கான பலரது உறுதுணை கிடைக்கும். அது பல நேரங்களில் மன ரீதியிலும், பண ரீதியிலும் கூட சப்போர்ட்டாக இருக்கக் கூடும். உறவுகள் என்றாலே வலிமைதானே.
> இன்பமும் இன்பம் நிமித்தமும்: மனதளவில் எந்த விதமான பாரமுமின்றி வாழ்க்கையை எஞ்சாய் செய்வதற்கான பாதைகள் இங்கே விரிக்கப்படுகின்றன. எப்போதும் எங்கேயும் சந்தோஷத்துடன் திளைக்கும் சூழல் இங்கே அதிகம்.
ஓபன் ரிலேஷன்ஷிப் எளிதானது அல்ல... ஏன்?
‘ஓபன் ரிலேஷன்ஷிப்’ என்பது வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கத்தக்க ஒரு ஃபான்டஸி வாழ்வியல் போன்ற தோற்றம் தந்தாலும், அந்த உறவுமுறைக்கு உகந்தபடி நம் மனத்தை தயார்படுத்திக்கொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல.
> அச்சமும் கவலையும்: ‘நமக்கே நமக்கானவர் இல்லை’ என்பது தெளிவான உண்மை என்பதால் எப்போதும் ஒருவித அச்சமும் பயமும் நம்மை தொற்றிக்கொள்ள வாய்ப்புண்டு.
> பொறாமை: பொறாமை குணமும், ஒருவித பாதுகாப்பற்ற உணர்வும் மேலோங்க வாய்ப்பு அதிகம். நாம்தான் ப்ரைம் பார்ட்னர் என்றாலும், நம் ப்ரைம் பார்ட்னர் உறவில் ஈடுபடும் நபர் எல்லா விதத்திலும் மேலானவராக இருந்துவிட்டால், நம்மை நம் பார்ட்னர் அதிகம் கண்டுகொள்ளாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற பொறாமை குணம் மேலோங்க வாய்ப்புண்டு. அதனால், எப்போதுமே ஒருவித இன்செக்யூர் ஃபீலிங்குடன் வலம் வர வேண்டி வரலாம்.
> எதிர்பார்ப்புகள்: ஓபன் ரிலேஷன்ஷிப்பில் சாதகமும், பாதகமும் இந்த எதிர்பார்ப்புகள்தான். எதிர்பார்ப்புகள் எக்கச்சகமாகவும், எடாகூடமாகவும் ஆகும்போது வாழ்க்கையை பேலன்ஸ் செய்வது இயலாத ஒன்றாகும்.
> மன அழுத்தம்: ஏதோ ஒரு ஃபோர்ஸில் ஓபன் ரிலேஷன்ஷிப்பில் இணைந்துவிட்டு, இந்த உறவுக்கு நம் குணநலன்கள் சரிவர ஒத்துப்போகவில்லை எனில், அதனால் ஏற்படும் மன அழுத்தமும் மனநல பாதிப்பும் எளிதில் தீர்க்கப்படாத ஒன்றாகிவிடும்.
> முன்னுரிமை பிரச்சினை: ப்ரைம் பார்ட்னரான தனக்கு முன்னுரிமை தரவில்லை என்றாலோ, நம் பார்ட்னருக்கு நம்மால் முன்னுரிமை தராமல் போய்விட்டாலோ... நிலைமை அதோகதிதான்.
> செலவு அதிகம்! - இது மிக முக்கியp பிரச்சினை. ஓபன் ரிலேஷன்ஷிப் என்பது அதிகம் செலவு வைக்கத்தக்கது. உறவுகள் கூடினால் செலவும் கூடும். எனவேதான் ஓபன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பலரும் பிரபலங்களாகவும், பொருளாதார ரீதியில் எலைட் மக்களாகவும் இருப்பதை கவனிக்கலாம்.
இந்த சாதக, பாதகங்களை எல்லாம் தாண்டி, நல்ல பக்குவ மனநிலையுடன் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடனும் பேரன்புடனும் சேர்ந்திருக்கும் பட்சத்தில், இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்ற சாராவை போல ஓபன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்க்கையைக் கொண்டாடலாம்.
பணியிடத்தில் ரொமான்ஸ் செய்பவரா நீங்கள்? - உங்கள் கவனத்துக்கு 4 விஷயங்கள்