Explainer - டிஜிட்டல் வங்கி யூனிட் என்றால் என்ன? பயனர்கள் எப்படி பெறலாம்?
மத்திய அரசின் முன்னோடி திட்டங்களில் இது ஒன்று. இது தொடர்பாக 2022-23 மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
அண்மையில் நாட்டு மக்கள் பலன் அடையும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி யூனிட்களை பிரதமர் மோடி அர்பணித்து இருந்தார். காஷ்மீர் தொடங்கி தமிழகம் வரை இந்த டிஜிட்டல் வங்கி யூனிட்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் மூலம் மக்கள்/பயனர்கள் என்னென்ன மாதிரியான வங்கி சார்ந்த சேவைகளை பெற முடியும் என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் வங்கி சார்ந்த சேவைகள் கடந்த 18-ம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்து வருவதாக வரலாறு சொல்கிறது. நாட்டின் விடுதலைக்கு பின்னர் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு உள்ளன. அப்படியே படிப்படியாக வங்கிகளின் சேவை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை பெற்று இப்போது டிஜிட்டல் வங்கி யூனிட்களாக மாற்றம் பெற்றுள்ளன.
டிஜிட்டல் வங்கி யூனிட் என்றால் என்ன?
இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் மிகவும் ஸ்மார்ட்டாக வங்கி சார்ந்த சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் டிஜிட்டல் வங்கி யூனிட்கள் ஏன் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், ஸ்மார்ட்போன் பேங்கிங் முறையில் கிடைக்கும் மற்றும் கிடைக்காத சில பிரத்யேக சேவைகளை டிஜிட்டல் வங்கி யூனிட்கள் மூலம் பயனர்கள் பெறலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களில் இது ஒன்று. இது தொடர்பாக 2022-23 மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நாட்டின் 75வது சுதந்திர தின திருநாளை போற்றும் விதமாக 75 மாவட்டங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இப்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விர்ச்சுவல் முறையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைத்திருந்தார்.
நாட்டின் மூலை முடுக்கில் வசிக்கும் மக்களும் வங்கி சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த டிஜிட்டல் வங்கி யூனிட்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறிய நிதி வங்கி ஒன்றும் இந்த பணியில் இணைந்துள்ளன.
வங்கிக் கணக்கு தொடங்க, அக்கவுண்ட் பேலன்ஸ் விவரத்தை சரிபார்க்க, பாஸ்புக் பிரிண்ட் செய்ய, ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்ய, ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு, கடனுக்கான விண்ணப்பம் பெற, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பம் பெற என பல்வேறு வசதிகளை டிஜிட்டல் வங்கி யூனிட் மூலம் பயனர்கள் பெறலாம்.
இது எப்படி செயல்படுகிறது?
தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ மொத்தம் நான்கு டிஜிட்டல் வங்கி யூனிட்களை நிறுவியுள்ளன. இதில் ஒன்று தமிழகத்தின் கரூரில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல். புதுச்சேரியிலும் அந்த வங்கி சார்பில் டிஜிட்டல் வங்கி யூனிட் தொடங்கப்பட்டுள்ளது.
செல்ஃப் சர்வீஸ் மற்றும் டிஜிட்டல் அசிஸ்ட்டன்ஸ் என இரண்டு விதமாக தங்கள் வங்கியின் சார்பில் இந்த டிஜிட்டல் வங்கி யூனிட்கள் இயங்கி வருவதாக ஐசிஐசிஐ வங்கி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
செல்ஃப் சர்வீஸ் பிரிவில் ஏடிஎம் இயந்திரம், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் மற்றும் பல்வேறு வங்கி சேவை பயன்பாடுகளுக்கான கியாஸ்க் ஒன்றும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மொபைல் பேங்கிங் செயலிகளில் பெறும் சேவைகளை பயனர்களால் டிஜி பேங்க் கியாஸ்க் மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24x7 என இந்த சேவை பிரிவு இருக்குமாம். இதில் வாடிக்கையாளர்களுக்கு உதவ சாட்பாட் வசதியும் உள்ளதாம்.
மறுபக்கம் டிஜிட்டல் அசிஸ்ட்டன்ஸ் பிரிவில் பயனர்களுக்கு உதவ வங்கிக் கிளையின் அலுவலர்கள் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு பணிகளை மேற்கொள்ள இவர்கள் பயனர்களுக்கு உதவுவார்கள் என ஐசிஐசிஐ வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஆதார் கார்டு கே.ஒய்.சி அடிப்படையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் அறிமுகப்படுத்திய கிரெடிட் கார்ட் - பயன்கள் என்ன? எப்படிப் பெறுவது?
Edited by Induja Raghunathan