YS தமிழ் Explainer - டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? அறிந்ததும்; அறியாததும்!
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?, இதை எப்படி பயன்படுத்துவது, இதற்கும் கிரிப்டோ கரன்சிகளுக்கும் என்ன வேறுபாடு உட்பட அனைத்து விவரங்களையும் விரிவாக பார்ப்போம்.
கடந்த 1ம் தேதி இந்தியாவில் 'டிஜிட்டல் ரூபாய்' 'Digital Rupee' அறிமுகம் செய்யப்பட்டது. இதனை இந்திய ரிசர்வ் வங்கி முன்னோடித் திட்டமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முயற்சி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?
இதை எப்படி பயன்படுத்துவது, இதற்கும் கிரிப்டோகரன்சிகளுக்கும் என்ன வேறுபாடு உட்பட அனைத்து விவரங்களையும் விரிவாகப் பார்ப்போம்.
இப்போதைக்கு இந்தியாவில் இயங்கி வரும் சுமார் ஒன்பது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கும் இடையிலான பரிவர்த்தனை தொடர்பான பணிகளுக்கு மட்டுமே டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை மற்றும் மொத்த விற்பனைப் பிரிவில் இது செயல்படும் எனத் தெரிகிறது. ஆனால், இப்போதைக்கு ஹோல்சேல் பயன்பாட்டுக்கு மட்டுமே வந்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி?
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளை அந்த நாட்டின் மத்திய வங்கி அச்சிட்டு வெளியிடும். அதோடு அதனை நிர்வகிக்கும் பணியையும் கவனிக்கும். தொழில்நுட்பம் வளர வளர கரன்சிகள் எலக்ட்ரானிக் மயமாகின.
கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் நமது சம்பளப் பணத்தை கையில் பெற்று வந்தோம். ஆனால், எலக்ட்ரானிக் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அது இப்போது நேரடியாக வங்கிக் கணக்கில் வரவாக (கிரேடிட்) வைக்கப்படுகிறது. நமக்குத் தேவை இருந்தால் ஏடிஎம் மூலம் அதனை பணமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில், அது நமது வங்கிக் கணக்கில் ரெக்கார்டாக இருக்கும். இதனை ’எலக்ட்ரானிக் கரன்சி’ எனச் சொல்வார்கள். பெரும்பாலான நாடுகளில் இது செயல்பாட்டில் உள்ளது.
ஆனால், டிஜிட்டல் கரன்சி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
இதனை முற்றிலும் டிஜிட்டல் முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒருபோதும் ரொக்கமாக கைகளில் பெற முடியாது. இதன் இயக்கம் அனைத்தும் இணையத்தின் ஊடாக மின்னணு சாதனங்களை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்.
கிரிப்டோகரன்சி, சிபிடிசி (Central Bank Digital Currency) என இரண்டுமே டிஜிட்டல் கரன்சி வகையை சார்ந்தது. தற்போது இந்தியாவில் சிபிடிசி-யை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாய் நோட்டு மற்றும் நாணயத்திற்கு இணையான அதே மதிப்பை இவை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மின்னணு முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும். டிஜிட்டல் ரூபாய் / இ-ரூபாய் என இப்போதைக்கு இது அறியப்படுகிறது.
உலக அளவில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இது வலு சேர்க்கும் எனவும் வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிரிப்டோகரன்சி மற்றும் சிபிடிசி வேறுபாடு என்ன?
இரண்டுமே டிஜிட்டல் கரன்சி வகையை சார்ந்ததுதான். ஆனால் அதன் செயல்பாட்டில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோகரன்சி பயன்பாடு குறித்து பேச்சு அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதனை சிலர் முதலீடு ரீதியாவும் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
பிட்காயின், எத்திரியம் என பல்வேறு வகையில் இயங்கி வரும் கிரிப்டோகரன்சி செயல்பாட்டை எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியும் நேரடியாக நிர்வகிப்பது இல்லை. அதனால் இதில் மறைமுக ஆதாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதன் செயல்பாடு அனைத்தும் மின்னணு முறையில் இருக்கும். தனிப்பட்ட நபர்கள் மற்றும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் இதனை நிர்வகிக்கும். ஒரு கிரிபட்டோகரன்சியின் உரிமையாளர் யார் என்பதை அதன் ரெக்கார்டுகள் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
ஆனால், சிபிடிசி அதற்கு நேர் மாறான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை கரன்சி நோட்டுகளை வெளியிடும் மத்திய வங்கிகள் நேரடியாக நிர்வகிக்கும். ஒரு நாட்டின் கரன்சி மற்றும் நாணயங்களுக்கு இணையான அதே மதிப்பை இந்த டிஜிட்டல் கரன்சியும் கொண்டிருக்கும்.
அதற்கான ரெக்கார்டுகள் அனைத்தும் பயனர்கள் இடத்தில் இருக்கும். அதனால் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட இயக்கத்திற்கு உத்தரவாதம் இருக்கும் எனத் தெரிகிறது.
தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் ரூபாய்க்கான மதிப்பு இந்திய ரூபாய் நோட்டு மற்றும் நாணயத்திற்கு இணையான அதே மதிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்னணு முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
யுபிஐ ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதே?
யுபிஐ நமது வங்கியில் மின்னணு முறையில் எலக்ட்ரானிக் வடிவில் உள்ள பணத்தை பயன்படுத்தி மற்றொரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப் பயன்படுகிறது. ஆனால், டிஜிட்டல் ரூபாயை இதற்கென உள்ள வாலெட்டில் இருந்து அடுத்தவரின் வாலெட்டிற்கு பயனர்களால் அனுப்ப முடியும்.
இது போன்பெ அல்லது பேடிஎம் போன்ற வாலெட்டுகளில் இருந்து அடுத்தவர்கள் வாலெட்டிற்கு அனுப்புவது போல இயங்கும் எனச் சொல்லப்படுகிறது.
தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ள ரூபாயின் வடிவங்களுக்கு டிஜிட்டல் ரூபாய் கூடுதல் ஆப்ஷனாக மக்களுக்கு பயன்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இது சில்லறை பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே இதன் முழு பயன்பாடு குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
YS தமிழ் Explainer - 'டிஜிட்டல் கோல்ட்' என்றால் என்ன? சாதக-பாதகங்கள் இதோ!
Edited by Induja Raghunathan